Published : 10 Jun 2023 03:15 AM
Last Updated : 10 Jun 2023 03:15 AM

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பார்ட்டிகேட் விவகாரம் காரணமாக தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

பார்ட்டிகேட் விவகாரம் என்ன?: போரிஸ் ஜான்சன் 2019ல் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார். அந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தொடங்கிய கரோனா தொற்று ஓரிரு மாதங்களிலேயே உலகை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. பிரிட்டன் மோசமான கரோனா பாதிப்புகளை சந்தித்தது. இரு தவணை தடுப்பூசிக்குப் பின்னரும் அங்கு கரோனா அலை ஓய்ந்தபாடில்லை.

கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில், விதிகளை மீறி அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனின் அதிகாரபூர்வ இல்லமான 10, டவுனிங் தெரு வீட்டில் வெகுவிமரிசையாக பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடப்பட்டது. அரசு அதிகாரிகள், போரிஸின் கன்சர்வேட்டிவ் கட்சி பிரமுகர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இங்கிலாந்தின் தற்போதைய பிரதமரும், அப்போதைய நிதி அமைச்சருமான ரிஷி சுனக் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்த விவகாரம் வெளிவர பூதாகரமானது. எதிர்கட்சிகள் இதை விமர்சனம் செய்ததோடு, போரிஸ் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதன்பின் நாடாளுமன்றத்தில் தனது செயலுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். “கரோனா விதிகளை மதிக்கும் லட்சக்கணக்கான பிரிட்டன் மக்களுக்கு என் செயல் எப்படி இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. இந்த அவை மூலமாக அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்று அப்போது போரிஸ் தெரிவித்தார்.

முன்னதாக, ஜூன் 2020-இல் அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதன்மூலம், பிரிட்டனின் பிரதமராக ஆட்சியில் உள்ள ஒருவர் மீது சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்படும் முதல் பிரதமராக அவர் ஆனார்.

இந்த விவகாரத்தில், குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்தப்பட்டுவந்தது. அந்தக் குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில், போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது கண்டுபிடிக்கத்து, இதனால் 10 நாட்கள் வரை அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய அக்குழு பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்தே எம்பி பதவி ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளார் போரிஸ் ஜான்சன். ராஜினாமா குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு எதிரான நடவடிக்கைகளைப் பயன்படுத்தி என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவது உறுதியாகிவிட்டது. நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுவது மிகவும் வருத்தமளிக்கிறது. என்றாலும் இது தற்காலிகம்தான்.

ஆனால், ஹாரியட் ஹர்மன் தலைமையிலான குழு, ஜனநாயக விரோதமாக, இவ்வளவு மோசமான சார்புடன் என்னை வெளியேற்றுவதை நினைத்து நான் திகைத்துபோயுள்ளேன். காரணம், நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினேன் என்பதற்கான ஒரு சிறிய ஆதாரத்தையும் இக்குழு வெளியிடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே, என்னைக் குற்றவாளியாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. எனினும், நான் உடனடியாக பதவி விலகுகிறேன். இடைத்தேர்தலை சந்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரிஷி சுனக் அரசு மீது சில குற்றச்சாட்டுகளையும் அவ்வறிக்கையில் போரிஸ் ஜான்சன் வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து அரசியலில் இது புதிய புயலை கிளப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x