Published : 30 Jun 2023 06:06 AM
Last Updated : 30 Jun 2023 06:06 AM
நியூயார்க்: ஆயுத போராட்டத்தால் பாதிக்கப்படும் சிறார் குறித்த ஐ.நா. சபையின் ஆண்டறிக்கையில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டு உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. சில நாடுகளில் கிளர்ச்சிக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நாடுகளின் ஆயுதப் போராட்டத்தால் சிறுவர், சிறுமிகள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர். தீவிரவாத குழுக்கள், கிளர்ச்சிக் குழுக்களில் சிறுவர்கள் இணைக்கப்பட்டு ஆயுத போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 1997-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபை ஆண்டுதோறும் சிறப்பு அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதில் ஆயுத போராட்டம் நடைபெறும் நாடுகளின் பட்டியல் இணைக்கப்படுகிறது. கடந்த 2010-ம்ஆண்டு முதல் ஆண்டறிக்கையில் இந்தியாவின் பெயர் இடம் பெற்று வந்தது. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் மற்றும்நக்சல், மாவோயிஸ்ட் தீவிரவாத குழுக்களில் சிறுவர்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக ஒவ்வொரு ஆண்டு அறிக்கையிலும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இந்த சூழலில் 2023-ம் ஆண்டுக்கான சிறப்பு அறிக்கையை ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், நைஜீரியா, கேமரூன், புர்கினோ பாசோ உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் கூறியதாவது: ஆயுதப் போராட்டத்தில் இருந்துசிறாரை மீட்க, பாதுகாக்க இந்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியை சேர்ந்த சிறார், ஆயுத போராட்டத்தால் பாதிக்கப்படாமல் இருக்க இந்தியஅரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்திய அவலத்துக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. சபையின் தூதர் நிலைமையை நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளித்துள்ளார். இதன்அடிப்படையில் ஐ.நா. சபையின்ஆண்டறிக்கையில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்தோணியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையின் சிறப்பு தூதர்வெர்ஜினியா காம்பா கூறும்போது, “இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வருகிறோம். ஆயுத போராட்டங்களில் இருந்து சிறாரை பாதுகாப்பதில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கை முழு திருப்தி அளிக்கிறது. குறிப்பாக சத்தீஸ்கர், அசாம்,ஜார்க்கண்ட், ஒடிசா, காஷ்மீரில்சிறாரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
மத்திய மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐ.நா. சபையின் எதிர்மறையான பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை நீக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதுதொடர்பாக அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் சிறாரை பாதுகாக்க தேவையான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தில் மகளிர் நலன், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையுடன் மத்திய அரசின் பல்வேறு துறைகள் இணைந்து செயல்பட்டன. இதற்கான பலன் இப்போது கிடைத்திருக்கிறது. இவ்வாறு அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT