Published : 02 Feb 2024 04:00 AM
Last Updated : 02 Feb 2024 04:00 AM
மறைமலையடிகளால் ‘தனித்திறமார் பேரறிஞர்’ என்று பாராட்டப்பட்டவர் பா.வே.மாணிக்க நாயக்கர். சேலம் மாவட்டம் பாகல்பட்டியில் 1871 பிப்ரவரி 2-ம் தேதி பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே கவிபாடும் ஆற்றல் கொண்டிருந்தார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தார். மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று 4 பவுன் தங்கப் பதக்கம் பரிசாக வென்றார்.
பொதுப்பணித் துறையில் கட்டுமான பொறியாளராக 1896-ல்சேர்ந்தார். திருச்சியில் பணியாற்றியபோது, ஞாயிறுதோறும் புலவர்களை வரவழைத்து இலக்கிய உரையாடல் நிகழ்த்துவார். 1919-ல் கூட்டப்பட்ட புலவர்கள் மாநாட்டில், உலகின் அனைத்து மொழிகளில் உள்ள சொற்களையும் தமிழில் எழுத முடியும் என்று நிரூபித்தார்.
தொல்காப்பியத்தில் உள்ள சந்தேகங்களை ந.மு.வேங்கடசாமிக்கு கடிதமாக எழுதினார். அந்த கடிதங்களை தொகுத்து ‘தமிழ்வகைத் தொடர் தொல்காப்பிய ஆராய்ச்சி’ என்ற நூலாக வெளியிட்டார்.
‘செந்தமிழ்ச் செல்வி’ இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கிலும் புலமை பெற்றிருந்தார். அறிவியல் சிந்தனையாளராகவும் திகழ்ந்து கணக்கியல் முறைகளைக் கண்டறிந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT