Published : 27 Jun 2023 01:08 PM
Last Updated : 27 Jun 2023 01:08 PM

ரஷ்யாவில் சகோதர படுகொலைகள் நடக்க வேண்டுமென்றே எதிரிகள் விரும்புகின்றனர்: அதிபர் புதின்

மாஸ்கோ: ரஷ்யாவில் சகோதர படுகொலைகள் நடக்க வேண்டுமென்றே மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

வாக்னர் அமைப்புடன் ஏற்பட்ட உடன்படிக்கைக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர், “ நிகழ்வுகள் தொடங்கியதிலிருந்து ரத்தம் சிந்தப்படுவதை தவிர்க்கும் நடவடிக்கைகளை எடுத்தேன். இதில் ரஷ்யர்களின் தேச பக்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது எதிரிகள் துல்லியமாக விரும்புவது இந்த சகோதர படுகொலையைத்தான்.

கீவ் நகரில் உள்ள நாஜிக்களும் அவர்களின் மேற்கத்திய ஆதரவாளர்களும், தேச துரோகிகளும் ரஷ்ய வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், பொதுமக்கள் ஒற்றுமையாக இருந்தால் எந்த ஒரு கலகமும் தோல்வி அடையும் என்று இந்த நிகழ்வு காட்டுக்கிறது. வாக்னர் அமைப்பினர் மீண்டும் ரஷ்ய ராணுவத்தில் சேரலாம். ரஷ்யாவில் உள்ள உங்கள் வீடுகளுக்கு திரும்பலாம். இல்லை என்றால்.... நீங்கள் பெலரஸ்ஸுக்கு வேண்டுமானலும் செல்லலாம்.” என்று பேசினார்.

வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் பிரிகோஸின் வீடியோ ஒன்றில் பேசும்போது, “நாங்கள் எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த விரும்பினோம். நாட்டில் அதிகாரத்தை கவிழ்க்க அல்ல” என்று தெரிவித்தார்.

முன்னதாக, உக்ரைன் போருக்கான தலைமையகமாக விளங்கிய ரஷ்யாவின் ரோஸ்டோவ் நகரில் செயல்பட்ட ரஷ்ய ராணுவக் கட்டுப்பாட்டு மையத்தை வாக்னர் ஆயுதக் குழு நேற்று முன்தினம் கைப்பற்றியது. ‘‘ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷோய்கு மற்றும் ராணுவ தளபதி வாலரி ஜெரசிமோவ் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும். எங்களது வீரர்கள் இங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி முன்னேறுவார்கள். குறுக்கே யார் வந்தாலும் அவர்களை அழித்துவிடுவோம்” என வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, வாக்னர் படை வீரர்கள் மாஸ்கோவை நோக்கி முன்னேறிச் சென்றனர். அவர்கள் தலைநகரிலிருந்து சுமார் 200 கி.மீ. தூரம் வரை முன்னேறியதாக தகவல் வெளியானது. இதனால் மாஸ்கோவில் அதிபர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், அவர்களின் பாதுகாப்பு, இறையாண்மைக்காகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த தருணத்தில், நமது ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இது முதுகில் குத்தும் செயல். ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில், பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய அரசு மற்றும் வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் பிரிகோஸின் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் நீங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x