Published : 01 Jul 2023 03:50 PM
Last Updated : 01 Jul 2023 03:50 PM
பாரிஸ்: பிரான்ஸின் நான்டெரி பகுதியில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மஞ்சள் நிற காரை அல்ஜீரிய வம்சாவளியை சேர்ந்த 17 வயதான நயில் என்ற சிறுவன் ஓட்டி வந்துள்ளார். அச்சிறுவனை இரு போலீஸார் தடுத்து நிறுத்தினர். சிறுவனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் சிறுவனுடன் போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இறுதியில் சிறுவனை துப்பாக்கிக் காட்டி போலீஸார் மிரட்டியுள்ளனர். இதில் அச்சம் கொண்ட சிறுவன் காரை ஓட்ட முற்படுகிறார். உடனே சிறுவனின் தலையில் போலீஸார் சுடுகின்றனர். இதில் சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து பாரிஸின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.
இச்சம்பவம் தொடர்பாக இரு போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் போலீஸார் தங்கள் மீது சிறுவன் காரைக் கொண்டு மோதியதால் சுட்டதாக தெரிவித்தனர். ஆனால், வீடியோ மூலம் போலீஸார் தான் சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் போலீஸார் ஒருவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்படுள்ளது.
இந்த நிலையில், நயிலின் மரணத்துக்கு நீதி வேண்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ், நான்டெரி உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையில்தான் “ஆப்பிரிக்காவுக்குத் திரும்புங்கள்...” என பிரான்ஸ் போலீஸார் குரல் எழுப்பும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இனவெறிக்கு எதிரான போராட்டம்: நயிலின் மரணத்துக்கு நியாயம் வேண்டி தொடங்கப்பட்ட போராட்டம் சில நாட்களில் பிரான்ஸ் போலீஸாரிடம் நிலவும் இன வெறிக்கு எதிரான எதிர்வினையாக மாறி இருக்கிறது. போராட்டத்தின் நீட்சியாக பிரான்ஸில் இளைஞர்கள் இறங்கி தீவிர வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளை உடைத்தும், துப்பாக்கிகளை சூறையாடிய நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறியுள்ளன.
மறுபக்கம் இந்தப் போராட்டங்களை புலம்பெயர்ந்த மக்கள்தான் நடத்துகின்றனர் என பிரான்ஸின் தேசியவாதிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக பிரான்ஸ் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
போராட்டம் குறித்து யாஸ்மினா என்பவர் கூறும்போது, “நான் பிரான்ஸ் போலீஸை முற்றிலுமாக வெறுக்கிறேன். அவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று நினைக்கிறேன். அவர்களது மொத்த அமைப்பிலும் கறை படிந்துள்ளது. இனவாத கருத்தாக்கத்தை அவர்கள் கொண்டுள்ளனர். நயிலின் மரணம் என்னை உலுக்கியுள்ளது. அவர் மரணத்துக்கு தகுதியானவர் அல்ல...” என்று கூறினார்.
கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரக்காரர்களால் பிரான்ஸின் அரசு கட்டிங்கள் பல தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதாகவும், ஏராளமான போலீஸார் காயம் அடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், கலவரத்தை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பெற்றோர் தங்களின் பிள்ளைகளை தெருவில் இறங்கிப் போராடாதவாறு கண்காணிக்கும்படியும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கோரிக்கை வைத்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT