Published : 23 Jun 2023 04:00 AM
Last Updated : 23 Jun 2023 04:00 AM

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு - முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்பேசினார். அப்போது, அமெரிக்காவின் ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் போர் விமான இன்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பது, அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

19 குண்டுகள் முழங்க வரவேற்பு: அப்போது, பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.

மோடியை வரவேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசிய போது, ‘‘இன்றைய சூழலில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுவது காலத்தின் கட்டாயம். இரண்டும் வலிமையான நாடுகள், நெருங்கிய நட்பு நாடுகள். நாம் இணைந்து எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலன்களை தரும்’’ என்றார்.

பிரதமர் மோடி பேசும்போது, ‘‘சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண இந்திய குடிமகனாக அமெரிக்காவுக்கு வந்துள்ளேன். பிரதமரான பிறகும் பலமுறை வந்துள்ளேன். ஆனால், இந்த முறை இந்திய வம்சாவளியினருக்காக வெள்ளை மாளிகை கதவுகள் விசாலமாக திறக்கப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகையில் எனக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு 140 கோடி இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு’’ என்றார்.

தொடர்ந்து, இரு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்தினர். பிறகு, இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமெரிக்காவின் ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் போர் விமான இன்ஜின்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்காவின் அதிநவீன எம்கியூ-9 பிரிடேட்டர் வகையை சேர்ந்த 31 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) வாங்குவது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. பின்னர், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, ஒப்பந்தங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர்.

போர் விமான இன்ஜின்: இந்தியாவில் தயாரிக்கப்படும் தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனம் இன்ஜின்களை வழங்கி வருகிறது. இந்த இன்ஜின்கள் இதுவரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு, அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் அதிக திறன் கொண்ட போர் விமான இன்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய விமானப் படைக்காக தேஜஸ் போர் விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) தயாரித்து வருகிறது. இந்த போர் விமானங்களுக்கான எப்-414 ரக இன்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிப்பது தொடர்பாக எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். பெங்களூரு, புனேவில் உள்ள எச்ஏஎல் தொழிற்சாலைகளின் ஆராய்ச்சி திட்டங்களில் ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து இருக்கிறது. எச்ஏஎல் நிறுவனத்துக்கு எஃப்-404 ரகத்தை சேர்ந்த 75 இன்ஜின்களை ஏற்கெனவே வழங்கியுள்ளோம். அடுத்தகட்டமாக எஃப்-414 ரகத்தை சேர்ந்த 99 இன்ஜின்கள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 இன்ஜின்களை ஏற்கெனவே வழங்கிவிட்டோம்.

அடுத்த கட்டமாக எங்கள் நிறுவனம் சார்பில் எஃப்-414 ஐஎன்எஸ்-6 என்ற ரகத்தை சேர்ந்த அதிநவீன இன்ஜின்களை தயாரித்து சோதனை செய்து வருகிறோம். இந்த இன்ஜின் தயாரிப்பிலும் இந்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரோ - நாசா ஒப்பந்தம்: அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் நட்பு நாடுகளுடன் இணைந்து ஆர்டிமிஸ் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் 10 ஐரோப்பிய நாடுகள், 7 ஆசிய நாடுகள், 3 வட அமெரிக்க நாடுகள், 2 ஆப்பிரிக்க நாடுகள், 2 தென்அமெரிக்க நாடுகள் உட்பட மொத்தம் 25 நாடுகள் நாசாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்த வரிசையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இடையே ஆர்டிமிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான ஆராய்ச்சியில் இஸ்ரோவும், நாசாவும் இணைந்து செயல்படும். ஆர்டிமிஸ் திட்டத்தின் அடுத்த கட்டமாக, செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படும் என்று நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x