Published : 20 Feb 2023 06:25 AM
Last Updated : 20 Feb 2023 06:25 AM
சிறந்த புலவராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் விளங்கியவர் நமச்சிவாயம். வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் 1876 பிப்ரவரி 20-ம் தேதி பிறந்தார். 12 ஆண்டுகள், தண்டையார்பேட்டையிலிருந்து மயிலாப்பூருக்கு ஞாயிறுதோறும் நடந்தே சென்று பாடம் கேட்டுவந்தார். இவர் 16-வது வயதில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 1902 முதல் 1914 வரை சென்னை வேப்பேரியில் இருந்த எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் (தற்போது புனித பால்ஸ் பள்ளியில்) தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
1914-ல் பெண்களுக்கென இராணி மேரிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார். சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக 1920 முதல் 1934 வரை பணியாற்றினார். 1905 வரை மாணாக்கர் தமிழ்ப் பாடங்களைப் படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையைப் போக்க நமச்சிவாயரே தமிழ்ப்பாட நூல்களை எழுதத் தொடங்கினார். எஸ்.எஸ்.எல்.சி, இன்டர் மீடியட், பி.ஏ. ஆகிய வகுப்புகளில் இவரது பாட நூல்களே இடம்பெற்றன. இவரது நினைவைப் போற்றும் வகையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் "நமச்சிவாயபுரம்" என்ற குடியிருப்புப் பகுதியும் இவரின் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்க்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT