Published : 20 Oct 2023 04:00 AM
Last Updated : 20 Oct 2023 04:00 AM
தமிழ் இலக்கிய உலகில் அசைக்க முடியாத இடம்பிடித்த பெண் படைப்பாளி ராஜம் கிருஷ்ணன். இவர் 1925-ல் திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்தார். உயர்கல்வி மறுக்கப்பட்டு இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். கூட்டுக் குடும்பத்தின் அழுத்தத்தில் இருந்தார். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சமையலறையைக் கழுவித் தள்ளிவிட்டு அதன் ஈரம் காயாத தரையில் இரவு நேரத்தில் உட்கார்ந்து எழுதுவார். எழுதுவதற்குக் காகிதம் வேண்டுமே? கடையில் பெரிய தாள்களில் வழங்கப்பட்ட ரசீதுகளின் மறுபக்கத்தைப் பயன்படுத்துவார். அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகள் குறித்து எழுதினார். தென்னிந்திய மொழிகளையும், ஆங்கிலத்தையும் சுயமாகக் கற்று அவற்றில் புலமை மிக்கவராக மாறினார்.
கணவருக்கு மின் வாரியத்தில் வேலை என்பதால் வேறு ஊர்களில் வசிக்க நேர்ந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நாவல்கள் எழுதினார். நீலகிரியில் வாழும் படுகர்களின் வாழ்க்கை சூழலை விவரித்தது ‘குறிஞ்சித் தேன்’ நாவல்.
‘சேற்றில் மனிதர்கள்’ மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘வேருக்கு நீர்’ ஆகிய இரண்டும் அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை மையப்படுத்திய நாவல்கள். தமிழ்ச் சமூகம் பயனடைய தனது படைப்பாற்றலை வழங்கிய ராஜம் கிருஷ்ணன் 2014 அக்டோபர் 20-ம் தேதி காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT