Published : 09 Jun 2023 09:19 AM
Last Updated : 09 Jun 2023 09:19 AM
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையிலிருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற வழக்கில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு ஆவணங்களை எடுத்துச் சென்றது, சதித்திட்டம் தீட்டியது, நீதித்துறை செயல்பாட்டை முடக்கியது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று 4 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் அதிபர் பதவியில் தோல்வியுற்ற பின்னர் வெள்ளை மாளிகையை காலி செய்த டொனால்ட் ட்ரம்ப் முக்கிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அமெரிக்கச் சட்டப்படி அதிபராக இருந்தவர்கள் பதவிக் காலத்தில் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவ்வாறாக ஒப்படைக்காமல் 'க்ளாஸிஃபைட் டாக்குமென்ட்ஸ்' என்றழைக்கப்படும் மிக முக்கியமான ஆவணங்களை ட்ரம்ப் எடுத்துச் சென்றார் என்பதே குற்றச்சாட்டு.
இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ட்ரம்ப்பின் ஃப்ளோரிடா வீட்டில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது அந்தச் சோதனையை ட்ரம்ப் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதிபர் தேர்தலில் மீண்டும் தாம் போட்டியிடுவதைத் தடுக்கவே நீதித்துறையை ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ட்ரம்ப் மீது கிராண்ட் ஜூரி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. இது அவர் மீது பதியப்படும் இரண்டாவது குற்றச்சாட்டாகும். ஏற்கெனவே ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு (44) பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் சிக்கியிருக்கிறார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் இப்போது இரண்டாவதாக ஒரு வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளமான ட்ரூத் சோஷியலில், "நான் ஓர் அப்பாவி. ஒரு முன்னாள் அதிபருக்கு இப்படியெல்லாம் நேர வாய்ப்புள்ளதாக நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. என் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இது நிச்சயமான அமெரிக்காவுக்கு கருப்பு நாள். அமெரிக்கா இப்போது சரிவில் இருக்கிறது. ஆனால் நாம் அனைவரும் இணைந்து நாட்டை மீட்டெடுப்போம்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...