Published : 25 Oct 2017 02:56 PM
Last Updated : 25 Oct 2017 02:56 PM
சவுதி அரேபியா விரைவில் மிதமான இஸ்லாமியத்துக்கு திரும்பும் என்று அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா தலைநகரமான ரியாத்தில் நடைபெற்ற சவுதி - சர்வதேச நாடுகளுக்குக்கு இடையேயான வர்த்தக முதலீடுகள் குறித்த நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முகமது பின் சல்மான் பேசியதாவது, "நாங்கள் இதற்கு முன்னர் எவ்வாறு இருந்தோமோ அதுவாகவே நாங்கள் இருக்கப் போகிறோம். சவுதி அரேபியா மிதமான இஸ்லாமியத்துக்கு விரைவில் திரும்பி அனைத்து மதங்களுக்கும் திறந்த நுழைவாயிலாக இருக்கப் போகிறது'' என்றார்.
மேலும் தீவிரவாத எண்ணங்களை ஊக்குவிப்பவர்களை ஒழிக்கும் நடவடிக்கையிலும் சவுதி ஈடுபட உள்ளது எனவும் சல்மான் தெரிவித்தார்.
சவுதியில் பெண்களுக்கு எதிராக பலவிதமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. எனினும் சமீப காலமாக சவுதி அரசர் சல்மான், இளவரசர் முகமது பின் சல்மான் போன்றோர் சில சீர்திருத்தங்களை கொண்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் பெண்கள் கார் ஓட்டுவதற்கான விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை முப்பது நாட்களுக்குள் வழங்குமாறும் அமைச்சரவை குழுவுக்கு சவுதி அரசர் உத்தரவிட்டார். இந்த ஆணை 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது
சவுதி அரசு குடும்பத்தின் இந்த நடவடிக்கைகள் அந்நாட்டின் முற்போக்குவாதிகளிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில் சவுதி மிதமான இஸ்லாமியத்துக்கு திரும்பப் போகிறது என்று சவுதி இளவரசர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT