Published : 08 Feb 2023 06:15 AM
Last Updated : 08 Feb 2023 06:15 AM
சிவகங்கை:
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து"
என்ற வள்ளுவரின் வாக்குப்படி, எண்ணுவ தெல்லாம் உயர்வானதாகவே இருக்க வேண்டும்.
சாதகமான சூழ்நிலையில் உயர்வான எண்ணங்களை நினைப்பது பெரிய விஷயமல்ல. பாதகமான சூழ்நிலையிலும் அதே எண்ணங்களோடு இருப்பவர்கள்தான் வெற்றியை தனதாக்கிக் கொள்கிறார்கள். எண்ணமே வாழ்க்கை என்பது அனுபவ உண்மை. எண்ணங்களே செயலைத் தீர்மானிக்கின்றன.
எண்ணங்களுக்கு வலிமை உண்டு. அதனால்தான், “எண்ணம் போல் வாழ்வு" என்றும் "எதை நினைக்கிறோமோ அதுவாக ஆகிறாய்" என்பதும் இந்த பிரபஞ்ச வாழ்வில் வலிமை வாய்ந்த வார்த்தைகளாகவே கூறப்பட்டு வருகிறது.
என்னால் முடியாது என்று எண்ணும் எண்ணம் எதிர்மறை எண்ணமாக உருவாகிறது. பெரும்பாலான மனிதர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் இத்தகைய எதிர்மறை எண்ணங்களை, இத்தகைய எதிர்மறையாளர்களிடம் பழகும்போதும் நமக்கும் அத்தகைய எண்ணங்கள் நம்மை அறியாமல் புகுந்துவிடுகிறது. இதுதான் எண்ணங்களின் வலிமை ஆகும். உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன் என்ற பழமொழியின் பின்புலம் இதுதான்.
நல்லா இருக்கீங்களா என்ற கேள்வியில் எதிர்வினை பதிலை வைத்துக் கொண்டு மனிதர்களை இனங்காணலாம். “நல்லா இருக்கேன்" என்ற பதிலைத் தருபவர்கள் நேர்மறை எண்ணங்களை உடையவர்களாகவும், “ஏதோ இருக்கேன்" என்ற பதிலை அளிப்பவர்களை எதிர்மறை எண்ணங்களைக் கொண்டவர்களாகவும் அறிந்து கொள்ளலாம். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதும் இதனால்தான்.
"நீ உன்னை வலிமை வாய்ந்தவன் என்று எண்ணினால் வலிமை படைத்தவனாகவே ஆகிறாய்" என்றார் வீரத்துறவி விவேகானந்தர். மனிதனின் எண்ணம் நம்பிக்கையாக வேர்விடும்போது அசாதாரண சக்தி பெறுகிறது.
வேடிக்கை கதை: ஆரோக்கியமான உடலும், உற்சாகமும் நிறைந்த ஒருவன் வீட்டைவிட்டு வெளியே கிளம்புகிறான். அப்போது அவனுக்கு தெரியாமல், முன்பே பேசி வைத்துக் கொண்ட அவனின் நண்பர்கள் அவனை சந்திக்கிறார்கள். ஒரு நண்பன் அவன் அருகில் வந்து, “என்னடா ஒரு மாதிரியா இருக்கே" என்று கேட்கிறான்.
இதுபோலவே மற்றொரு நண்பனும், “உடம்பு சரியில்லையா, டல்லா இருக்கிற" என்கிறான். இவ்வாறு வழிநெடுகிலும் பார்க்கும் நண்பர்கள் எல்லாரும் கேட்கும் எதிர்மறை கேள்விகளால் சிக்குண்ட அவன் ஒரு கட்டத்தில் அதை உண்மையாகவே எண்ணத் தொடங்கி நோய்வாய்ப்பட்டு படுத்துவிடுகிறான்.
யார் நட்பு வேண்டும்? - இப்படியான மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கலாம். அத்தகைய குணம் கொண்ட மனிதர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். மனதின் எண்ணங்களை பலவீனமடையச் செய்யும் சக்திகளின் வலைகளை அறுத்தெறிய வேண்டும்.
அரசவையில் விகடகவியின் மூலம் மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொண்ட அரசர்கள் போல, நம் வாழ்வின் மனக்கவலைகளை மாற்றலாக்கும் மனிதர்களையே நட்புக் கரத்திற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
நம் எண்ணங்களில் அதீதமான சக்தி புதைந்து கிடக்கிறது. நாம் நல்ல எண்ணங்களை வலுப்படுத்தினால் அது மாபெரும் சக்தியாக பரிணமித்து நல்ல வழியைக் காட்டும்.
நம்முடைய வாழ்க்கையை உருவாக்கும் கருவி நம் மனதில் உதிக்கும் எண்ணங்கள்தான். நம்முடைய நிகழ்கால எண்ணங்கள் வருங்கால வாழ்வை உருவாக்குகின்றன. ஒவ்வொரு எழுத் தும் இருந்தால்தான் ஒருவார்த்தை உருவாகும். நல்ல செயல் இருந்தால் உனக்குள் நம்பிக்கை பிறக்கும். நம்பிக்கையோடு நீ நடந்தால் வெற்றி நிச்சயமாகும்.
கட்டுரையாளர்: தலைமை ஆசிரியர் அரு. நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி, சிவகங்கை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT