Published : 26 Jun 2023 01:27 PM
Last Updated : 26 Jun 2023 01:27 PM

ரஷ்யா-வாக்னர் குழு இடையே சமரசம் - பதற்றம் தணிந்ததால் உக்ரைன் புறப்பட்ட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்

மாஸ்கோ: கலகத்தில் ஈடுபட முயன்ற ரஷ்யாவின் வாக்னர் படையுடன் உடன்பாடு ஏற்பட்டதால் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கே ஷோய்கு உக்ரைன் விரைந்திருக்கிறார்.

வாக்னர் குழுவின் மோதலுக்குப் பிறகு உக்ரைனுக்கு செர்கே மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இப்பயணத்தில் உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவத்துடன் கடந்த வார நிலவரம் குறித்தும் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட வாக்னர் குழு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க அதிபர் பைடனும் ஆலோசனை நடத்தியதாகவும், ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஆதரவாக இருப்பதற்காக பைடனுக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்ததாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரஷ்யாவில் நடப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், "இந்த வார இறுதியில் என்ன நடந்தது என்றால்.. உக்ரைனுக்கு எதிரான போர் ரஷ்யாவின் சக்தியை சிதைத்து அதன் அரசியல் அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கிறது ரஷ்யாவில்...

உக்ரைன் போருக்கான தலைமையகமாக விளங்கிய ரஷ்யாவின் ரோஸ்டோவ் நகரில் செயல்பட்ட ரஷ்ய ராணுவக் கட்டுப்பாட்டு மையத்தை வாக்னர் ஆயுதக் குழு நேற்று முன்தினம் கைப்பற்றியது. ‘‘ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷோய்கு மற்றும் ராணுவ தளபதி வாலரி ஜெரசிமோவ் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும். எங்களது வீரர்கள் இங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி முன்னேறுவார்கள். குறுக்கே யார் வந்தாலும் அவர்களை அழித்துவிடுவோம்” என வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, வாக்னர் படை வீரர்கள் மாஸ்கோவை நோக்கி முன்னேறிச் சென்றனர். அவர்கள் தலைநகரிலிருந்து சுமார் 200 கி.மீ. தூரம் வரை முன்னேறியதாக தகவல் வெளியானது. இதனால் மாஸ்கோவில் அதிபர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், அவர்களின் பாதுகாப்பு, இறையாண்மைக்காகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த தருணத்தில், நமது ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இது முதுகில் குத்தும் செயல். ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில், பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய அரசு மற்றும் வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் பிரிகோஸின் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் நீங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x