Published : 23 Jun 2023 10:07 AM
Last Updated : 23 Jun 2023 10:07 AM

இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகமும் வளரும் - அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி

வாஷிங்டன்: இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகம் முழுவதும் சேர்ந்தே வளரும் என்று அமெரிக்கா நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

வியாழக்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். முன்னதாக 2016ல் மோடிஅமெரிக்கா வந்திருந்தபோது அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

பிரதமர் மோடி தன் உரையில், "அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது என்பது மிகப்பெரிய கவுரவம். அதை இருமுறை பெறுவது என்பது தனிச்சிறப்பான கவுரவம்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு ஜனநாயக நெறிகளால் கட்டமைக்கப்பட்டது. இரு நாட்டு அரசியல் சாசனமும் 'மக்களாகிய நாம்' (We The People) என்ற வார்த்தைகளோடுத்தான் தொடங்குகின்றன. இரு நாடுகளும் அதன் பன்முகத்தன்மையில் பெருமிதம் கொள்கின்றன. இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பயணிப்பது உலக நன்மைக்கும், சர்வதேச அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் வித்திடும்.

கடந்த 7 ஆண்டுகளில் உலகில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் தனது உறவை ஆழப்படுத்துவதில் உறுதியுடன் முன்னேறியுள்ளன. இந்த ஏஐ (செயற்கை நுண்ணறிவு) காலத்தில் இன்னொரு ஏஐ-ம் (அமெரிக்க - இந்திய உறவு) நிறைய முன்னேற்றத்தை கண்டுள்ளது.

சபாநாயகர் அவர்களே, ஒரு துடிப்பான ஜனநாயகத்தின் பிரதிநிதியான நான் ஒரு விஷயத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். உங்களுடைய பணி நிச்சயமாக கடினமானதுதான். பல்வேறு கருத்து மோதல்களையும், சித்தாந்த வேறுபாடுகள் மீதான விவாதங்களையும் எதிர்கொள்வதன் சிக்கல் எனக்குத் தெரியும். உங்களுக்கு எப்போதெல்லாம் ஆலோசனை வேண்டுமோ அப்போதெல்லாம் நான் உதவத் தயாராக இருக்கிறேன்.

நான் முதன்முதலில் அமெரிக்கா வந்தபோது இந்தியா உலகின் 10-வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. ஆனால் இப்போது 5-வது பொருளாதார வல்லரசாக உள்ளது. நிச்சயமாக விரைவில் உலகில் 3-வது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருவெடுக்கும். இந்தியா வளரும்போது இந்த ஒட்டுமொத்த உலகமும் வளரும்.

ஜனநாயகத்தின் ஆன்மா, அனைவரையும் உள்ளடக்கும் கொள்கை, நீடித்ததன்மை ஆகியன நம்மை (இந்தியா மற்றும் அமெரிக்கா) அடையாளப்படுத்துகிறது. இவைதான் உலகம் மீதான நம் பார்வையையும் தீர்மானிக்கிறது. இந்தியா இந்த பூமியின் மீதான அக்கறையுடன் வளர்கிறது. இந்தியக் கலாச்சாரம் சுற்றுச்சூழலை ஆழமாக மதிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கை பூமியின் வளம் சார்ந்தது. இந்தியாவின் இலக்கு பூமியின் வளத்தை உறுதி செய்தல்.

உக்ரைன் மோதலால் ஐரோப்பாவுக்குள் போர் திரும்பியுள்ளது. இது அந்தப் பிராந்தியத்தில் மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. இதில் பெரும் வல்லரசுகள் ஈடுபட்டுள்ளதால் விளைவுகளும் கடுமையாக உள்ளன. நான் ஏற்கெனவே சொன்னதுபோல் போருக்கான காலம் இது இல்லை. இது பேச்சுவார்த்தைக்கும், ராஜதந்திரத்துக்குமான காலம்.

இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னரும், மும்பை தாக்குதல் நடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் இன்னமும் அப்படியே அதே அபாயத்தை அச்சுறுத்தலை உலகுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதம் மனிதநேயத்தின் எதிரி. அதை எவ்வித தயக்குமும் சுணக்கமும் காட்டாமல் ஒடுக்க வேண்டும்.

பெருந்தொற்று காலத்திலிருந்து விடுபட்டுவரும் நாம் இந்த உலகுக்கு புதிய ஒழுங்கைத் தர வேண்டும். அதனால் தான் ஜி20 குழுவில் ஆப்பிரிக்க யூனியனுக்கு முழு பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று நான் நம்புகிறேன். பலதரப்பு முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். உலகம் மாறும்போது நாமும் மாற வேண்டும்.

வற்புறுத்தல், மோதல் ஆகியவை இந்திய - பசிபிக் பிராந்தியத்தியத்தை கருமேகம் போல் சூழ்ந்துள்ளன. இந்தப் பிராந்தியத்தின் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்தப்படுவதுதான் இந்தியா - அமெரிக்கா உறவின் மைய நோக்கம்.

நான் 2016-ல் இங்கே உரையாற்றும்போது, இந்தியா - அமெரிக்கா நட்புறவு எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்ல முதன்மையானது என்று சொல்லியிருக்கிறேன். அந்த எதிர்காலம் இதுதான். இவ்வாறாக பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x