Published : 06 Feb 2023 06:01 AM
Last Updated : 06 Feb 2023 06:01 AM
பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர், ‘எல்லை காந்தி’ என்று போற்றப்பட்டவர் கான் அப்துல் கபார்கான். 1890 பிப்ரவரி 6-ம் தேதி அன்றைய பஞ்சாப் மாகாணம் உத்மான்ஜாய் கிராமத்தில் பிறந்தார்.
பஷ்தூன் எனப்படும் பழங்குடியினப் பிரிவை சேர்ந்தவர். எட்வர்டு மிஷன் பள்ளியிலும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். பஷ்தூன் மக்கள் கல்வியறிவு இல்லாமல் அறியாமை, வறுமையில் வாடுவதைக் கண்டு தான் 20 வயதை எட்டியபோதே பள்ளிக்கூடம் திறந்தார்.
காந்தியின் அகிம்சை கொள்கையால் கவரப்பட்டு அரசியலில் நுழைந்தார். 1919-ல் ஆங்கிலேய அரசை எதிர்த்து இவர் கூட்டிய பொதுக்கூட்டத்தில் 5,000 பேர் திரண்டனர். ‘அஞ்சுமான்’ அமைப்பு மூலம் கல்வி கற்பித்தல், அன்பு வழியை போதித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார். இந்த பணிகளும் எனக்கு தொழுகை போன்றதே என்று கூறுவாராம். பக்தூன் இதழ் தொடங்கி சமூக சீர்திருத்தம் குறித்து பல கட்டுரைகள் எழுதினார்.
காங்கிரஸ் தலைவர் பதவி அவரைத் தேடி வந்தபோதும், மறுத்துவிட்டார். இஸ்லாமும் அகிம்சையும் ஒன்றிணைந்தது என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, பாலின சமத்துவத்தை வலியுறுத்தினார். எளிமையாக வாழ்ந்தார். இவருக்கு பாரத ரத்னா விருது 1987-ல் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT