Published : 13 Feb 2023 06:13 AM
Last Updated : 13 Feb 2023 06:13 AM
மொழிப்பாடம் குழந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தவும், உரையாடுவதற்கும் இடமளிக்க வேண்டும். அதுவே, மொழி வளர்ச்சிக்கு உதவும். வகுப்பறையில் குழந்தைகள் பேசுவதில் உள்ள குறைகளைக் களைவதிலேயே பெரும்பாலான ஆசிரியர்கள் முனைப்பாக உள்ளார்கள்.
குழந்தைகளைத் தாரளமாகப் பேச அனுமதிப்பதில்லை. எனது வகுப்பறை குழந்தைகளுக்கானது. அங்கே அதிகம் பேசும் நபராக குழந்தைகள்தான் இருப்பார்கள். "கனவு” இதுதான் அன்றைய தலைப்பு. ஒவ்வொருவராகப் பேசக் கூறினேன்.
துரத்தும் கனவு: சார், எனக்கு இதுவரைக்கும் கனவே வந்ததில்லை. கண்ணை மூடினா, தூங்கிடுவேன். சார், தூக்கத்தில் கனவு கண்டு அலறி எழுந் திருக்கேன். அப்படி என்ன கனவு? இதுவும் குழந்தையின் குரல். எங்க அம்மா பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுச்சு. திரும்பினா யாரும் இல்லை. வேர்த்து விறுவிறுத்துப் போச்சு, வாம்மா போயிடுவோம்ன்னு முனங்கினேன். எங்கம்மா உசுப்பி தின்னீரு பூசினாங்க. "சார், ப்ரூடா" என கத்தினார்கள். இவ்வாறு நான், நீ என கனவுகளைப் பகிர்ந்து கொள்ளத் தயாரானார்கள்.
ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்ல, ஒரு மாணவி எழுந்தாள். சிரிக்கக் கூடாது. 'பி' கிளாசு பசங்க ஜாம்பி மாறி, நோட்டையும் பேனாவையும் தூக்கிப்போட்டு நம்மைக் கடிக்க வந்தாங்க என்றாள் அந்த மாணவி. எனக்கும் அதுமாதிரி கனவு வந்திருக்கு. டீச்சர் ஜாம்பி மாறி கடிக்க வந்தாங்க. நான் பள்ளிக்கூடக் கதவை மூடிக் கோவிலுக்குள் நுழைஞ்சுட்டேன் என ஆச்சரியப்படுத்தினான் இன்னொரு மாணவன்.
சார்! அந்த பொண்ணு ஜாம்பின்னவுடனே, இவனும் ஜாம்பின்னு கதை விடுறான். சாமி, பூதம் எல்லாம் இல்லை என்றது இன்னொரு குரல். சார், இருக்கு. எங்க தாத்தா பேய் அடிச்சு செத்துட்டாரு. இப்படி பல குரல்கள் ஒலித்தன. அவர்களை ஒழுங்குபடுத்தினேன்.
கனவல்ல லட்சியம்: சார்! அன்னைக்கு அவன் எழுதாம பேசிகிட்டே இருந்தான். டீச்சர் எழுதுடான்னு சத்தம்போட்டாங்க. அதான் டீச்சரை ஜாம்பி ஆக்கிட்டான் என்றான் இன்னொரு மாணவன். கரெக்ட் சார். அன்னிக்கு அந்த வகுப்பு பசங்க கூட நான் சண்டை போட்டேன். அதான், அவுங் கள ஜாம்பியா நினைச்சு கனவு கண்டேன். சரி! யாருக்காவது டாக்டர், இன்ஜினியர்ன்னு கனவு இருக்கா? என இழுத்தேன். சார் , அதெல்லாம் கனவு இல்லை. லட்சியம் என்றான் ஒருவன். வாயடைத்து நின்றேன்.
இப்படிக் குழந்தைகளைப் பேச வைப்பதன் மூலம் விவாதம், ஒப்பிட்டுப் பார்த்தல், வேறுபடுத்திப் பார்த்தல், ஆச்சர்யப்படல், நினைவுகூரல், ஊகித்தறிதல், சவால்விடல், மதிப்பீடு செய்தல் போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். பேசும் வகுப்பறையால் கவனம் செலுத்தும் திறன், மற்ற மாணவர்களின் கருத்தை மதிப்பிடும் திறமை, என்ன சொல்லப்பட்டது என்பதை ஆராய்ந்து அறியும் தன்மை, தெரியாததைத் தெரிந்து கொள்வதில் தொடர் நாட்டம் ஆகியனவற்றை குழந்தைகள் பெறுகின்றனர். வளர்த்துக் கொண்டனர். குழந்தைகளை உரையாட அனுமதியுங்கள். அதற்காக பேசும் வகுப் பறைகளை உருவாக்குவோம்.
- கட்டுரையாளர்: டாக்டர் டி. திருஞானம் தலைமையாசிரியர், தொடக்கப் பள்ளி,காமராஜர் சாலை, மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT