Published : 22 Jun 2023 05:12 PM
Last Updated : 22 Jun 2023 05:12 PM

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் இரு தரப்பு உறவை மேலும் ஆழப்படுத்தும்: வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான ஒருங்கிணைப்பை மேலும் ஆழப்படுத்தும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவரது இந்த பயணம் இரு தரப்பு உறவில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் கூறியதாவது: "பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான மற்றும் நெருக்கமான உறவை மேலும் வலுப்படுத்தும். அமெரிக்கர்களையும் இந்தியர்களையும் ஒன்றாக இணைக்கும். சுதந்திரமான, வெளிப்படையான, வளமான, பாதுகாப்பான இந்தோ - பசிபிக்குக்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை இந்தப் பயணம் வலுப்படுத்தும். மேலும், பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, விண்வெளி உள்ளிட்டவற்றில் தொழில்நுட்ப உறவை உயர்த்தும்.

இந்தோ - பசிபிக் பகுதியில் உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளாகவும், பாதுகாப்பை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நாடுகளாகவும் அமெரிக்காவும், இந்தியாவும் உள்ளன. வரும் காலங்களில் அமெரிக்காவுக்கு இந்தியா மிக முக்கியமான நாடாக இருக்கும். கல்வி மற்றம் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவை விரிவுபடுத்துவது குறித்தும், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் அதிபர் ஜோ பைடனும், பிரதமர் நரேந்திர மோடியும் விவாதிப்பார்கள்.

குவாட் அமைப்பின் மூலம், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. ஒரு வலுவான கடல்சார் ஜனநாயகமாக 4 நாடுகளும் பரஸ்பர நலனை மேம்படுத்த பணியாற்றுகிறோம். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், சுத்தமான எரிசக்திக்கான தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் அமெரிக்காக்கு இந்தியா மிகவும் முக்கியம்.

அமெரிக்க - இந்திய உறவு பல ஆண்டுகளாக வலுப்பட்டு வருகிறது. தற்போது அது முன்னெப்போதையும்விட வலுவாக இருக்கிறது. வெளிப்படையான இந்தோ - பசிபிக் பகுதியை உறுதிப்படுத்தவும், உலகளாவிய சவால்களை கூட்டாகச் சமாளிக்கவும் அமெரிக்கா ஒத்துழைப்பு அளிக்கும். ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் இணைந்து வெளிப்படையான, வளமான, பாதுகாப்பான, நிலையான மற்றும் நெகிழ்ச்சியான உலகத்தை உருவாக்குவதை நோக்கி இரு நாடுகளும் செயல்படும்" என்று அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x