Published : 28 Feb 2023 06:15 AM
Last Updated : 28 Feb 2023 06:15 AM
பள்ளிகளில் வருடா வருடம் ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாக்கள் என தனி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இவற்றில் பொதுவாக களையப்பட வேண்டியவற்றை கொஞ்சம் சுட்ட வேண்டி இருக்கிறது.
பொன்னாடைகளும் மாலைகளும்: பொதுவாகவே வெளியிலிருந்து வரும் விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு தருவார்கள். அப்போது எதற்கு சால்வை கொடுக்கிறார்கள் என இன்று வரையில் புரியவில்லை. அவை பெருமைக்காக மட்டுமேபோர்த்தப்படுகின்றது. அதனை மாற்றிடலாம்.
அட்டையிட்ட புத்தகங்கள்: அடுத்து பாராட்டும்படியாக, புத்தகங்கள் பரிசளிக்கும் பழக்கம் உருவாகி இருக்கிறது. ஆனால் அந்த புத்தகத்திற்கு ஒரு வண்ணத்தாள் சுற்றிக் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அன்பளிப்பாகக் கொடுக்கும் புத்தகம் என்ன புத்தகம் என்று மேடையில் அறிவிக்கலாம்.
இதனால் சில நன்மைகள் உண்டு. தேடி நல்ல புத்தகங்களை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்வார்கள். மேலும் அன்பளிப்பு தரும்போது அந்தப்புத்தகத்தை சுருக்கமாக அறிமுகப்படுத்தலாம். மேலும் முக்கியமான ஒன்று அது ஏன் புதிய புத்தகமாகவே இருக்கவேண்டும். வாசித்த, நல்ல நிலையில் உள்ள புத்தகங்களையும் பரிசளிக்கலாம்.
நேரம் காப்போம்: எந்த விழா என்றாலும் குறைந்தது அரைமணி தாமதமாகவே தொடங்கப்படுகிறது. குழந்தைகளின் மனதில் இதெல்லாம் ஆழமாகப்பதியும். 10 மணிக்கு நிகழ்ச்சி என்றால் 2-3 நிமிடங்கள் முன்னர்-பின்னர் தொடங்கலாம். அதற்கு மேல் எந்தக் காரணம் என்றாலும் தாமதப்படுத்தக் கூடாது. வெளியிலிருந்து விருந்தினர் வர தாமதமானாலும் ஆரம்பித்துவிட வேண்டும்.
திட்டமிடல்: தாமதமாக தொடங்கக் காரணமே சரியான திட்டமிடுதல் இல்லாமையே. முந்தைய நாளே எல்லாம் இருக்கிறதா? மாணவர்களிடம் சொல்லியாகிவிட்டதா? விருந்தினரை அழைக்க ஏற்பாடு சரியாக இருக்கா? உள்ளிட்டவற்றை சரிபார்த்தாலே பெரும் சிக்கல்களை அகற்றிடலாம். எவ்வளவு திட்டமிட்டாலும் சில நடைமுறைச் சிக்கல்கள்இருக்கவே செய்யும். அதற்காகத் திட்டமிடுவதை நிறுத்தக் கூடாது.
கூட்டு முயற்சி: ஒவ்வொரு விழாவும் ஒரு கூட்டு முயற்சி. பொறுப்புகளை பகிர்தல் வெற்றிக்கு வழிவகுக்கும். தங்களிடம் ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு பொறுப்பையும் ஏற்றுச் செய்யும்போது மாணவர்கள் உயர்வாக உணரத் தொடங்குவார்கள்.
ஆண்டு அறிக்கைகள்: நீண்ட ஆண்டு அறிக்கைகள் வாசிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். மிக முக்கியமான நிகழ்வுகளை மட்டும் குறிப்பிடலாம். விரிவான ஆண்டு அறிக்கைகளை அச்சிட்டு பள்ளி வளாகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டிவைக்கலாம். டிஜிட்டல் பிரதிகளை வேண்டுவோருக்கு மின்னஞ்சல் அல்லது வாட்ஸப்பில் பகிரலாம்.
நாடகங்களில் புதுமை: நாடகங்களில் புதுமை மிகவும்குறைவாகவே உள்ளது. நல்ல சிறுகதைகளை எடுத்து அதனை நாடகமாக்க முயற்சி மேற்கொள்ளலாம். இது மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும்.
எல்லா மாணவர்களும்... ஆசிரியர்களுக்கு பிடித்தமான அல்லது நிறைய மதிப்பெண் பெறும் மாணவர்களே மீண்டும் மீண்டும் மேடையேறுகின்றனர். சில இடங்களில் இது மாறினாலும் இன்னும் பெரும்பாலும் இப்படியே நடக்கின்றது. அனைவரையும் எப்படியாவது உள்ளே கொண்டுவர முயலவேண்டும்.
கூடுதல் கவனம்... விளையாட்டுப் போட்டிகள், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே கவனம் இருக்கிறது. செல்லப்பிராணி வளர்த்தல், குட்டிக்குட்டி மாற்றங்களைச் செய்தவர்கள், நிறைய வாசித்தவர்கள் உள்ளிட்ட இன்னும் பல திறமைகள், விநோத பழக்கம் இருப்பவர்களை மேடையேற்றலாம். இந்த வெளிச்சம் இதர மாணவர்களுக்கு தூண்டுதலாக இருக்கும்.
சக மாணவர்களின் திறமை: பெரும்பாலான விழாக்களில் சக மாணவர்களின் மேடை நிகழ்வுகளைக் காணும் வாய்ப்பு கிடைப்பதில்லை. மற்றொரு நிகழ்ச்சியில் இருந்தால் மேடைக்குப் பின்புறமோ அல்லது தனி அறைகளிலோ அடைந்து கிடைப்பார்கள். என்னதான் பயிற்சிகளின்போது பார்த்திருந்தாலும் வண்ண ஆடைகளுடன், முழு ஒப்பனைகளுடன் வண்ண விளக்குகளுடன் மேடையில் பார்ப்பதற்கு ஈடாகாது. மாற்றுச் சிந்தனைகள் மூலமும் திட்டமிடல் மூலமும் எளிதாக இதையும் சாத்தியப்படுத்தலாம்.
இவை இப்போதைக்குப் புதுமையாக இருக்கலாம், சில வருடங்களில் இதனையும் மீள் உருவாக்கம் செய்ய வேண்டிவரும். மாற்றம் மட்டுமே மாறாதது. திட்டமிட்டு மாற்றுவோம்.
- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர்; தொடர்புக்கு: umanaths@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT