Published : 02 Feb 2023 06:15 AM
Last Updated : 02 Feb 2023 06:15 AM

முடிவும் முடிவுகளும்

எதிர்காலம் என்பது முடிவுகளின் கைகளில் உள்ளது. முடிவுகள் அவரவர் கைகளிலும், செயல்களிலும், சிந்தனையிலும் உள்ளது. முடிவு தான் தொடக்கம் என்பதை உணர வேண்டியது அவசியம். இரவின் முடிவு பகல். இளமையின் முடிவு முதுமை. பள்ளிக் கல்வியின் முடிவு கல்லூரி கல்வி. கல்லூரி கல்வியின் முடிவு வாழ்க்கை கல்வி.

ஒவ்வொன்றின் முடிவும் வேறொன்றின் தொடக்கம். இது ஒரு வகை முடிவு. மற்றொரு வகை அதாவது சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் வாழ்வில் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் வழங்கும்.

ஆம், அன்று அந்த ஒற்றை நாடி மனிதரிடம் ஆங்கில ஏகாதிபத்தியம் தோற்றுப் போனது. பிரிட்டிஷ்காரர்கள் சொன்னார்கள் 'காந்தி' எங்களுக்கு எதிராக துப்பாக்கியை தூக்கி இருந்தால் எங்கள் பீரங்கிகள் அவரை அழித்திருக்கும். ஆனால், அவர் கையில் எடுத்த ஆயுதமோ அஹிம்சை. அதற்கு எதிரான ஆயுதம் எங்களிடம் இல்லை. ஏன், உலகத்தில் எங்கும் எவரிடமும் இல்லை. இன்னும் உருவாக்கப்படவும் இல்லை. இதுதான் காந்தியடிகள் தன் வாழ்வில் சவாலான நேரத்தில் எடுத்த சாதுரியமான முடிவு.

மாபெரும் தலைவர்களின் முடிவு: காந்திஜியும், நேதாஜியும் நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்கள். இருவரது நோக்கமும் நாட்டின் சுதந்திரம்தான். ஆனால் அவர்கள் பாதை வேறானவை. காந்திஜியின் அகிம்சை பாதை என்றும் அவரை தேசப்பிதாவாக வாழ வைத்துள்ளது.

அதே நேரத்தில் ஆங்கிலேயர்கள் வணங்கிய, பாதுகாத்து வந்த காந்திஜியின் உயிரானது கோட்சே எடுத்த முடிவால் துப்பாக்கியிடம் பறிபோனது. ஆகவே முடிவுகள் எடுக்கும் போது கவனம் மிகவும் அவசியம். இவ்விரு தலைவர்கள் எடுத்த முடிவுகளும், முயற்சிகளும், கடந்த பாதைகளும் நமக்கெல்லாம் பாடமாகி வழிகாட்டுகின்றன.

அதேபோன்று முயலும் ஆமையும் கதை நாமெல் லாம் அறிந்த ஒன்று. முயலும் ஆமையும் கதையில், முயல் ஆமையைப்பற்றி தவறாக எண்ணி சற்று தூங்கி பின் செல்லலாம் என்று எடுத்த முடிவு தோல்வியைத் தந்தது.

தோற்றுப் போன முயல் மீண்டும் வெற்றி பெற முடிவு செய்து முயற்சியால் வெற்றி அடைந்தது. முதல் முறை வெற்றி பெற்ற ஆமை மீண்டும் வெற்றி பெற முடிவு செய்தது. ஆழ்ந்து யோசித்து வெற்றி பெற பாதைகளும் தளங்களும் முக்கியம் என்பதை உணர்ந்து போட்டிக்கான பாதையை நிலம் பாதி நீர் பாதி என முடிவு செய்து முயலை போட்டிக்கு அழைத்தது.

இதனை அறியாத முயல் நிலப் பகுதியில் வேகமாக ஓடியது. அடுத்து ஆற்றில் இறங்கி ஓட வேண்டும். இப்பொழுது முயலானது ஆற்றில் இறங்கி உயிரை விடுவதை காட்டிலும் தோல்வியே மேல் என முடிவு செய்து தோல்வியை ஒப்புக்கொண்டது.

வெற்றி தோல்விக்கான விதை: பின் இருவரும் சேர்ந்து வெற்றி பெற என்ன செய்யலாம் என்று யோசித்தன. நிலத்தில் முயலின் முதுகில் ஆமையும் நீரில் ஆமையின் முதுகில் முயலும் அமர்ந்து பயணிப்பது என முடிவு செய்தன. அந்த முடிவு இருவருக்கும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் தந்தன. ஆதலால் முடிவுகளும் முயற்சிகளும் வெற்றிக்கும் தோல்விக்கும் விதை என்பதை உணர்ந்து செயல்பட்டு வெற்றி பெற உழைப்போம். உழைப்பினால் வெற்றி பெறுவோம்.

- கட்டுரையாளர் கல்வி்யாளர் மயிலாடுதுறை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x