Published : 08 Sep 2023 04:00 AM
Last Updated : 08 Sep 2023 04:00 AM

இன்று என்ன? - வயலின் வித்தகர் வைத்தியநாதன்

பல்துறை கலைஞர், வயலின் வித்தகர் வைத்தியநாதன் 1935-ல் குன்னக்குடியில் பிறந்தார். இதனால் குன்னக்குடி வைத்தியநாதன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இசையின் மீது இருந்த ஆர்வத்தால் 12 வயதிலிருந்து கச்சேரிகளில் பங்கேற்றார்.

காரைக்குடியில் ராமானுஜ ஐயங்காருடன் நடத்திய இசை நிகழ்ச்சியில் பக்க வாத்தியமாக வயலின் வாசித்தமையே வைத்தியநாதனின் முதல் வயலின் அரங்கேற்றம் ஆகும். கர்நாடக இசை, திரைப்பட இசையோடு பறவைகள், மிருகங்களின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும் இழைத்து வயலின் வாசித்து ஜனரஞ்சகப்படுத்தினார்.

1969-ல் ’வா ராஜா வா’ திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார். 1970-ல் ’திருமலை தென்குமரி’ திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது. ’தெய்வம்’, ’மேல்நாட்டு மருமகள்’, ’திருவருள்’, ’கந்தர் அலங்காரம்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தார். 1983-ல் ’தோடி ராகம்’ திரைப்படத்தை தயாரித்தார். வைத்தியநாதன் சில திரைப்படங்களில் கவுரவ வேடமிட்டு நடித்துள்ளார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக பதவி வகித்தார். தமிழ் இசைச் சங்கம் 1989-ல் இசைப்பேரறிஞர் விருது, 1993-ல் சங்கீத நாடக அகாடமி விருது, 1996-ல்இந்திய அரசு பத்ம விருது வழங்கி கவுரவித்தன. 2008 செப்டம்பர் 8-ம் தேதி 73 வயதில் மாரடைப்பால் காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x