Published : 18 Jun 2023 04:24 AM
Last Updated : 18 Jun 2023 04:24 AM
ஜியாங்சு: கடந்த 3 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த கணவர், இயல்பு நிலைக்கு திரும்பியதால் சமூக இணையதள விளம்பரம் மூலம் கிடைத்த ரூ.21 லட்சம் நன்கொடையை திருப்பி அளிக்க சீன பெண் முடிவு செய்துள்ளார்.
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசிப்பவர் ஜியாங் லீ. இவரது மனைவி டிங். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில், ஜியாங் லீ கோமா நிலைக்கு சென்றார். அவரை, அவரது மனைவி டிங் உடனிருந்து கடந்த 3 ஆண்டுகளாக கவனித்து வந்தார். ஜியாங் லீயின் மருத்துவ செலவினங்களுக்கு சேமிப்பு பணம் முழுவதும் காலியானது. இதனால் சமூக இணையதளம் மூலம் தனது கணவரின் நிலையை எடுத்துக் கூறி நிதி திரட்டினார் டிங். மொத்தம் 4,055 நன்கொடையாளர்கள் நிதியுதவி செய்ததில் ரூ.21 லட்சம் நன்கொடை கிடைத்தது. அதோடு, ஜியாங் லீ விரைவில் குணமடைவார் என்ற ஆறுதல் தகவல்களையும் நன்கொடையாளர்கள் டிங்குக்கு அனுப்பி வந்துள்ளனர். இது டிங்கை மிகவும் நெகிழவைத்தது.
ஜியாங் லீ மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்புகள் மிகக் குறைவு என மருத்துவர்கள் தெரிவித்த போதிலும், கணவர் ஜியாங் லீயை அக்கறையுடன் கவனித்து வந்தார் டிங். அவரது உடலை படுக்கையில் திருப்பி போட்டு மசாஜ் செய்வது, கை, கால்களை அசைப்பது போன்ற பயிற்சிகளையும் அவர் தொடர்ந்து அளித்து வந்துள்ளார். இதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. மனைவி கூறுவதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. நடப்பது, பல் துலக்குவது, பேசுவது போன்ற பயிற்சிகளை டிங் அளித்தார். இதனால் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் ஜியாங் லீ.
இத்தகவலை சமூக இணையதளத்தில் தெரிவித்துள்ள டிங், நன்கொடை அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர் பெற்ற நன்கொடை களை திரும்ப செலுத்தும் முடிவையும் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT