Published : 24 Jun 2023 03:42 PM
Last Updated : 24 Jun 2023 03:42 PM
மாஸ்கோ: ரஷ்யாவுக்கு விரைவில் புதிய அதிபர் கிடைப்பார் என்று அந்நாட்டு அதிபர் புதின் பேச்சுக்கு வாக்னர் ஆயுதக் குழு பதிலடி கொடுத்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் அரசு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சில நிமிடங்களிலேயே வாக்னர் குழு தனது டெலிகிராம் பக்கத்தில் ஒரு பதிலடியைப் பதிவிட்டுள்ளது. அதில், ‘ரஷ்ய அதிபர் தவறான முடிவை எடுத்துள்ளார். விரைவில் ரஷ்யாவுக்கு புதிய அதிபர் கிடைப்பார்’ என்று பதிவிட்டுள்ளது,
முன்னதாக தொலைக்காட்சி உரையில் பேசிய அதிபர் புதின், “வாக்னர் ஆயுதக் குழு முதுகில் குத்திவிட்டது. இது அப்பட்டமான துரோகம். நாட்டைக் காக்க போராடிக் கொண்டிருக்கும்போது தனிநபர் விருப்பங்களுக்காக ஆயுதம் ஏந்துவது தேசத் துரோகக் குற்றம். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும். கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமையை பின்பற்றாமல் வீரர்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், ‘தி வாக்னர்’ குழு ஒரு தீவிரவாதக் குழு என்றும் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
முன்னதாக, சனிக்கிழமை காலை ‘தி வாக்னர்’ குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸின் வெளியிட்ட ஆடியோ பதிவில், “நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை எதிர்த்து முன்னேறுகிறோம். வழியில் எது தடையாக இருந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம்” என்று எச்சரித்திருந்தார். ஏற்கெனவே உக்ரைன் போர் காரணமாக நெருக்கடியில் உள்ள ரஷ்யாவுக்கு இது இன்னொரு அழுத்தமாக சேர்ந்து கொள்ள உலகமே இந்த திருப்பத்தை உற்று நோக்கி வருகிறது.
தொடர்ந்து டெலிகிராமில் ஒரு ஆடியோவை வெளியிட்ட ப்ரிகோஸின், “தாய்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார் அதிபர் புதின். அது ஓர் ஆழமான தவறு. நாங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்கள். புதினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை” என்று கூறியுள்ளார். | வாசிக்க > முதுகில் குத்தும் செயல்; தண்டனைக்கு தயாராக இருங்கள் - வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT