Published : 16 Feb 2023 06:15 AM
Last Updated : 16 Feb 2023 06:15 AM
நாள் முழுவதும் மாணவர்கள் பேசிக் கொண்டு தானே இருக்கிறார்கள். முறைசாரா உரை யாடல்கள். உண்மை. ஆனால், அன்றாடப் பாடங்களுடன் இணைத்துப் பேச வைப்பது எப்படி? பாடக்கருத்துகளுடன் பேச வைப்பதற்கு சிறிய வழிகாட்டல், தூண்டல், ஊக்கம் தந்தால் போதும். ஒரு சிறிய விரல் பொம்மை போதும்.
அது குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும். நேற்று விலங்கு விரல் பொம்மைகள் கொடுத்தேன். குழந்தைகளின் விரல்களில் யானை, நாய், சிங்கம், புலி, பூனை, கரடி, குரங்கு, வரிக்குதிரை இப்படி பல விலங்குகள்.
அவர்களிடம் உள்ள விலங்குகளைப் போல் குரல் எழுப்பக் கூறினேன். விதவிமான குரல்கள். கொஞ்சம் சிரிப்பு. கலகலப்பு. வகுப்பறை காடு ஆனது. வகுப்பறை உயிர் பெற்றது. விலங்குகள் பேசும்போது விரல் ஆட வேண்டும் என்றேன். விரல் பொம்மைகள் பேசின.
வியப்பூட்டிய விரல்கள்: "நான் தான் கரடி. காட்டில் இருந்து வருகிறேன். தேன் விரும்பி சாப்பிடுவேன்", "நான்தான் புலி. காட்டை அழித்துவிட்டீர்கள். நாட்டிற்குள் வந்துவிட்டேன். உங்களைச் சாப்பிட போகின்றேன்" இப்படி வியப்பூட்டல்கள். அவர் களின் முறைசாரா பேச்சை ஊக்குவித்தேன். இது பேசுதல் திறனை உருவாக்கியது மற்றும் எழுதப்பட்ட மொழியில் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான திறனை வழங்கவும் செய்தது. குறிப் பாக மொழி குறைபாடு உடைய குழந்தைகளின் பேசுதல் திறனை அதிகரித்தது.
இருவர் இருவராக அமரக் கூறினேன். இருவர் இணைந்து தொடர்புப்படுத்தி உரையாட வேண்டும் என்றேன். சிங்கம், புலி உரையாடல் இப்படி இருந்தது.
"என்ன புலி ஆளையே காணும்?"
"கரோனா காய்ச்சல் மாதிரி இருந்தது. அதான் குகைக்குள் பதுங்கிவிட்டேன்."
"நல்ல காரியம் செய்தே." குழந்தைகள் கேட்டதை, பார்த்ததை, பெற்ற அனுபவங்களைப் பேச்சில் பயன்படுத்தினர். கற்பனைகளுக்குப் பஞ்சமில்லை.
இருவர் ஆங்கிலத்தில் உரையாடினர். குரங்கும், கரடியும்.
"Hai, Panda! How are you?"
"I am fine. "
"Where are you from?"
"I am from the forest?"
"Are you hungry?"
"No, no. Thank u."
இவர்களை பார்த்து மேலும் சிலர் ஆங்கி லத்தில் முயன்றனர். குழந்தைகள் இரு மொழி களிலும் உச்சரிப்புத் திறமை, வாக்கிய அமைப்பு ஆகியவற்றுடன் மொழியில் புலமை பெற்றிருந்தனர்.
வகுப்பறைக்குள் வனவிலங்குகள்: அறிவியல் பாடபுத்தகத்தில், வனவிலங்குகள் சரணாலயம், உயிரியல் பூங்கா தலைப்பைப் பயன்படுத்திப் பேசலாம் என்றேன். வகுப்பறையின் சத்தம் அதிகமானது. கை தட்டி எச்சரிக்கை விடுத்தேன்.
" சார்! கலந்து ஆலோசிக்கிறோம்."
நண்பர்களுடன் விவாதம் செய்தனர். ஒருவருக் கொருவர் உரையாடினர். இப்போது பேசலாம் என்றேன்.
"நான்தான் சிங்கவால் குரங்கு. களக்காடு விலங்குகள் சரணாலயத்தில் வசிக்கிறேன். எனது வால், சிங்கத்தின் வால்போல் உள்ளதால் இந்தப் பெயர். என்னுடன் புலிகளும் வசிக்கின்றன."
யானை பிளிறிப் பேசியது. "முதுமலை வன விலங்கு சரணாலயத்தில் இருந்து வருகின்றேன். அங்கு பாதுகாப்பாக உள்ளேன். நீங்க என்னைப் பார்க்க முதுமலைக் காட்டிற்கு வாங்க. காடுகளில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாதிங்க."
சிலர் கவனிக்காமல் அவர்களுக்குள் உரை யாடிக் கொண்டிருந்தனர். "இது கேட்டல் நேரம்" என கைதட்டி கவனிக்கத் தூண்டினேன். மொழித்திறன் பெறுவதில் கவனித்தல் முக்கிய பண்பு ஆகும். மொழி கற்பித்தல் அறிவியல், சமூகவியல், கணிதப்பாடங்களுடன் இணைத்துக் கற்றுக் கொடுக்கும் போது பாடப்பொருளைப் புரிந்து கொள்ள உதவும்.
ஒரு விரல் பொம்மை இத்தனையையும் செய்து விட்டது. விரல் பொம்மைகள் மொழியைப் பயிற்சிசெய்வதற்கானப் புதிய வாயப்பை உருவாக்குகிறது. வாயே திறக்காதவர்கள் கூட வாய் திறப்பார்கள். குழந்தைகள் சரியான முறையில் பேசும் மொழித் திறனைப் பெறுவார்கள். முயன்று பாருங்கள்.
கட்டுரையாளர்: தலைமையாசிரியர்,டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி, காமராசர் சாலை, மதுரை -9.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT