Published : 18 Oct 2017 06:44 AM
Last Updated : 18 Oct 2017 06:44 AM
பாதுகாப்பு கவுன்சில், பொதுச் சபை, சர்வதேச நீதி மன்றம் உள்ளிட்ட ஆறு முக்கிய உறுப்புகள் கொண்டது ஐ. நா. சபை. இவற்றுடன், உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சில முகமை (ஏஜன்சி') அமைப்புகளும் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் - யுனெஸ்கோ எனப்படும், ஐ.நா. கல்வி, அறிவியல், கலாச்சார நிறுவனம். அரசியல் பொருளாதார விஷயங்களில் தலையிடாத, ஆர்வம் காட்டாத பரம சாது, இந்த அமைப்பு.
இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அக்டோபர் 12-ம் தேதி அறிவித்தார். என்ன காரணம்...? அதற்கு முன்னதாக, யுனெஸ்கோ'வின் நோக்கம்தான் என்ன...? கல்வி, அறிவியல், கலாச்சாரம் மூலம் சர்வதேச அமைதி, பாதுகாப்பு, சட்டத்தின் மாட்சி, மனித உரிமைகள் போன்றவற்றைப் பாதுகாப்பதே யுனெஸ்கோவின் முக்கிய குறிக்கோள்.
2010-ல் பெத்லஹேம்' உள்ளிட்ட இடங்களை தேசிய புராதனச் சின்னங்களாக்கி, அங்கெல்லாம் புனரமைப்பு செய்யப் போவதாக இஸ்ரேல் அறிவித்தது. இதனை பாலஸ்தீன மக்கள் எதிர்த்தனர். அதே ஆண்டு அக்டோபரில், இப்புராதன சின்னங்களில் சில, பாலஸ்தீன எல்லைக்குள் வருவதால் இங்கு இஸ்ரேல் எந்தப் பணியும் செய்யக் கூடாது; மீறி ஈடுபட்டால் அது, சர்வதேச சட்டங்களை மீறுவதாகும் என்று யுனெஸ்கோ நிர்வாகக் குழு கூறியது.
இப்படித் தொடங்கிய யுனெஸ்கோ - இஸ்ரேல் வாக்குவாதம் முற்றிக்கொண்டே வந்தது. கடந்த 2011-ல், ஐக்கிய நாடுகள் சபையில் இன்னமும் அனுமதிக்கப்படாத, பார்வையாளர்' நாடாக மட்டுமே இருக்கிற பாலஸ்தீனத்தை, முழுத் தகுதியுள்ள நாடாக, சேர்த்துக் கொண்டது யுனெஸ்கோ. இஸ்ரேலின் புராதன சின்னங்கள் தொடர்பாக, பல ஆண்டுகளாக குமைந்து கொண்டு இருந்த சச்சரவு, உச்ச கட்டத்தை எட்டியது. யுனெஸ்கோவின் இஸ்ரேல் விரோதப் போக்கைக் கண்டித்து, வெளியேறி விட்டது அமெரிக்கா.
யுனெஸ்கோ'வின் செலவுகளுக்கு அமெரிக்க நிதி உதவி மிகத் தேவை. அது முழுமையாக நின்று போவதால், யுனெஸ்கோ தொடர்ந்து செயல்படுமா..? அல்லது அதன் பணிகள் முற்றிலுமாக முடங்கிப் போய் விடுமா..? இதுதான் உண்மையில், மில்லியன் டாலர்' கேள்வி.
யுனெஸ்கோவின் ஓராண்டுக்கான நிதித் தேவை சுமார் 254 மி. டாலர். இத்தொகையில் 126 டாலருக்கு மேல், அரசுகள் வழங்கும் நன்கொடை வழியாகவே வருகிறது. இதில், அமெரிக்காவின் பங்களிப்பு மட்டுமே 22% என்கிறது அதிகாரபூர்வமற்ற ஒரு தகவல்.
இஸ்ரேலும் யுனெஸ்கோவில் இருந்து வெளியேறிவிட்டது. மேலும் சில நாடுகளும் விலகலாம். கடுமையான நிதி நெருக்கடி உருவாக இருக்கிறது. இதனை யுனெஸ்கோ எப்படி சமாளிக்கப் போகிறது...? தற்போது மேற்கொண்டு வரும் பணிகளை சுருக்கிக் கொண்டு, கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு போன்றவற்றில் மட்டும் அதிக கவனம் செலுத்தலாம் என்று யுனெஸ்கோ முடிவெடுக்கக் கூடும்.
கல்வி, கலாச்சாரத்துக்குள் அரசியல் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று ஏன் சொல்கிறோம் புரிகிறதா..? மாநிலம், தேசம், சர்வதேச அளவில் அது மோசமான பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதற்கு, யுனெஸ்கோவில் நுழைந்துவிட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன அரசியல், ஓர் அழியாத சாட்சியம். சிறியோரும் வஞ்சகரும் உள்ளூரில் மட்டுமல்ல; உலக அரசியலிலும் இருக்கத்தானே செய்கின்றனர்...? யுனெஸ்கோ, தப்பிப் பிழைத்து, ஆல் போல் தழைக்க வாழ்த்துவோம். வேறு என்ன சொல்ல..? வேறு என்ன செய்ய..?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT