Published : 24 Jun 2023 04:31 AM
Last Updated : 24 Jun 2023 04:31 AM
வாஷிங்டன்: உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல மற்றொரு ஏ.ஐ.-ல் வரலாற்று சிறப்புமிக்க திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த ஏ.ஐ. -இந்தியா, அமெரிக்கா (America- India) கூட்டணி ஆகும்.
உலகம் முழுவதும் இருந்து வரும் மக்களை அமெரிக்கா அரவணைத்து ஏற்றுக் கொள்கிறது. அந்த வகையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களாக அமர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவரான கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகி புதிய வரலாறு படைத்திருக்கிறார்.
மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் காட்டிய பாதையில் நாம் நடக்கிறோம். இந்த தலைவர்களைப் போல பலர் விடுதலை, சமஉரிமை, நீதிக்காக போராடினர். அவர்களில் ஒருவரான அமெரிக்க எம்.பி. ஜான்லெவிஸுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
இரு ஜனநாயக நாடுகள்: அமெரிக்காவும் இந்தியாவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள். இந்தியாவில் இப்போது 2,500-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. பல்வேறு மாநிலங்களில் 20 கட்சிகள் ஆட்சி நடத்தி வருகின்றன. 22 மொழிகள் நாட்டின் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட்டார மொழிகள் பேசப்படுகின்றன. எனினும் நாங்கள் ஒரே குரலில் பேசுகிறோம்.
ஒவ்வொரு 100 மைல் தொலைவுக்கும் இந்திய மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. தோசை முதல் ஆலு பரோட்டா வரையும், கண்ட் முதல் சந்தேஷ் வரையும் அந்தந்த பகுதிக்கு ஏற்ப உணவு வகைகள் மாறுபடுகின்றன. நாங்கள் அனைத்து உணவு வகைகளையும் ருசிக்கிறோம்.
உலகத்தின் அனைத்து மதங்கள், நம்பிக்கைகளின் தாயகமாக இந்தியா விளங்குகிறது. அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்கிறோம், போற்றுகிறோம். வேற்றுமையில் ஒற்
றுமையை கொண்டாடுகிறோம். இந்தியாவை பற்றி அறிந்து கொள்ள உலகம் விரும்புகிறது. அதே ஆர்வத்தை இந்த அவையிலும் காண்கிறேன்.
நான் முதல் முறை இந்திய பிரதமராக அமெரிக்காவுக்கு வந்தபோது உலகின் 10-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. இப்போது 5-வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி உள்ளோம். விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உயருவோம். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக, விசாலமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியா வளர்ச்சி அடையும்போது ஒட்டுமொத்த உலகமும் வளர்ச்சி அடையும்.
ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்று இருக்கும் நிலையில், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை அமைப்பின் கருப்பொருளாக வைத்திருக்கிறோம். இந்தியாவின் முயற்சியால் சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முயற்சியால் ஐ.நா. அமைதிப் படையினருக்கு நியூயார்க்கில் நினைவு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முயற்சியால் இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. கரோனா பெருந்தொற்று, இயற்கை பேரிடர்களின்போது பல்வேறு நாடுகளுக்கு இந்தியா தாராளமாக உதவிகளை வழங்கியது.
வலுவான பாதுகாப்பு கூட்டணி: அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தக உறவு வலுவடைந்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்புத் துறை, விமான போக்குவரத்து துறை வளர்ச்சிக்கு தேவையான தளவாடங்களை அமெரிக்க நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்திய நிறுவனங்கள் பயணிகள் விமானங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்கும்போது அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
அமெரிக்க மொபைல்போன் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யும்போது ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. செமி கண்டக்டர், தனிமங்கள் துறையில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும்போது உலகத்தின் விநியோக சங்கிலி விரிவடையும்.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் மிக நெருங்கிய பங்காளியாக அமெரிக்கா விளங்குகிறது. இரு நாடுகள் இடையிலான பாதுகாப்பு உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் வலுவடைந்து உள்ளது. கடல் பிராந்திய பாதுகாப்பு, விண்வெளி, அறிவியல், தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வர்த்தகம், வேளாண்மை, நிதி, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, கல்வி, சுகாதாரம், மனிதாபிமான முயற்சிகள் என பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. உச்சரிப்பு போட்டி மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் சாதனை படைத்து வருகின்றனர்.
போருக்கான காலம் கிடையாது: உக்ரைன் போரால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது போருக்கான காலம் கிடையாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்தியாவின் நிலைப்பாட்டை நேரடியாகவும் பொதுவெளியிலும் பலமுறை உரக்க கூறியிருக்கிறேன். போரில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க வேண்டும். போரை நிறுத்த அனைத்து வகையிலும் இந்தியா முயற்சி செய்யும்.
இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளின் குரல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். நிதியுதவி என்ற பெயரில் சிறிய நாடுகளை கடனில் மூழ்கடிக்கக்கூடாது. இந்திய, பசிபிக் பிராந்தியத்தின் நலனுக்காகவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா நாடுகள் ஒன்றிணைந்து குவாட் கூட்டணியை உருவாக்கி உள்ளன.
உலக வர்த்தக மைய தாக்குதல், மும்பை தீவிரவாத தாக்குதலை உலகம் மறக்கவில்லை. மனித குலத்தின் எதிரி தீவிரவாதம். இந்த தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் சக்திகளை தோற்கடிக்க வேண்டும். அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. இந்த கூட்டணியின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும்.
நமது கூட்டணி சூரியனுக்கு ஒப்பானது. ஒட்டுமொத்த உலகத்துக்கும் சூரியன் வெளிச்சம் கொடுக்கிறது. இதுபோல அமெரிக்கா, இந்தியா கூட்டணி உலகத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்யும். ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தை உறுப்பினராக சேர்க்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT