Published : 21 Feb 2023 06:18 AM
Last Updated : 21 Feb 2023 06:18 AM
இருபதாண்டுகட்கு முன்னால் நிலைமை இப்படி இருக்கவில்லை. தமிழறிஞர் பெருமக்களின் முகங்கள் தென்பட்டன. நன்னன் போன்றோர் தொடர்ந்து நற்றமிழை வலியுறுத்திவந்தனர். நிகழ் என்கின்ற அரசியல், இலக்கியம் பேசும் இதழைக் கொணர்ந்த கோவை ஞானி போன்றோர்கூட ‘தமிழ்நேயம்’ என்ற இதழைத்தான் பிற்காலத்தில் நடத்தினர்.
இதழாசிரியர்கள் தமிழ்க்கேடான எதனையும் வெளியிடத் துணிந்தாரில்லை. தவறாக ஒன்றை எழுதும் துணிவு இன்றுள்ளதுபோல் அன்றிருக்கவில்லை. ‘எழுதியதை வைத்து வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்’ என்று தடித்தனமாக விளக்கும் எழுத்துச் செருக்கர்களும் இல்லை. பிறகு மெல்ல வலைப்பூக்கள் மொக்கு விட்டன. முதலில் எழுதத் தெரிந்தவர்கள்தாம் அங்கு வந்தார்கள் என்று நான் நம்பவில்லை.
கணினி தெரிந்தவர்கள்தாம் முதலில் வந்தார்கள். அங்கே ‘Filter bubble’ எழுத்துகள் இல்லை என்பதால் ஓரளவு எழுதவும் செய்தார்கள். அடுத்த பத்தாண்டுகள்தாம் இன்றுவரை பரந்திருக்கும் சமூக ஊடகங்களின் காலம். புதிது புதிதாய்ப் புறப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கினர்.
எண்ணிப் பாருங்கள், சமூக ஊடகம் என்பது மொழியை எழுத்தாலோ பேச்சாலோ தொடர்ந்து கையாளும் இடம். ஆடல் துண்டு என்றாலும் பின்னணியில் ஒரு பாடல் உண்டு. மொழிப் பரவலை ஆயிரம் மடங்கு மிகுதிப்படுத்தியுள்ள இந்தக் காலம் அதன் பிழைப் பரவலுக்கும் பெரும்பங்காற்றுகிறது.
இதழ்களின் செல்வாக்கு அருகத் தொடங்கியது முதல் இந்தப் போக்குதொடங்குகிறது. இணையப் பயன்பாட்டி னால் அச்சிதழ்களுக்கான வரவேற்பு குறைந்து கொண்டே சென்றது. நகரப் பேருந்து நிலையத்தில் நறுமணம் பரப்பியவை பூ-பழக்கடைகளும் இதழ்க்கடைகளும்தாம்.
திடுமென்று இதழ் விற்பனைக் கடைகள் குறைந்து காணப்பட்டன. ஓர் எழுத்து இன்னோரிடத்தில் சரிபார்க்கப்பட்டும் சீர்திருத்தப்பட்டும் வெளியிடப்பட்டது இதழ்களில்தான். இதழாசிரியர்கள் அப்பொறுப்பினைச் செவ்வனே செய்தனர். மலிவான கதைகளே என்றாலும் பிழையாக இருக்கவில்லையே.
தமிழ் மொழியைப் போகிற போக்கில் இடக்கையால் கையாள்வது காலக்கொடுமை. இன்றைய நிலை இது. மொழியின் ஒவ்வொரு சொல்லும் நூறு நுண்மைகளின் உரமேறிக் கிடைத்த விளைச்சல். அறிதோறும் அறியாமை கண்டற்றால் என்பது மொழியறிவிற்கும் பொருந்தும். தொடர்ச்சியான கல்வி யால் மொழிப்புலமை கைவரும். அம்முனைப்பைத் தான் காணவில்லை. மொழியை எழுத்திலும் பேச்சிலும் கையாள்கின்ற சமூக ஊடகக் கூட்டத்திற்கு அந்தப் பெரும் பொறுப்பு இருக்கிறது. இன்றைக்குத் திடீரென்று ‘இளைஞ்சர்’, ‘கலைஞ்சர்’ என்று ஒலிக்கின்றார்கள். ஒலிப்பில்கூடப் பிழைப்போக்குகள் செழித்துப் பரவியது எப்படி ?
இருபதாண்டுகட்கு முன்னர் எழுதத்தொடங்கியவர்கள் எண்பது, தொண்ணூறுகளில் பள்ளியில் படித்தவர்கள். அவர்கள் தமிழ் மொழியைப் பழுதறக் கற்பித்த அரசுப் பள்ளிகளின் மாணாக்கர்கள். பள்ளியின் அரிமாக்களாகத் தமிழாசிரியர்கள் வலம்வந்த காலம் அது. இன்று எழுத வந்திருப்பவர்களில் பெரும்பான்மையர் ஆங்கிலவழிக் கல்வி பயின்று வந்தவர்கள். அவர்கள் தமிழ் மொழியை ஆங்கிலத்தோடு கலந்து கற்றவர்கள். அதனால், தமிழும் செம்மையாயில்லை. ஆங்கிலமும் அரைகுறை.
தமிழ் மொழியானது எல்லாக் கல்விக்கூடங் களிலும் செறிவாகக் கற்பிக்கப்பட வேண்டும். தமிழ்க் கல்வி இங்கே இரண்டாமிடத்தில் இருக்கிறது. பள்ளிக் கல்வியளவிலேயே தமிழை முற்று முழுதாகக் கற்பித்து வளர்க்க வேண்டும். இல்லையேல் எந்தக் கல்லூரிப் படிப்பாயினும் மொழிக் கற்பிப்பும் தொடரவேண்டும். மொழியையும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பள்ளிக் கல்வியளவிலேயே ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறோம்.
அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் இன்னபிற கல்வியையும் எந்த நிலையிலும் எளிதில் கற்றுக்கொள்ளலாம். மொழிக் கல்விக்குத்தான் இளமைப் புகட்டல் வேண்டும். தமிழாசிரியர்களைக் கேட்டால் ‘ஐந்துபாடவேளைகளைப் பெறுவதே பெரும்பாடாக இருக்கிறது’ என்கிறார்கள்.
ஒருவர் கல்லூரிக்குச் சென்று அறிவியலை விரிவாகக் கற்கட்டுமே, எட்டாம் வகுப்புவரை அல்லது பத்தாம் வகுப்புவரை - மொழிக் கல்விக்கென்று நாற்பது விழுக்காட்டு நேரம் தரப்பட்டால் தவறென்ன? மொழிதானே அறிவு ? ஏன்? எதற்கு? எப்படி? என்று தோண்டி அகழ்ந்தெடுக்கும் கருவி மொழிதானே? அதனைப் புகட்டாமல் அறிவியல் புகட்டி ஆவதென்ன ?
இன்று இவ்வளவு பெரும்பரப்பிலான பயன்பாட்டிற்குத் தமிழ் மொழி வந்திருக்கிறது. தமிழைக் கையாள்வோர் பெருகிய அளவிற்குத் தமிழறிஞர் தொகை வளரவில்லை என்பதைக் கவனித்தீர்களா? இருபதின்மர் மொழியைக் கொண்டு விளையாடுகின்றனர் என்றால், அதன் நடுவரைப் போன்றவர் தமிழறிஞர். இங்கே ஆயிரக்கணக்கானோர் விளையாடுமிடத்தில் நடுவரையே காணவில்லை.
தமிழ்க் கல்வியைப் பெறற்கரிய பேறாகக்கருதுமிடத்தில் நாம் இருத்தினோமா? தமிழறிஞர் பெருமக்களைச் சான்றோராகப் போற்றினோமா? இரண்டு கதைகளை எழுதினால் அவற்றை எடுத்துப் பேசுவதற்கு ஆளிருக்கிறார்கள். மொழிசார்ந்து பேசுவோரைப் பொருட்படுத்தினோமா? அவர்களைப் ‘பண்டிட்ஜீ’க்கள் என்று எள்ளவும் செய்தோம்.
கதைகளும் கவிதைகளும் காலப் போக்குகளின் அடையாளங்கள். இந்தக் காலகட்டத்தில் இப்படிப் பெருகின என்பதன் தடயங்கள். முற்காலத்தில் ஒவ்வோர் ஊருக்கும் ஒரு வாழ்க்கை இருந்தது. இன்று ஊர்களின் தோற் றங்கள்கூட ஒருமித்துவிட்டன. உங்கள் ஊரைப் போலவேதான் எங்கள் ஊரும் இருக்கின்றது. அவ்வாறே ஒவ்வோர் ஊராரின் வாழ்க்கையும் ஏறத்தாழ ஒன்றுபட்டுவிட்டது.
தொழில்சார்ந்துதான் பாடுகளைப் பாகுபடுத்த முடியும். இந்தப் பொதுநிலைப்பாடு பெருகிவிட்ட பிறகு எழுத்தும் கலையும் தனித்தன்மை காட்ட முடியாமல் தேங்கி நிற்கின்றன. இதுதான் மொழிசார்ந்த நம் கவனங்களைத் திருப்புவதற்கும் குவிப்பதற்கும் மிகச் சரியான நேரம் என்கிறேன்.
நமக்கிருக்கின்ற ஒரே பொதுச்சொத்து தமிழ்தான். நம்மை உறவாக, உற்றவராக, நட்பாக, உணர்வுத் தொடர்புடையோராகக் கருதவைப்பதும் அதுதான். அதற்கு நேரும் சிறுகுலைவையும் நாம் ஏற்க இயலாது.
எந்தத் தலைமுறையிடமிருந்து எத்தகைய செம்மையோடு அதனைப் பெற்றோமோ, அதே தகைமையோடு, முடிந்தால் மேலும் வளர்த்தெடுத்து, வளமாக்கி அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய பெருங்கடப்பாடு நமக்கு உள்ளது.
- மகுடேசுவரன் | கட்டுரையாளர்: கவிஞர் தொடர்புக்கு:kavimagudeswaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT