Published : 29 Jun 2023 11:19 AM
Last Updated : 29 Jun 2023 11:19 AM
நியூஃபவுண்டலேண்ட்: பேரழுத்தத்தின் காரணமாக சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி சுற்றுலா வாகனத்தின் சிதைந்த பாகங்கள் சில மீட்கப்பட்ட நிலையில் அவற்றில் மனித உடலின் எச்சங்கள் ஒட்டிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை சுற்றிக் காண்பிக்க சுற்றுலா பயணிகளுடன் சென்ற டைட்டன் நீர்மூழ்கி வாகனம் அண்மையில் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சிக்கி வாகனத்தில் இருந்த 5 சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருமே பெரும் பணக்காரர்கள்.
இந்நிலையில், அந்த வாகனத்தின் சிதைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட அந்த சிதைந்த பாகங்களில் மனித உடல்களின் சில எச்சங்கள் ஒட்டிக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டைட்டன் நீர்மூழ்கி சுற்றுலா வாகனத்தின் சிதிலமடைந்த பகுதிகள் கடலில் 12,000 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தகவல் வெளியான சில மணி நேரத்தில் அவற்றில் ஒட்டியிருந்த உடல் எச்சங்கள் பற்றிய தகவலை அமெரிக்க கடலோர காவற்படை வெளியிட்டுள்ளது. மேலும், டைட்டன் வாகனத்தின் சிதைந்த பாகங்கள் நியூஃபவுண்ட்லேண்ட் கொண்டுவரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க கடலோர காவல்படை தலைவர் கேப்டன் ஜேசன் இது குறித்து கூறுகையில், "டைட்டன் நீர்மூழ்கி வாகனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து தீவிரமாக ஆராய வேண்டியிருக்கிறது" என்றார்.
அதேபோல் உட்ஸ் ஹோல் ஓசனோகிராஃபிக் என்ற தனியார் நீர்மூழ்கி வாகனத் தயாரிப்பு மையத்தின் ஆய்வகத் தலைவர் கார்ல் ஹார்ட்ஸ்ஃபீல்ட் கடலோர காவல் படைக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதில் அவர், "சிதிலமடைந்த பொருள் அளவில் சிறியது என்றால் ஒரு கூடையில் அள்ளிப்போட்டு அதனை ஆய்வகம் கொண்டுவரலாம். ஆனால் டைட்டன் அளவில் மிகப்பெரிய நீர்மூழ்கி வாகனம். சிறுகச்சிறுக பாகங்களை சேகரித்தே ஆய்வு செய்து விபத்துக்கான காரணத்தை அறிய முடியும்" என்று கூறியுள்ளார்.
விபத்தில் பறிபோன ஐந்து உயிர்கள்: ஒரு வாரத்துக்கு முன்பு, வடக்கு அட்லான்டிக் பெருங்கடலின் ஆழத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. டைட்டன் என்று பெயரிடப்பட்ட ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம், 5 நபர்களைக் கொண்ட குழுவை ஏற்றிச் சென்றது. டைட்டன், நூற்றாண்டு பழமையான டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுக்கு அருகில் சென்ற பொழுது பேரழிவை சந்தித்தது.
கனடா மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த கடலோர கண்காணிப்பை மேற்கொள்ளும் கடற்படையின் கப்பல்களில் இருந்து, கடலுக்கு அடியில் தொலைவில் இருந்து இயக்கக் கூடிய வாகனத்தைக் கொண்டு தேடுதல் மற்றும் மீட்பு பணி மேற்கொண்டனர். தேடுதல் பணியின் இறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த கடலோர காவல் படை உயர் அதிகாரி, "டைட்டன் பேரழுத்தத்தின் காரணமாக சிதைந்திருக்கலாம். இதில் 5 பேரும் உயிரிழந்திருக்கலாம்" என்று அறிவித்தார்.
நீர்மூழ்கி கப்பல் - நீர்மூழ்கி வாகனம் வித்தியாசம்: நீர்மூழ்கி கப்பல் (Submarine) கடற்படையால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு நோக்கத்துக்காக நீரில் மூழ்கக் கூடிய வாகனம் (Submersible) பயன்படுத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆராய்ச்சி மனிதர்களை ஏற்றிச் செல்லும் நீர்மூழ்கி வாகனம், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமானவை, மேலும் இந்தியா ஆராய்ச்சி நீர்மூழ்கி வாகனத்தை (Samudrayan) உருவாக்கி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT