Published : 01 Jul 2023 12:12 PM
Last Updated : 01 Jul 2023 12:12 PM

Revenge for Nahel - 4வது நாளாக பற்றி எரியும் பிரான்ஸ்: பெற்றோர்களுக்கு அதிபர் மேக்ரான் கோரிக்கை

பாரிஸ்: பிரான்சில் 17 வயது இளைஞர் போக்குவரத்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாரிஸ் நகரின் பல இடங்களில் காவல்துறையினர் மற்றும் ஆர்ப்பாட்டக்கார்களிடையே மூண்ட மோதல் 4வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை தெருவில் இறங்கிப் போராடாதவாறு கண்காணிக்கும்படி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கோரியுள்ளார். கூடவே சமூகவலைதளங்கள் வன்முறைக்கு தூபம் போடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

துப்பாக்கிச் சூடும்; வைரல் வீடியோவும்: பாரிஸ் புறநகரான நான்டெரி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த நயில் என்ற 17 வயது இளைஞர் காவல் துறையின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்ததில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து பாரிஸின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைதிக்காக்குமாறு போராட்டக்காரர்களுக்கு பிரான்ஸ் அதிபர் அழைப்பு விடுத்தும் பல இடங்களில் 4 நாட்களாக வன்முறை நடைபெறுகிறது. நயிலுக்காகப் பழிவாங்குவோம் (Revenge for Nahel) என்னும் பதாகைகள் போராட்டக்களங்களில் காணப்படுகின்றன. இந்நிலையில், பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் வெள்ளிக்கிழமை இரவு கூறுகையில், "முந்தைய நாட்களோடு ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமை பதற்றம் சற்று தணிந்தே காணப்பட்டது. இதுவரை 471 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

துப்பாக்கிகளை திருடிச் சென்ற கலவரக்காரர்கள்: இதற்கிடையில் கலவரக்காரர்கள் சிலர் மர்சேய் பகுதியில் இருந்த ஒரு துப்பாக்கி கடையை நேற்றிரவு சூறையாடினர். பலரும் அங்கிருந்து துப்பாக்கிகளை திருடிச் சென்றனர். வேட்டைத் துப்பாக்கியை திருடிச் சென்றபோது கலவரக்காரர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். பிரான்ஸின் இரண்டாவது பெரிய நகரமான மர்சேய் கலவரத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கே போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் அங்கு 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிபர் கண்டனம்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், "சிறுவன் கொலையைப் பயன்படுத்திக் கொண்டு கலவரக்காரர்கள் சூறையாடுகின்றனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் வீதிகளில் இறங்கி போராடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சமூகவலைதளங்கள் வன்முறையைத் தூண்டுவதுபோல் உள்ளன. சில பதிவுகளை நீக்கும்படி சில சமூக வலைதளங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். இதற்கிடையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் மேக்ரோனை தொடர்பு கொண்டு பிரான்ஸ் கலவரம் பற்றிக் கேட்டறிந்தார்.

சனிக்கிழமை நயிலின் உடல் அடக்கம் செய்யப்படும் சூழலில் அவரது குடும்பத்தார் தங்கள் குடும்பத்தினரின் துக்கமான சூழலைப் புரிந்துகொண்டு பொதுமக்களும், ஊடகங்களும் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகியிருக்குமாறு கோரியுள்ளனர். நயில் இறுதி ஊர்வலம் பற்றிய செய்திகளை ஊடகங்கள் நேரலை செய்ய வேண்டாம்; அவரது குடும்பத்தாரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று காவல்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.

எல்டன் ஜான் கான்செர்ட்: பிரான்ஸில் 4வது நாளாக கலவரம் நடந்து கொண்டிருக்க அதிபர் மேக்ரான் பிரிட்டிஷ் பாடகர் எல்டன் ஜான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பாரிஸின் அக்கார் அரீனாவில் நடந்த எல்டன் ஜான் இசை நிகழ்ச்சியில் அதிபர் மேக்ரான் அவரது மனைவி பிரிஜெட் கலந்து கொண்டனர். அதிபர் மேக்ரான் "சேட்டர்டே நைட் இஸ் ஆல்ரைட் ஃபார் ஃபைட்டிங்", "பர்ன் டவுன் தி மிஷன்" போன்ற பாடல்களுக்கு கால்களால் தாளமிட்டு ரசித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x