Published : 21 Feb 2023 06:24 AM
Last Updated : 21 Feb 2023 06:24 AM
சென்னைத் தமிழ் அல்லது மெட்ராஸ் பாஷை என்று சொன்னவுடன் அது ஏதோ தமிழ் மொழியைக் கொச்சைப்படுத்துவது, மொழியின் அருமை புரியாமல் சாதாரண மக்கள் பேசுவது என்கிற பிம்பமே பரவலாக இருந்துவருகிறது. அப்படிப்பட்ட பிம்பத்தைக் கொண்டிருந்தவர்கள், லூஸ் மோகன், சோ, மனோரமா, தேங்காய் சீனிவாசன் போன்றோர் திரைப்படங்களில் பேசிய சென்னைத் தமிழை மட்டுமே அறிந்தவர்களாக இருக்கலாம்.
தமிழின் வட்டார வழக்குகள் என்று இலக்கியரீதியாகப் பேசப்படும்போதுகூட, சென்னைத் தமிழ் நீண்ட காலமாக இலக்கிய உலகத்துக்குள் முழுமையாகப் புழங்காமல், அப்படியே புழங்கினாலும் மதிக்கப்படாமலேயே இருந்து வந்தது. சென்னைத் தமிழ் குறித்த ஓர் அசூயை மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரிடம் இருப்பதே இதற்குக் காரணம்.
உண்மையிலேயே சென்னைத் தமிழ் கொச்சையானதா? பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் ஆட்சிசெலுத்திய, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்ந்த ஒரு ஊரின் மொழியில், அயல் மொழிகள் தாக்கம் செலுத்துவது இயல்பு. அதே நேரம் தன் இயல்பை இழக்காமல், மற்ற மொழிகளை உள்வாங்கிக்கொண்டு மட்டுமே சென்னைத் தமிழ் உயிர்ப்புடன் இருந்துவந்திருப்பதுதான் ஆச்சரியம்.
தொல்காப்பியரைச் சுட்டிக்காட்டி தொ.பரமசிவன் கூறுவதன்படி மொழியைப் பண்டிதர்கள் உருவாக்கு வதில்லை. சாதாரண மக்களே தங்கள் பேச்சு வழியாக மொழிக்கு உருவம் கொடுக்கிறார்கள், வாழ வைக்கிறார்கள். பண்டிதர்கள் அதற்கு இலக்கண முறைகளையும் செம்மைப்படுத்துதலையும் செய்கிறார்கள்.
அந்த வகையில், சென்னைத் தமிழ், பழந்தமிழ்ச் சொற்கள் பலவற்றை இன்றைக்கும்கூட ஒலித்துவருகிறது. அந்தச் சொற்களின் மூலத்தைத் தேடிச் செல்லும்போது இதை உணர்ந்துகொள்ளலாம்.
சில எடுத்துக்காட்டுச் சொற்கள்:
l வூட்டாண்ட - வீட்டின் அண்டை
l இட்டுகினு வா- அழைத்துக்கொண்டுவருதல்
l செமயா இருக்குபா – செம்மையாக இருக்கிறது
l மெய்யாலுமே – மெய்யாகவே, உண்மையாகவே
l அப்பாலே போ – அப்பால், தொலைவில்
l வலிச்சிகினு - வலித்தல், இழுத்தல் (வலிமை கொண்டு இழு)
l கம்முனு கெட – பேச்சைக் குறை (குரல் கம்மியது, தொண்டை கம்மியது ஆகிய சொற்களில் இருப்பதுபோல)
l இம்மா நேரமா? - இவ்வளவு நேரமா? நீண்ட நேரமா? - என்பதை மா சேர்த்துச் சொல்வது (மாநகரம், மாமன்னன் என்பதுபோல)
l இஸ்கூல்- பள்ளி (சொல்லின் முதல் எழுத்தாக ஒற்றெழுத்து வருவது தமிழ் இலக்கண வழக்கமில்லை)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT