Published : 26 Jun 2023 01:08 PM
Last Updated : 26 Jun 2023 01:08 PM

அமெரிக்காவைப் பழிவாங்குவோம் - வட கொரியாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு சூளுரை

கொரிய போர் நினைவு நாளில் வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் திரண்ட மக்கள் | படம்: வட கொரிய அரசு ஊடகம்

பியாங்யாங்: வடகொரியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) லட்சக்கணக்கானோர் திரண்டு கொரிய போர் தொடங்கப்பட்டதன் 73-வது நினைவு நாளை அனுசரித்தனர். அப்போது அமெரிக்காவை அழிக்க பழிவாங்கும் போர் நடத்துவோம் என்று அவர்கள் சூளுரைத்தனர்.

வட கொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில் 1,20,000 மக்கள், மாணவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தில் மக்கள் தங்களின் கைகளில் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களுடன் கூடிய பதாகைகளை வைத்திருப்பதை ஆவணப்படுத்தியிருந்தது.

"ஒட்டுமொத்த அமெரிக்க நிலப்பரப்பும் எங்களின் துப்பாக்கிகளின் வீச்சுக்குள் இருக்கின்றது", "எதேச்சதிகார அமெரிக்கா அமைதியை அழிக்கும் தேசம்", "அமெரிக்காவை அழிக்க பழிவாங்கும் போரை நடத்துவோம்" போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை மக்கள் வைத்திருந்தனர்.

வட கொரியா விரைவில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் முதல் உளவு செயற்கைக்கோளை ஏவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் நேற்று இந்த எச்சரிக்கை வாகசங்களை அந்நாடு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

மேலும், கே என்சிஏ ஊடகம், "அமெரிக்க ஏகாதிபத்தியர்களை அழிக்கும் வலிமையான ஆயுதங்கள் வட கொரியாவிடம் இருக்கின்றன. இந்த நாட்டைப் பாதுகாக்கத் துடிப்பவர்கள் எதிரியை பழிவாங்கும் நெருப்பை உள்ளத்தில் எரியவிட்டுக் கொண்டிருக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளது. வட கொரியாவின் போர் நினைவுப் பேரணியும் அதில் எடுத்துக் கொள்ளப்பட்ட சூளுரையும் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

வட கொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது. தங்களின் அண்டை நாடான தென் கொரியாவை ஆயுதக் களமாகவும், போர்க்களமாகவும் பயன்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது என்று வட கொரியா நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும் தங்களின் பாதுகாப்புக்காகவே தாங்கள் ஆயுதச் சோதனைகளை செய்து வருவதாக வட கொரியா கூறிவருகிறது.

வட கொரியா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா: பகையின் பின்னணி- ஒரே மொழி, ஒரே இனத்தைக் கொண்ட இரு கொரிய நாடுகளுக்கும் இடையே என்னதான் பிரச்சினை என்று வரலாற்றுப் பக்கங்களைத் தேடினால் இரண்டாம் உலகப் போரில் இருந்து கதை தொடங்குகிறது. அப்போது, ஒன்றுபட்ட கொரியாவை ஜப்பான் தனது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த பின்னர், 1945-ல் கொரியா விடுதலை பெற்றது.

கொரியா விடுதலை பெற்ற வேளையில் அதன் வட பகுதியில் சோவியத் நாடும், தென் பகுதியில் அமெரிக்காவும் ஆதிக்கத்தைச் செலுத்தின. இரு ஆதிக்க நாடுகள் இடையிலான பனிப்போர், கொரியாவில் பெரும் சண்டையாக வெடித்தது. ஐந்தே ஆண்டுகளில் மீண்டும் போரை சந்தித்தது ஒன்றுபட்ட கொரியா. 1950-ல் தொடங்கிய கொரியப் போர் மூன்று வருடங்கள் நீடித்தது.

1953-ல் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டு நாடுகள் உருவாகின. போர் நிறுத்தத்தின்போது எந்த அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அப்போதிலிருந்தே இரு நாடுகள் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இன்றும் தென் கொரியாவில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கே அமெரிக்கப் படைகள் இருக்கின்றன. வட கொரியாவுக்கு அமெரிக்கா என்றாலே வெறுப்பு. அந்த வெறுப்பு தென் கொரியா மீதும் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக நேற்று வட கொரியா போர் நினைவு நாளில் சூளுரைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x