Published : 24 Jun 2023 04:36 AM
Last Updated : 24 Jun 2023 04:36 AM

‘ஜனநாயகம் எங்கள் உணர்வில்' - பிரதமர் மோடி பேட்டி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் மதுவை அறவே தவிர்த்து வருகின்றனர்.  இதன்காரணமாக அமெரிக்க அதிபர் மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தில் இரு தலைவர்களும் சர்பத்  அருந்தினர்.படம்: பிடிஐ 

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடியிடம் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

‘‘உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்ற பெருமையை இந்தியா நீண்ட காலமாக கொண்டுள்ளது. ஆனால், உங்கள் அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், அதைப் பற்றி விமர்சிப்பவர்களை அடக்குவதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. அவர்களின் உரிமைகள் மேம்படவும், சுதந்திரமான பேச்சுரிமைக்கும் நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?’’ என அந்த நிருபர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பிரதமர் மோடி அளித்த பதில்: அதிபர் பைடன் கூறியது போல், இந்தியா மற்றும் அமெரிக்காவின் டிஎன்ஏ.,வில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் எங்கள் ரத்தத்திலும், உணர்விலும் உள்ளது. எங்கள் அரசியல் சாசனத்தில் எங்கள் முன்னோர்கள் ஜனநாயகத்தை ஊக்குவித்துள்ளனர். அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுள்ள ஜனநாயக விதிமுறைகளை எனது அரசு பின்பற்றுகிறது. ஜனநாயகத்தால்தான் பிறருக்கு எதையும் செய்ய முடியும் என்பதை எனது அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இதில் ஜாதி, இன, மத ரீதியாக எந்த பாகுபாட்டையும் நாங்கள் பார்ப்பதில்லை. மனித நேயம், மனித உரிமைகளுக்கு மதிப்பில்லை என்றால், எந்த நாட்டையும், ஜனநாயக நாடு என அழைக்க முடியாது. இந்தியாவை ஜனநாயக நாடு என கூறும்போது, பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கை அடிப்படையில்தான் இந்தியா முன்னேறுகிறது. இந்தியாவின் ஜனநாயக விதிமுறைகளில் ஜாதி, மத ரீதியான பாகுபாடு இல்லை என்றார்.

முகேஷ் அம்பானி, டிம் குக், சுந்தர் பிச்சைக்கு அழைப்பு: மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், பிரதமர் மோடியுடன் 380-க்கும் மேற்பட்ட முக்கிய சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

அதன்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திரா, ஸெரேதா இணை நிறுவனர் நிகில் காமத், படத் தயாரிப்பாளர் நைட் ஷியாமலன், வடிவமைப்பாளர் ரால்ஃப் லாரன், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் உள்ளிட்ட பலர் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x