Published : 31 Jan 2023 06:12 AM
Last Updated : 31 Jan 2023 06:12 AM

யானை - பாகன் கையில் இருக்கும் பொம்மை

ச.பார்க்கவன்

யானை உருவத்தில் எவ்வளவு பெரியதாய் இருக்கிறது. பாகன் எவ்வளவு சிறிய ஆள். யானையின் ஒரு கால் அளவு கூட இல்லை.பாகன் கையில் இருக்கும் அங்குசத்துக்கு பயந்து பாகன் சொல்வதையெல்லாம் செய்கிறது யானை. பாகன் உண்மையிலேயே சிறந்த கெட்டிக்காரர்தான். பாவம் இந்த யானைதான் எவ்வளவு முட்டாளாய் இருக்கிறது? யானை நினைத்தால் ஒருநொடியில் அந்த பாகனை மிதித்துவிட்டுத் தப்பிவிடலாம்.

கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு யானை குறித்த யானை பாகனின் வீடியோவில்,தான் சொல்வதையெல்லாம் இந்த யானை அன்பினால்தான் செய்கிறது என்றும், தன்னைப்பிரிந்து யானையில்லை யானையைப் பிரிந்துதானோ இருப்பது கடினம் என்றும் உருக்கமாக அந்தப் பாகன் சொல்லிக் கொண்டிருந்தார்.

யானை என்பது அதிக அன்புள்ள ஒரு முட்டாள் என்றும் விளக்கம் அளித்தவாறு யானையைக் கூட்டிக்கொண்டு நகர்ந்து சென்றார் அந்தப் பாகன்.பாகன் கூட்டிச் சென்றது உணர்வுகள் நிறைந்தயானை என்று நாம் பார்ப்பதில்லை. வெறும் உருவத்தை மட்டும் மனதில் கொண்டு யானையை ஒரு பொம்மையாகத்தான் பெரும்பாலானோர் பார்க்கிறோம். இவை என்னை போன்ற யானை பிரியர்களுக்கும் நிச்சயம் வேதனையளிக்கிறது.

விலங்கின் வாழ்விடத்தில் மனிதர்கள்: பலருக்கு யானையின் வாழ்க்கைமுறை, பண்புகள்,நம் சூழலியலுக்கு யானைகள் செய்யும் பங்களிப்புபற்றி தெரிவதில்லை. இதன் விளைவே “வாழைத்தோட்டத்தைச் சூறையாடிய யானைக் கூட்டம்”, “ஊருக்குள் புகுந்து அராஜகம் செய்த காட்டு யானை”,“நெற்பயிரை நாசம் செய்த யானை” என்று யானையை இழிவுபடுத்தும் செய்திகளையும், “யானையைத் தடியால் விரட்டி விரட்டி அடிக்கும் இளைஞர்கள்”, “யானை மீது பெட்ரோல் குண்டு வீச்சு!” என்று ஏராளமான யானைகளைப் பற்றியப் புரிதலற்றச் செய்திகளையும் அவற்றுக்கு எதிராக நடக்கும் வன்முறைசெய்திகளையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மனிதர்கள் யானைகளைப் பழக்கப்படுத்தி அடிமைப்படுத்த பெருமுயற்சி செய்து, பலகட்ட பயிற்சிகள் அளித்து அதில் வெற்றியும் அடைந்துவிட்டு, யானையை முட்டாள் என்று சொல்வது நியாயமா? முதலில் உயிரினங்களை ‘புத்தியுள்ள’ அல்லது ‘முட்டாள்’ என்று வகைப்படுத்துவதே ஒரு மேலோட்டமான குறுகிய பார்வைதான்.

பல பேரழிவுகளைத் தாண்டி உயிர்வாழும் ஒவ்வொரு ஜீவனும் வரலாற்றில் வெற்றி பெற்ற உயிரினமே. யானையின் இயற்கைப் பண்புகளை குலைத்து தங்களது ஏவலுக்கு பணிவிடை செய்யும் இயந்திரமாக யானையை மாற்றிவைத்து விட்டு அதில்அன்பு இருப்பதாகவும், முட்டாள் தனம் இருப்பதாகவும் சொல்வது எவ்வளவு பெரியஏமாற்று வேலை?

யானையின் உணவு சங்கிலி: இயற்கையாகவே யானையின் செரிமானம் 40 சதவீதம் தான் இருக்கும் என்பதால் தான் உண்ட உணவில் இருக்கும் செரிக்கப்படாத விதைகளை தன்கழிவுகள் மூலம் செல்லும் இடமெல்லாம் பரப்பிக்கொண்டே செல்கிறது.

இவை பல புதிய செடிகளும்மரங்களும் உருவாக காரணமாகிறது. மேலும் யானையின் சானம் பல பூச்சிகளுக்கும் பறவை களுக்கும் உணவாகிறது. சில வண்டுகள் இந்த சாணத்தை சேமிப்பதனால் பல புழுக்கள் உயிர்வாழ ஆதாரமாக உள்ளது. எனவே யானை மூலம் ஓர் மிகப்பெரிய உணவு சங்கிலி நடைபெறுகிறது.

அப்படிப்பட்ட யானையை மனிதர்கள் காட்டிலிருந்து பிரித்து அழைத்து வந்து கோயிலுக்கு உள்ளேஅல்லது மரக் கூண்டுக்கு உள்ளே அடைத்து வைப்பது என்பது அந்த உயிரினத்தின் இயல்புக்கு புறம்பானது. யானையை காட்டில் இருந்து பிரிப்பது என்பது, மீனைத் தண்ணீரை விட்டு பிரித்து நிலத்தில் வாழவைக்க முயல்வது போன்றதொரு மடமையாகும்.

எது நம் பாரம்பரியம்? - பல நூற்றாண்டுகளாக, யானைகள் போர்,தொழில் மற்றும் பொழுதுபோக்காக பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. விழிப்புணர்வு மற்றும் சட்டத்தின் மூலமாக இந்த போக்கு குறைந்திருக்கிறது. யானைகளைத் இத்துயரத்தில் இருந்து விடுவிக்க பல விலங்குநல ஆர்வலர்களும் சூழலியலாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், இத்தகைய போராட்டங்கள் பல நேரங்களில் மதச்சம்பிரதாயம், பாரம்பரியம் என்று சொல்லி தட்டிக்கழிக்கப்படுகிறது.

இதற்கு தீர்வு காண, மக்களும், அரசாங்க ஊழியர்களும் வனவிலங்கு மற்றும் சூழலியலை காக்கும் சட்டதிட்டங்களை கடைப்பிடிக்கத் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம். மக்கள் வசிக்கும் இடங்களில் சுற்றித் திரியும் காட்டு யானைகளைப் பிடிக்கும் வனத்துறை, அவற்றின் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மனிதர்கள் செய்யும் கேடுகளால் அழிந்து வரும் இந்த பேருயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

- கட்டுரையாளர்: ஆசிரியர், இயற்பியல் துறை, எஸ்.ஆர்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சமயபுரம், திருச்சி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x