Published : 27 Jun 2023 12:09 PM
Last Updated : 27 Jun 2023 12:09 PM

பிரதமர் மோடியை கேள்வி கேட்டதால் ட்ரோல் செய்யப்படும் பெண் பத்திரிகையாளர்: வெள்ளை மாளிகை கண்டனம்

பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர் சப்ரினா

வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்டதற்காக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தியாளர் சப்ரினா சித்திக்கி ட்ரோல் செய்யப்படுவதற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல, ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது.

கேள்வியும் பதிலும்.. அண்மையில் அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பைடன் உடன் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீன் ஜர்னல் பத்திரிகையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கி கேள்வி எழுப்பினார். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்து அவர் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பிரதமர் மோடி பதிலளிக்கும்போது, “நீங்கள் கேட்ட கேள்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் ஜானநாயக நாடு. ஜனநாயகம் எங்கள் நாடி நரம்புகளில் உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை சுவாசித்துக் கொண்டே வாழ்கிறோம். இது எங்கள் அரசியலமைப்பிலேயே உள்ளது. மனித உரிமைகள் இல்லாவிட்டால் ஜனநாயகம் இல்லை. ஜனநாயகமாக வாழும்போது அங்கு பாகுபாடு என்ற பிரச்சினைக்கே இடமில்லை. சாதி, மதம், பாலினம் ஆகிய பாகுபாடுகளுக்கு இந்தியாவில் முற்றிலும் இடமில்லை” என்று கூறினார்.

விளக்கம் கேட்ட சக பத்திரிகையாளர்: இந்நிலையில் பிரதமர் மோடியை கேள்வி கேட்ட செய்தியாளர் சப்ரினா சித்திக்கி இணையவெளியில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இது குறித்து சக பத்திரிகையாளர் கெல்லி ஓ டோனெல் கேள்வி எழுப்பினார். சப்ரினா சித்திக்கி இணையவெளியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிறார். இந்தியாவில் இருந்து நிறைய பேர் அவரை ஆன்லைன் வாயிலாக தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். இதில் சிலர் அந்நாட்டு அரசியல்வாதிகளாக உள்ளனர். இவ்விவகாரத்தில் வெள்ளை மாளிகை என்ன சொல்ல விரும்புகிறது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, "இணையவெளி அத்துமீறல்கள் குறித்து அறிவோம். இது ஏற்கத்தக்கதல்ல. உலகில் எந்த மூளையில் இருக்கும் பத்திரிகையாளரும் எந்தச் சூழலிலும் யாதொரு வகையில் ஒடுக்கப்பட்டாலும் நாங்கள் எதிர்ப்போம். பத்திரிகையாளர் மீது இணையவெளி வன்மம் ஜனநாயகத்தின் மாண்பையே சிதைக்கும் செயல் " என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x