Published : 25 Jun 2023 03:58 AM
Last Updated : 25 Jun 2023 03:58 AM
மாஸ்கோ: ரஷ்யாவில் திடீர் கிளர்ச்சி ஏற்பட்டிருப்பதால், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அதிபர் புதினின் இந்த நடவடிக்கைக்கு, உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியது. எனினும், ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்கிறது.
ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து, அந்த நாட்டின் தனியார் பாதுகாப்பு அமைப்பான வாக்னர் ஆயுதக் குழுவும் போரில் ஈடுபட்டது. அந்தக் குழுவின் தலைவர் ஈவ்ஜெனி பிரிகோஸின் (62), அதிபர் புதினின் நெருங்கிய நண்பர்.
உக்ரைன் போரின்போது, ஈவ்ஜெனி பிரிகோஸினுக்கும், ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கே ஷோய்கு, தளபதி வாலரி ஜெரசிமோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்னர் ஆயுதக் குழு அதிகாரப்பூர்வமாக ரஷ்ய ராணுவத்தில் இணைய வேண்டும் என்று தலைமை தளபதி வாலரி ஜெரசிமோவ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ஈவ்ஜெனி பிரிகோஸின் ஏற்கவில்லை. இதனால், வாக்னர் ஆயுதக் குழுவுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்க ரஷ்ய ராணுவம் மறுத்தது.
இதற்கிடையில், உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் முகாமிட்டிருக்கும் இடங்களின் விவரங்களை எதிரிகளுக்கு ஈவ்ஜெனி பிரிகோஸின் வழங்கியதாக, ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் குற்றம் சாட்டின. இதன் காரணமாக, உக்ரைனின் பாக்மத் பகுதியில் முகாமிட்டிருந்த வாக்னர் ஆயுதக் குழு வீரர்கள் மீது, ரஷ்ய ராணுவம் அண்மையில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்தனர்.
இந்தப் பின்னணியில், ரஷ்யாவின் ரோஸ்டோவ் நகரில் செயல்பட்ட ரஷ்ய ராணுவக் கட்டுப்பாட்டு மையத்தை வாக்னர் ஆயுதக் குழு நேற்று கைப்பற்றியது. அங்கிருந்தே உக்ரைன் போருக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அந்த நகரம் முழுவதும் தற்போது வாக்னர் ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இது தொடர்பாக ஆயுதக் குழு தலைவர் ஈவ்ஜெனி பிரிகோஸின் டெலகிராம் செயலியில் நேற்று வெளியிட்ட பதிவில், “ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷோய்கு மற்றும் ராணுவ தளபதி வாலரி ஜெரசிமோவ் ஆகியோர்தான், உக்ரைனுக்கு எதிரானப் போருக்கு காரணம். இவர்கள் இருவரும் ரோஸ்டோவ் நகரில் என்னை வந்து சந்திக்க வேண்டும். இருவரும் பதவி விலக வேண்டும். எங்களது வீரர்கள் இங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி முன்னேறுவார்கள். குறுக்கே யாராவது வந்தால், அவர்களை அழித்துவிடுவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து, மாஸ்கோவில் அதிபர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் புதினுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், அவர்களின் பாதுகாப்பு, இறையாண்மைக்காகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய இந்தப் போரில், அனைத்து படைப் பிரிவுகளும் இணைந்து, ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியம்.
இந்த தருணத்தில், நமது ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இது நாட்டு மக்களுக்கும், போரில் ஈடுபடும் வீரர்களுக்கும் செய்யும் துரோகமாகும். மேலும், மக்களின் முதுகில் குத்தும் செயலாகவும் இருக்கும்.
நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுவோர், ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியைத் தொடங்கியவர்கள், அச்சுறுத்தல் மற்றும் தீவிரவாதப் பாதையில் சென்றவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விரைவில் புதிய அதிபர்: இதற்கிடையில், வாக்னர் ஆயுதக் குழுவின் டெலகிராம் சேனல் நேற்று வெளியிட்ட செய்தியில், “அதிபர் விளாடிமிர் புதின் தவறான முடிவை எடுத்துவிட்டார். அதற்கான மோசமான விளைவுகளை அவர் சந்திப்பார். ரஷ்யாவில் விரைவில் புதிய அதிபர் பதவியேற்பார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட வாக்னர் ஆயுதக் குழு திடீரெனக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதால், புதின் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
யார் இந்த ஈவ்ஜெனி பிரிகோஸின்?: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 1961-ல் பிறந்தவர் ஈவ்ஜெனி பிரிகோஸின்(62). சிறு வயதில் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தார். விடுதலையான பிறகு, உணவகம் திறந்தார். அந்த உணவகத்துக்கு புதின் அடிக்கடி செல்வது வழக்கம். இதில் ஏற்பட்ட நட்பால், அதிபர் மாளிகைக்கு உணவு வழங்கினார். பின்னர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மேயரானார்.
2014-ல் வாக்னர் ஆயுதக் குழு என்ற தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பைத் தொடங்கினார். லிபியா, மாலி, சிரியா உள்ளிட்ட நாடுகளில் நடந்த உள்நாட்டுப் போரில் அரசுகளுக்கு ஆதரவாக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியது இந்த அமைப்பு. அந்த வகையில் உக்ரைன் மீதான போரிலும் இந்த அமைப்பு முக்கியப் பங்காற்றி வருகிறது. இக்குழுவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் போரில் தங்கள் வீரர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டதற்கு ரஷ்ய ராணுவம்தான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டி வந்தார். இதனால், புதினுக்கும், ஈவ்ஜெனி பிரிகோஸினுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT