Published : 22 Jun 2023 09:45 AM
Last Updated : 22 Jun 2023 09:45 AM
வாஷிங்டன்: பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையில் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
முன்னதாக வாஷிங்டன் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மழை பெய்ததை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி தனது ட்விட்டரில் இந்திரனின் வரவேற்புடனும், இந்திய சமூகத்தினரின் வரவேற்புடன் வாஷிங்டன் வந்தடைந்தேன் என்று பதிவிட்டிருந்தார்.
பின்னர் அமெரிக்க அதிபர் ஏற்பாடு செய்திருந்த விருந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அவரை அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் வரவேற்றனர்.
அதிபர் ஜோ பைடனுக்கு உபநிஷத புத்தகங்கள், சந்தனப் பேழை ஆகியனவற்றையும், அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு வைரக்கல்லையும் பிரதமர் மோடி வழங்கினார்.
சந்தனப்பேழையும் உபநிஷத புத்தகமும்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நவம்பர் மாதம் 81 வயதாகிறது. இதனை ஒட்டி அவருக்குப் பரிசாக நுணுக்கமான வேலைப்பாடு நிறைந்த ஒரு சந்தனப் பேழையை பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார். அதனுள் ஒரு வெள்ளியிலான விநாயகர் சிலை, வெள்ளி விளக்கு இருந்தன. அந்த வெள்ளிச் சிலையை கொல்கத்தாவைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்தப் பேழைக்குள் 'தஸ் தனம்' எனப்படும் பரிசும் இருந்தது. இது ஒரு நபர் தனது 80 வயதை பூர்த்தி செய்யும்போது வழங்கப்படுவதாகும். ஒருவர் 80 வயது 8 மாதங்களை பூர்த்தி செய்யும்போது 1000 முழு நிலவுகளைக் கண்டவராவார். இதனை 'த்ரிஷ்ட சஹஸ்ரசந்திரோ' என்று குறிப்பிடுவர். இதனையொட்டி பைடனுக்கான பரிசுகளை பிரதமர் மோடி தெரிவு செய்து வழங்கியுள்ளார். அத்துடன் உபநிஷத கொள்கைகளின் 10 கோட்பாடுகள் அடங்கிய நூலின் முதல் அச்சுப் பதிப்பையும் வழங்கினார்.
I thank @POTUS @JoeBiden and @FLOTUS @DrBiden for hosting me at the White House today. We had a great conversation on several subjects. pic.twitter.com/AUahgV6ebM
— Narendra Modi (@narendramodi) June 22, 2023
ஜில் பைடனுக்கு வைரக்கல்.. அதேபோல் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்பட்ட பச்சை நிற 7.5 கேரட் மதிப்பிலான வைரக் கல்லை பரிசாக வழங்கினார். அந்தப் பரிசுகளை வழங்கியதோடு ஒவ்வொரு பரிசுகளின் பின்னணி குறித்தும் இருவரிடம் பிரதமர் விளக்கிக் கூறினார்.
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுகள்.. தொடர்ந்து பதில் பரிசுகளாக பிரதமர் மோடிக்கு வேலைப்பாடுகளுடன் கூடிய பழமையான கையெழுத்துப் பிரதியான கேலி எனப்படும் புத்தகங்களை வழங்கினர். மேலும் பழமையான புகைப்படக் கேமரா ஒன்றும் அத்துடன் வனவிலங்குகள் புகைப்படங்கள் தொடர்பான புத்தகம் ஒன்றையும் ஜோபைடன் கையெழுத்திட்டு வழங்கினர். ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற மாபெரும் அமெரிக்கக் கவிஞரின் கவிதைத் தொகுப்புகளில் முதல் பிரதியையும் பிரதமருக்கு பைடன் வழங்கினர்.
விருந்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளனர். பொதுவாக பிரதமர் தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது இத்தகைய கூட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பை மேற்கொள்வதில்லை என்பதால் இந்தச் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT