Last Updated : 21 Feb, 2023 06:28 AM

 

Published : 21 Feb 2023 06:28 AM
Last Updated : 21 Feb 2023 06:28 AM

உலக தாய்மொழி நாள் | உயிருக்குத் தாய்ப்பால், உணர்வுக்குத் தாய்மொழி!

தேவநேயப் பாவாணர்

தாய்மொழி, நம் தாயிடம் அருந்திய உயிர்ப் பாலுடன் இணைந்தது. நமக்குள் சிந்திக்கவும் பிறருடன் முதன்முதலில் உரையாடவும் கிடைத்த தகவல்தொடர்புக் கருவி. தாய்மொழி என்பதற்கான இலக்கணம் என்ன? தாய்மொழியைத் துல்லியமாக எப்படி வரையறுப்பது?

ஒரு மனிதன் மூன்று வயதிலிருந்து, தாய் வழியாக எந்த மொழியைத் தன்னியல்பாகப் பயின்று, பத்து வயது வரை எந்த மொழியைப் பேசுகிறானோ அதுவே அவனின் தாய்மொழி! அவன் சிந்திக்கும் மொழி! தன்னிடமும் தன்னொத்த தாய்மொழி பேசும் மற்றவர்களிடமும், அந்தக் காலகட்டம் கடந்தும் அவன் இயல்பாய் உரையாடும் மொழி!

பல மொழிகளில் ஒருவன் மேதைமை பெற்றிருப்பினும், அவன் தாய்மொழியில்தான் அவனால் சிந்திக்க முடியும். தாய்மொழியில் சிந்தித்தால்தான் அறிவு வளர்ச்சி ஏற்படும் என்பதைப் பல மொழியியல் அறிஞர்கள் அறிவியல்பூர்வமாக உறுதிசெய்துள்ளனர்.

தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம், மனித மூளையில் பதிவாகியுள்ள தாய்மொழியின் அபூர்வ ஆற்றலுக்கு ஓர் உதாரணம். அன்னிபெசன்ட் அம்மையாரால் சிறுவயதிலேயே தத்தெடுக்கப்பட்டு, ஐரோப்பாவில் வளர்க்கப்பட்ட ஜே.கிருஷ்ணமூர்த்தி யின் பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள மதனப்பள்ளி.

சிறு வயதிலேயே ஆங்கிலம் பயின்று, ஆங்கிலேய வாழ்க்கை முறையில் வளர்ந்தவர் அவர். ஆங்கில மொழியில் மட்டுமே பேசவும் எழுதவும் கற்றிருந்தார். ஒரு முறை அவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு படுத்த படுக்கையில், ஜன்னி நிலையில் மயக்கமுற்று தெலுங்கு மொழியில் புலம்பியிருக்கிறார்.

அந்தச் சொற்களின் அர்த்தம் புரியாமல் பக்கத்திலிருந்தவர்கள் குழப்பமடைந்துள்ளனர். தனது தாய்மொழியான தெலுங்கை ஒருபோதும் அவர்பேசியதே இல்லை என்பது கவனிக்கத்தக் கது. குழந்தைப் பருவ மூளைப் பதிவு உணர்ச்சிபூர்வமான ஒரு தருணத்தில் வெளிப்பட்டிருக்கிறது. இதுதான் தாய்மொழியின் ஆற்றல்!

நமது தமிழ் மொழியின் சிறப்புகள் பல. ஆனால், ஒரு மொழியின் பெயரிலேயே தாய்மொழி என்னும் அர்த்தம் தொனிக்கும் ஒரே மொழி, நம் தமிழ் மொழிதான். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் புகழ்பெற்ற மொழியியல் நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல்தான் முதன்முதலில் ‘தமிழ்’ என்கிற பெயர் தோன்றிய காரணத்தைப் பொதுவெளியில் முன்வைத்தவர் எனச் சொல்லப்படுகிறது.

அவர் ‘திராவிட’ என்கிற சொல்லே தமிழானது என்ற வாதத்தை முன்வைத்தார். அக்கருத்து தவறானது என்றும் ‘தமிழ்’ என்ற சொல்லிற்கான திசைச்சொல்லே (Exonym) ‘திராவிடம்’ என்றும் தேவநேயப் பாவாணர் தொடங்கிப் பல மொழியியல் அறிஞர்களும் சான்றுகளுடன் நிறுவினர்.

‘எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பிய விதி, பழந்தமிழ்ப் பெயர்களுக்கும் பொருந்தும். தமிழ் என்பதற்கு இனிமை, நீர்மை ஆகிய பொருள்களைத் தருகிறது நிகண்டு. ‘தம் மொழி’ என்னும் சொல்லின் மருவே ‘தமிழ்’ என்றொரு கருத்தும் உண்டு. தம் மொழி = தம்மொழி. தமிழி - தமிழ். அதாவது எவ்வாறு தம் ஆய் = தாய், தம் ஐயன் = தமையன் ஆயிற்றோ அவ்வாறு ‘தம் மொழி’ தமிழ் எனும் தனிச் சொல்லாயிற்று என்றும் சொல்லப்படுகிறது.

மொழிதல் என்றால் உரைத்தல், பேசுதல் என்பது பொருள். அவ்வகையில் தமது மொழிக்கு இட்ட பெயர் தமிழ் என்பது ஒரு கருத்து. அதே போன்று தம் இல் (குடி) = தமில் என்பதே தமிழ் ஆனது என்றும் ‘அமிழ்து’ (தாய்ப்பால்) என்கிற சொல்லை இடைவிடாமல் தொடர்ச்சியாக உச்சரித்துப் பாருங்கள்! ‘தமிழ்... தமிழ்...’ என்கிற ஓசை வரும். ‘அதுவே தமிழ்’ என்கிறார் தமிழறிஞர் இரா. இளங்குமரனார்.

இவ்வளவு சிறப்புகள் மிகுந்த நமது தாய்மொழியை நாம் எவ்வளவு தூரம் நேசிக்கிறோம் என்பது சட்டெனப் பதில் சொல்ல முடியாத கேள்விதான். உலகின் பார்வையிலிருந்து மறைந்து வாழும் சிறுசிறு பழங்குடி இனக் குழுக்கள் பேசிவரும் பல மொழிகள் இன்றைக்கு வேகமாக அழிந்துவருவதைப் பலமொழியியல் ஆய்வுகள் சுட்டுகின்றன.சராசரியாக ஒவ்வொரு 40 நாள்களுக்கும் ஒரு சிறிய மொழி அழிந்து வருவதாக மொழியியல் ஆய்வு அமைப்புகள் கவலையுடன் தகவல் தெரிவிக்கின்றன.

அப்படியெனில் மனிதர்கள் பேசும் மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும், இதுவரை எத்தனை அழிந்திருக்கும் என நீங்களே கற்பனை செய்து பாருங்கள்!

ஒரு மொழி அழியும்போது பல்லாண்டுகளாக அந்த மொழி பேசுவோர் கொண்டிருந்த பண்பாடும் இயற்கை அறிவியலும் மருத்துவ முறைகளும் அவை உருவாக்கிய இலக்கியங்களும் சேர்ந்தே அழிகின்றன!

ஒரு மொழியின் அழிவு என்பது ஓர் இனத்தின் அழிவு என்பதை நாம் உணர வேண்டும். உயிர் காக்கும் தாய்ப்பால் போன்றது இனம் காக்கும் தாய்மொழி என்பதை இளம் தலைமுறைக்கு நாம் உணர்த்த வேண்டும்.

- கட்டுரையாளர்:எழுத்தாளர், இயக்குநர்; தொடர்புக்கு: s.raajakumaran@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x