Published : 27 Feb 2023 06:15 AM
Last Updated : 27 Feb 2023 06:15 AM
ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் ஒரு நடிகர் உறங்கிக் கொண்டிருக்கிறார். தொடக்கப் பள்ளிக் குழந்தைகள் கற்பனைத்திறன் நிரம்ப பெற்றவர்கள். உறங்கிக் கொண்டிருக்கும் நடிகரை எழச் செய்து பாருங்கள்! கற்றல் கற்பித்தல் சுலபமாகிவிடும்.
"நாடகம் போடலாமா!" எனக் கேட்டேன். வகுப்பறை நிசப்தம் ஆனது.
எல்லோரும் நடிக்கிறோம். எல்லோரும் நாடகத்தில் பங்கு வகிக்கிறோம் என்றேன்.
"சார், எனக்கெல்லாம் நடிக்க வராது. சார், எனக்குச் சரியா பேச வராது. சார், என்னைக் கேலி பண்ணுவானுங்க..." இப்படி பல குரல்கள்.
வட்டமாக நிற்கச் சொன்னேன். முகத்தில் மகிழ்ச்சியை வெளிபடுத்துங்க என்றேன். எல்லாரும் சிரித்தனர். அடுத்தவங்களுக்குத் தெரிகிற மாதிரி என்றேன். ஒருவன் 'ஈஈஈஈ ' எனப் பல்லைக் காட்டி சிரித்தான். மற்றொருவன் 'கலகல' என சிரித்தான். அடுத்தவன் வயிறு குலுங்க சிரிக்க ஆரம்பித்தான். வகுப்பறையில் மகிழ்ச்சி பொங்கி வழிய ஆரம்பித்தது. வகுப்பறையில் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
துக்கம் என்றேன். அனைவரும் அழ ஆரம்பித்தனர். ஆனாலும், சிலர் தயங்கினர். ஒருவன் தேம்பி தேம்பி அழுது காண்பித்தான். கைதட்டிப் பாராட்டினேன். கோபம் என்றேன். தயங்கியவர்களும் இப்போது கோபம் கொண்டனர். அதுமட்டுமல்ல கையும், காலும் இணைந்தது. சிலரின் நாக்கும் மடித்து கோபத்தில் பங்கு கொண்டது. கண்கள் சிவந்தன. கவலை என்றேன். முகங்கள் சோகமாகின. வகுப்பறைகலகலப்பானது. உறங்கிக் கொண்டிருந்த நடிகர் விழித்துக் கொண்டார்.
‘போலச் செய்தல்’ - அனைவரையும் மைதானத்திற்கு அழைத்துச் சென்று இரு குழுவாகப் பிரித்தேன். ஒரு குழுவினரைத் தூரத்தில் நின்று தங்களுக்குப் பிடித்த விசயத்தைச் செய்ய சொன்னேன். இந்தக் குழுவினரிடம், அக்குழுவிலுள்ள மாணவனின் பெயரைக் கூறி, அவனைப்போல் செய்ய வேண்டும் என்றேன்.
அவன் தலையை ஆட்டி பேசிக் கொண்டிருந்தான். அனைவரும் தலையாட்டி பேசுவதுபோல் நடித்துக்காட்டினர். 'போலச் செய்தல்' ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள நடிகனை மெருகேற்றியது. மற்றொருவன் பெயரைச் சொல்லி அவனைப் போல என்றேன். அனைவரும் அவனைப்போலவே செய்தனர். ஒவ்வொருவரைபோல் நடித்துக் காட்டினார்கள். இச்செயல் 10 நிமிடங்கள் தொடர்ந்தது.
அந்தக் குழுவினரை அழைத்தேன். இருவர் இருவராக இணைந்து கொள்ளுங்கள் என்றேன். ஒருவர் கண்ணாடியாகச் செயல்பட வேண்டும். எதிரில் உள்ளவர் என்ன செய்தாலும் செய்ய வேண்டும். ஒருவன் தலைவாரினான். எதிரில் உள்ளவனும் தலைவாரினான். ஒருவன் அழுதான். எதிரில் உள்ளவனும் அழுதான். நவரசங்கள் வெளிப்பட்டன. வகுப்பறை கலகலப்பானது.
எல்லோரும் நடிக்கிறோம்! - மிகப் பெரிய வட்டம் வரைந்து 10 மாணவர்களை அழைத்தேன். அந்த வட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி ஒருவர் மீது ஒருவர் மோதாமல் நடக்க கூறினேன். முதலில் மெதுவாக, பின்பு வேகமாக நடக்கச் செய்தேன். எதிரில் ஒருவரை சந்தித்தால், அவரது கண்களைப் பார்த்து , "வணக்கம்" என புன்னகையுடன் கூற வேண்டும். அங்கும், இங்கும் என சுற்றி சுற்றி வந்து ஒருவருக்கொருவர் கண்களைப் பார்த்து வணக்கம் செலுத்தினார்கள். முட்டல் மோதல் இல்லை. அனைவரும் பயிற்சி பெற்றனர்.
அடுத்த பயிற்சி. அருகில் ஒருவர் இருப்பதாக நினைத்து பெயர் சொல்லி அழைக்கக் கூறினேன். அனைவரும் சத்தமாக அழைத்தார்கள்." டேய்! பக்கத்தில்தானே இருக்கான். இப்படியா சத்தமா கூப்பிடுறது?" என ஒரு மாணவி கேட்டாள். அனைவரும் மெதுவாக அழைத்தனர். இப்போது தூரத்தில் என்றேன். சத்தம் அதிகரித்தது. வெகு தூரத்தில் என்றேன். உரத்த சத்தம்.
இப்ப சொல்லுங்க. நாடகம் போடலாமா எனக் கேட்டேன். அனைவரும் உற்சாகமாக "எல்லோரும் நடிக்கிறோம், கலக்குறோம்" என்றனர். குழந்தைகள் நவரசங்களை வெளிப்படுத்தவும், மேடையினை முழுமையாகப் பயன்படுத்தவும், கண்களைப் பார்த்து பேசவும், குரல் ஏற்ற இறக்கத்துடன் பேசவும் கற்றுக் கொண்டனர். முயன்று பாருங்கள். கற்றல் கற்பித்தல் சிறக்கும்.
- கட்டுரையாளர்: தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை-9.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT