Published : 19 Jun 2023 07:14 PM
Last Updated : 19 Jun 2023 07:14 PM
காபூல் - தெஹ்ரான்: ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் ஆற்றில் இருந்து ஈரானுக்கும் தண்ணீர் பாய்கிறது. இந்த நிலையில், நீரைப் பகிர்ந்து கொள்வதில் கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையேயும் ஏற்பட்ட விரிசல் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு வேண்டுமென்றே தங்களுக்கு தண்ணீர் வழங்குவதை தடுப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தலிபன்கள் அரசோ போதிய மழையின்மை மற்றும் ஆற்றில் நீரின் மட்டம் குறைவாக இருப்பதன் காரணமாக ஈரானுக்கு நீரை வழங்க முடியவில்லை என்று விளக்கம் அளிக்கின்றனர்.
எனினும், தண்ணீர் பிரச்சனை காரணமாக ஈரான் - ஆப்கான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதில் மே 27-ஆம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் ஈரானின் 2 ராணுவ வீரர்களும், தலிபான்களின் ஒரு ராணுவ வீரரும் பலியானார். மோதலுக்கு இரு தரப்பும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போதிய நீர் இல்லாததால் ஈரானின் பல பகுதிகள் வறட்சியை எதிர்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்து மத்திய கிழக்கு நாடுகளின் நிபுணர்கள் கூறும்போது, “ஆப்கானிஸ்தானுடனான தண்ணீர் தகராறு ஈரான் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. ஈரானில் உள்ள நீர் வளங்கள் கடுமையான அழுத்தத்தில் உள்ளன. நீர் பற்றாக்குறையே சமீபத்திய ஆண்டுகளில் பெரிய அளவிலான உள்நாட்டு அமைதியின்மைக்கு தூண்டுதலாக உள்ளது. அங்கு கந்த சில ஆண்டுகளாகவே அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன” என்று தெரிவிக்கின்றனர்.
மேலும், ஈரானில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாகுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் ஏற்கெனவே போராட்டங்களை தொடர்கின்றனர். அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் பொருளாதார நிலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கிடையில், தண்ணீர் பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றத்தின் மோசமான அச்சுறுத்தல் போர் மற்றும் அகதிகளின் நெருக்கடியை அதிகரிக்கும். ஏனெனில் நாடுகள் தாங்கள் வாழ்க்கைக்குத் தேவையான இயற்கை வளங்களுக்காக போராடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில் காலநிலை மாற்ற விளைவின் ஆபத்தான போக்கை உலக நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT