Published : 30 Jan 2023 06:15 AM
Last Updated : 30 Jan 2023 06:15 AM
நமது வாழ்க்கையின் திசை எப்போது எப்படி மாறும் என யாருக்கும் தெரியாது. மனிதனின் அடிப்படை தேவை உணவு, உடை, உறைவிடம். ஆனால் அதை விட முக்கியமானது கல்வி. இன்று அனைவருக்கும் கல்வி திட்டம் மாணவர்கள் அனைவரையும் கல்வியாளராக மாற்றுகிறது. ஆனாலும்
பள்ளியில் மாணவரின் இடைநிற்றல் என்பது இருக்கத்தான் செய்கிறது. அதற்கு என்ன காரணம், படிப்பில் ஆர்வம் இல்லை, படிப்பின் அருமை தெரியாமை, வீட்டின் வறுமை, பெரும் நோயில் ஏற்பட்ட இடைவெளி என்று பல்வேறு காரணங்கள் உண்டு.
படிப்பை பாதியில் விட்டு கூலி வேலை செய்பவர்களை கேட்டால் தான்தெரியும் படிப்பின் அருமை பெருமை.இடைநிற்றல் மாணவர்கள் பள்ளி படிப்பை ஏன் மீண்டும் தொடரக்கூடாது. ஒருவன் ஒரு வகுப்பில் ஏதோ ஒரு காரணத்தினால் பள்ளிக்கு வர இயலவில்லை. ஆனால் சில வருடம் கழித்து படிப்பின் அருமை தெரிந்து படிக்க வந்தால் அவர்கள் எப்படி படிப்பார்கள்? இக்கேள்விக்கு விடை நானே.
என் பெயர் விஜயராணி. நான் கல் உடைக்கும் தொழில் மட்டும் தெரிந்த ஒரு கிராமத்தில் பிறந்தேன். எனது பெற்றோர் நான் படிக்க எவ்வளவோ முயற்சி செய்து கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். 1 முதல் 5 வரை அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த என்னால், 6-ம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளிக்கு செல்ல பள்ளி கட்டணம் செலுத்தி படிக்க முடியவில்லை. 6-ம் வகுப்பிலேயே கல்வியை இடைநிறுத்தி மில் வேலைக்கு சேர்த்துவிட்டார்கள். அன்று குழந்தை தொழிலாளர் சட்டம் வெறும் ஏட்டளவிலேயே இருந்தது.
இன்றும் என்னால் மறக்க முடியாது. மிகப் பெரிய அறையில் 100 குழந்தைகள் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து தூங்கியது. 12 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தது. வசதிகள் இல்லாத குளியலறையில் குளிக்க இடம் பிடிக்க வரிசையில் நின்று காலை 6 மணிக்கு செல்ல வேண்டிய வேலைக்கு அதிகாலை 3 மணிக்கே எழுந்து வரிசையில் நின்றது.
தற்போது உள்ளது போல பெற்றோரை எளிதில் தொடர்பு கொள்ள முடியாத சூழல். 100 பேர் கூட இருந்தாலும் எப்பொழுதும் கண்களில் கண்ணீர் ததும்பி இருக்கும். இவை எல்லாம் எனது இளமை பருவத்தில் நடந்த என்றுமே அழிக்க முடியாத காலச்சுவடுகள். வருடத்திற்கு ஒரு முறை தீபாவளிக்கு மட்டும்தான் வீட்டுக்கு அனுப்புவார்கள்.
அந்த நேரத்தில் என் அப்பா மகளே இனிமேல் நீ வேலைக்கு செல்ல வேண்டாம் எங்க கூடவே இரும்மா. நான் இன்னும் 50 கல் சேர்த்து உடைத்து சம்பாதித்து உன்னை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன் என்று கூறி, பள்ளியில் மீண்டும் என்னை 6-ம் வகுப்பில் சேர்த்தார். சில மாதங்களில் நன்றாக பயின்று பள்ளியில் சிறப்பான மாணவி என்று பெயர் வாங்கினேன். படிப்பு மட்டும் அல்ல மற்ற எல்லா துறைகளிலும் நான் முதலில் வர வேண்டும் என்று முயற்சி செய்தேன்.
இதற்கு முதல் காரணமாக இருந்தவர் லிட்டில் அறக்கட்டளை நிறுவனர் பர்வதவர்தினி. கல்லூரி படிப்பு படிக்க நாகமலை, கனி தட்டெழுத்து பயிற்சி பள்ளி முதல்வர் கருணாகரன், பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நிறுவனர் இமானுவேல் ஆகியோர் உதவினர். என் ஊரிலேயே படித்த முதல் பெண் பட்டதாரியான நான் தற்போது பல்லோட்டி பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். இன்றளவும் நல்வழி காட்டி என்னை வழிநடத்தி செல்லுபவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நீண்ட நாட்கள் உயிர்வாழ உதவும் நெல்லிக்கனி போல் நீ கற்கும் கல்வி உனது தலைமுறைகளை வாழவைக்கும். உங்களின் குழந்தைப்பருவத்திலேயே பள்ளிக் கல்வியை உணர்ந்து கல்வியை கற்க வேண்டும்.
நாளைய சமுதாயத்தில் நீ மிகப்பெரிய ஆலமரமாக திகழ இன்று நீ படிக்கும் ஒவ்வொரு வகுப்பும் உனதுதடம் பதிக்கும் வேர் ஆகும். விதைக்கப்படும் விதைகள் எல்லாம் முளைப்பது இல்லை. முட்டிமோதி முயற்சித்த விதை மட்டுமே முளைக்கும். இன்று நீ விதைக்கப்பட்ட விதை, நாளை நீ முளைத்து விருட்சமாக வளர வாழ்த்துக்கள்.
- கட்டுரையாளர் கணித ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment