Published : 06 Jan 2023 06:12 AM
Last Updated : 06 Jan 2023 06:12 AM

ஆசிரியர் செய்யாததைச் செய்த மழலையர்

அ.கிரேஸி மேரி

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர் - குறள்.

குழந்தைகள் நம்முடன் இருக்கும்போது நம் உலகம் பரவசமாகிப் போகும். காலை எட்டு மணியளவில் பறவைகள் இரை தேடிச் செல்வதுபோல் மழலைகள் பள்ளி நோக்கி விரைகின்றனர். காலையில் பெற்றோர் எழுப்பப் போராடி, குளிப்பதற்குக் கெஞ்சி, சீருடை அணிய‌ சிணுங்கி...வீட்டை‌ இரண்டாக்குவார்கள்.

காலை உணவு அம்மா ஊட்டி விட இரண்டு வாய்‌ வாங்கி, மதிய உணவுடன் பேருந்தை‌ நோக்கி‌ விரைவது ஒரு‌ நாளல்ல தினம் தினம் தொடரும் சாகசம். வழக்கம்போல் மழலைகள் இருவர்‌, மூவராகத் தங்கள் நண்பர்களோடு பேசி சிரித்துப் பேருந்திலிருந்து இறங்கி, வரிசையில் நடந்து வருகிறார்கள் வகுப்பை நோக்கி. நகர்ந்தது தோளில் புத்தகப்பை, கையில் உணவு, அருகில் நண்பர் என பேசிக் கொண்டே வரிசை நகர்ந்தது.

தரை தளத்தில் மழலையர்களுக்கான வகுப்பறைகள் இருப்பதால், மற்றவர்கள் செல்ல தனிவழி பிரிக்கப்பட்டது. இடையில் வண்ண வண்ண கூம்புகள் வைக்கப்பட்டன. வரிசையில் செல்லும்போது பாதம் மோதி, ஒரு வண்ணக் கூம்பு கீழே விழுந்தது. வண்ணக் கூம்பு சாய்ந்ததால், தடுமாறுவார்களே என ஆசிரிய மனம் விரைந்தது.

வரிசையில் சென்ற பலரும் அதைக் கவனித்தும், கண்டுகொள்ளாமல் சென்றனர். சிலர் நினைத்தனர் செயலாக்கவில்லை. அதை எடுத்து வைக்க நினைத்த சில கணங்களில் வரிசையில் வந்த ஒரு குழந்தை, முந்தி அடித்துக் கொண்டு, ஓடி வந்து அக்கூம்பை எடுத்து வைத்தார்.

அத்தனைப் பெரிய நிகழ்வை நிகழ்த்திய குழந்தையின் பிஞ்சுக் கரங்கள் எதுவுமே நிகழாதது போல் இரு கை கூப்பி வணக்கம் செலுத்தி, வரிசையில் நகர்ந்தார். என் மனம் நெகிழ்ச்சியால் நிறைந்தது.

"தானாய் முளைத்த செடி என்கிறார்கள்

யாரோ வீசிய

விதையிலிருந்து தானே ?" கல்யாண்ஜியின் வைர வரிகள் நினைவுக்கு வந்தது.

உண்மைதானே, விதைகளை வீசி எறிவோம். விருட்சமாவது நிச்சயம்.

- கட்டுரையாளர்: ஆசிரியர், எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி , திருச்சிராப்பள்ளி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x