Published : 15 Jun 2023 08:43 AM
Last Updated : 15 Jun 2023 08:43 AM
ஏதென்ஸ்: லிபியாவிலிருந்து ஏதென்ஸ் நகருக்கு சட்டவிரோதமாக வந்த அகதிகள் அங்கிருந்து இத்தாலி செல்ல இருந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அங்குள்ள மீன்பிடி படகில் அவர்கள் ஏறி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது அந்த படகு கிரீஸ் கடலோர பகுதியில் கவிழ்ந்தது. படகு கவிழ்ந்த தகவலை தொடர்ந்து கடற்படைக் கப்பல் களுடன் ராணுவ விமானம், ஹெலிகாப்டர், 6 மீட்புப் படகுகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.
இந்த விபத்தில் சிக்கி 17 அகதிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 100 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றின் காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘லிபியாவிலிருந்து வந்த அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அதிகாலை முதல் மீட்பு நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது.
படகில் சென்ற யாருமே லைஃப் ஜாக்கெட் அணியவில்லை. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக தெரியவில்லை. இவர்கள் லிபியாவில் இருந்து இத்தாலி சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.
மீட்கப்பட்ட 100 பேரில் 4 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT