Published : 09 Oct 2017 05:04 PM
Last Updated : 09 Oct 2017 05:04 PM
இனவெறியைத் தூண்டியதாக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து சர்ச்சைக்குரிய சோப் விளம்பரத்தை நீக்கியது டவ் நிறுவனம்.
டவ் நிறுவனம் வெளியிட்ட சோப் விளம்பரத்தில் கறுப்பினப் பெண் தன்னுடைய சட்டையைக் கழட்டிய பிறகு வெள்ளை நிறப் பெண்ணாக தோன்றும் காட்சி வெளியானது. இந்த விளம்பரம் இனவெறியைத் தூண்டுவதாக சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இணையப் பயனாளிகள், கறுப்பினப் பெண் வெள்ளை நிறப் பெண்ணாக மாறும் டவ் சோப் விளம்பரத்தில் இனவெறித் தாக்கங்கள் உள்ளன என்று கூறியுள்ளனர். மேலும் கறுப்புத் தோல் அழுக்கு என்றும் வெள்ளைத் தோலே தூய்மையானது என்றுமே விளம்பரம் சொல்ல முற்படுகிறது என்று கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து டவ் நிறுவனத்தில் சர்ச்சைக்குரிய அந்தப் பதிவு நீக்கப்பட்டது. எனினும் அதன் ஸ்க்ரீன்ஷாட்டுகள் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன. அதில் சிலவற்றில் கறுப்பினப் பெண்ணே வெள்ளை நிறப் பெண்ணாக மாறியதற்கான படங்கள் காணப்படுகின்றன.
இதுகுறித்துக் கடும் கண்டனம் தெரிவித்த அட்லாண்டா பல்கலைக்கழக பேராசிரியர் அபிகைல் சிவெல், ''டவ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் குழு அடிப்படையில் இனவெறி கொண்ட குழு. சுத்தமான உடல் என்பது வெள்ளை நிற உடலல்ல. அதேபோல கறுப்பு நிற உடல்களும் அழுக்கானவை இல்லை. இத்தனை நாட்களாக எப்போதும் டவ் தயாரிப்புகளையே பயன்படுத்தி வந்தேன். இப்போது மாற்றத்துக்கான நேரம்'' என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட டவ் நிறுவனம், ''உண்மையான அழகின் பன்முகத் தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தாமல் விட்டுவிட்டோம். விளம்பரத்தில் நடித்த பெண்களின் நிறம் குறித்தும் கூறவில்லை. எனினும் இது நடந்திருக்கக் கூடாது. நடந்த சம்பவத்துக்காக உண்மையாகவும், வருத்தத்துடனும் மன்னிப்பு கேட்கிறோம்'' என்று கூறியுள்ளது.
சர்ச்சைக்குரிய இனவெறி விளம்பரத்தில் டவ் சிக்குவது இது முதல்முறையல்ல. முன்னதாக 2011-ல் டவ் பயன்படுத்துவதற்கு 'முன்னதாக' (Before), 'பின்னதாக' (After) முறையே கறுப்பின மற்றும் வெள்ளையினப் பெண்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT