Published : 12 Jun 2023 04:07 PM
Last Updated : 12 Jun 2023 04:07 PM
நியூயார்க்: கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் பாலின சமத்துவத்தை எட்டுவதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, தேக்கநிலையே நிலவுகிறது என்று ஐ.நா. வளர்ச்சித் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான ஐநா வளர்ச்சித் திட்டம் (யுஎன்டிபி) பாலின சமத்துவம் தொடர்பான அறிக்கையை இன்று (ஜூன் 12) வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் வரும் 2030-க்குள் பாலின சமத்துவத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டிருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் பாலின பாகுபாட்டைக் குறைப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 2010 முதல் 14 வரையிலும், 2017 முதல் 2022 வரையிலும் 80 நாடுகளில் எடுக்கப்பட்டது. உலக மக்கள் தொகையில் 85 சதவீதம் பேரை உள்ளடக்கும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யுஎன்டிபி என்பது உலக நாடுகளுக்கு வறுமையை ஒழிப்பது, நீடித்த பொருளாதார வளர்ச்சியை எட்டுவது, ஒட்டுமொத்தமாக மனித வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியனவற்றில் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும், தொழில்நுட்ப உதவிகளும் வழங்கும் ஐ.நாவின் அங்கமாகும். இந்த அமைப்பானது பாலின சமநிலைக்காகவும் முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது. இந்நிலையில், இந்த அமைப்பின் அண்மை அறிக்கை கவனம் ஈர்த்துள்ளது.
யுஎன்டிபி அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: உலகம் முழுவதும் ஆண்கள், பெண்கள் மத்தியில் பாலினம் சார்ந்த சமூக விதிமுறைகள் இப்போதும் நிலவுகின்றன. அந்த வகையில் 90 சதவீத மக்கள் ஏதாவது ஒரு வகையில் பாலின பாகுபாட்டுக்கு உள்ளாகின்றனர். உலகளவில் மகளிர் உரிமைக் குழுக்கள், டைம்ஸ் அப் (Time's Up), மீ டூ (Me Too) போன்ற சமூக இயக்கங்கள் உருவாகியிருந்தாலும்கூட பாலினம் சார்ந்த சமூக விதிமுறைகள், கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட மனித வளர்ச்சிக் குறைபாட்டின் விளைவாக பாலின சமத்துவமின்மை இன்னும் அதிகரித்துள்ளது. கரோனா தாக்கத்தால் பெண்கள் வருமானம் குறைந்துள்ளது. அதனால் உலகளவில் பாலின சமத்துவத்தை எட்டுவதும் தடைபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-ல் 9 ஆண்கள் அப்படித்தான்: அந்த அறிக்கையின்படி 10-ல் 9 ஆண்ட்கள் பெண்களுக்கு எதிராக ஏதேனும் ஒருவகையிலாவது பாலின பாகுபாட்டைக் காட்டுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் ஆய்வு நடத்தப்பட்ட குறிப்பிட்ட அந்த 10 ஆண்டுகளில் திருந்தவே இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இரு தசாப்தமாக பாலின சமத்துவம் தேக்கநிலையிலேயே உள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 80 நாடுகளில் பாலினப் பாகுபாடு 86.9 சதவீதத்தில் இருந்து வெறும் 84.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 69 சதவீதம் பேர் உலகளவில் இன்றும் ஆண்கள் தான் சிறந்த அரசியல் தலைவர்களாக இருக்கின்றனர் என்று கூறியுள்ளனர். 27 சதவீதம் பேரே ஜனநாயகம் செழிக்க ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் அரசியல் உரிமை வேண்டும் என்று சொல்லியுள்ளனர். அதேபோல் 46 சதவீதம் பேர், ஆண்களுக்கு பணி உரிமை அதிகமாக இருப்பதாகக் கருதுகின்றனர். 43 சதவீதம் பேர் ஆண்கள்தான் சிறந்த தொழிலதிபர்களாக உருவாவார்கள் என்று நம்புகின்றனர்.
அதேபோல் ஆய்வில் பங்கேற்ற 4-ல் ஒருவர் ஆண்கள் தங்களின் மனைவியை அடிக்கின்றனர் என்று கூறியுள்ளனர். 28 சதவீதம் பேர் பல்கலைக்கழகக் கல்வி ஆண்களுக்கே மிகவும் முக்கியம் என்று நம்புகின்றனர்.
கல்வி எப்போதுமே பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை மேம்படுத்தும் திறவுகோளாகப் பார்க்கப்பட்டாலும், கல்வி மற்றும் வருமானத்துக்கு இடையே ஒரு நொறுங்கிய சங்கிலியே இருப்பதாக யுஎன்டிபி ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளில் 57 நாடுகளில் பெண்கள் ஆண்களை விட அதிகம் கல்வி கற்றவராக இருந்தாலும்கூட வருமான இடைவெளி என்பது 39 சதவீதமாக உள்ளது.
இது குறித்து யுஎன்டிபி-யின் ஆராய்ச்சி மற்றும் உத்தி வகுப்பாளர் பிரிவு ஆலோசகரும் இந்த அறிக்கையின் இணை எழுத்தாளருமான ஹெரிபெர்டோ தாபியா கூறுகையில், "இதுபோன்ற பாலினப் பாகுபாடுகள் பெண்களுக்கு பெரும் தடையாக உள்ளன. அவை இப்போதும் உலகம் முழுவதும் பெண்கள் உரிமையை சிதைத்துக் கொண்டிருக்கின்றன. பாலினப் பாகுபாடுடன் கூடிய சமூக விதிமுறைகளை நாம் சீர் செய்யாவிட்டால் பாலின சமத்துவத்தை நாம் எட்ட இயலாது. நீடித்த வளர்ச்சி இலக்குகளும் வெறும் கனவுதான்" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. அதன் கேப்ஷனாக, "களத்தை சமன் செய்வோம். சமத்துவத்தை நோக்கி நெறிமுறைகளை மாற்ற வேண்டிய நேரம் இது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Women still face an uphill battle.
Our Gender Social Norms Index shows that in the last decade, progress towards #GenderEquality has stagnated.
Let’s level the playing field. It’s time to shift norms towards equality. https://t.co/2YRa8xXFt6 #CheckYourBias pic.twitter.com/Gimi9DIHuL— UN Development (@UNDP) June 12, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT