Published : 05 Jan 2023 06:15 AM
Last Updated : 05 Jan 2023 06:15 AM
கலைத் திருவிழா குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு பள்ளியும் குழந்தைகளைத் தயார்படுத்திய விதம் வியப்பளிக்கிறது. ஆசிரியர்கள் தங்களிடம் பொதிந்துள்ள கலைத் திறமையை வெளிப்படுத்திக் குழந்தைகளைப் பாட,ஆட, நடிக்க வைத்தார்கள். இன்னும் சில இடங்களில் குழந்தைகள் ஆசிரியர்களாகவே மாறி சக குழந்தைகளை இசைக்க வைத்தார்கள். ஒவ்வொருவரும் தனித்து இயங்கவில்லை. குழுவாக இணைந்து செயல்பட்டனர்.
ஆசிரியர்கள் குழந்தைகளை ரசித்தனர். குழந்தைகள் ஆசிரியர்களை வியந்து ரசித்தனர். குழந்தைகள் ஆசிரியர்களின் கரம்பிடித்து பயணிக்கவில்லை. ஆசிரியர்கள் குழந்தைகளின் தோள்களில் கரம்போட்டு நண்பர்களைப் போல் பயணித்தார்கள். வகுப்பறை ஆசிரியர்களும், குழந்தைகளும் விரும்பும் இடமாக மாறி காட்சியளித்தது.
கலைத் திருவிழா போட்டிக்குத் தயார் ஆவது முதல் போட்டி முடியும் வரை பள்ளிக்கூடம் உற்சாகத்தின் உறைவிடமாக இருந்தது. படிப்பில் ஆர்வம் இல்லாதவர்கள்கூட ஆர்வமாகப் பள்ளிக்கு வருகை புரிந்தனர். வகுபறையில் பேசாதவன்கூட பேசினான். கடைசிபெஞ்சும் கரைந்து போனது.
எல்லா இருக்கை களும் ஒரேமாதிரி காட்சியளித்தன. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் பங்க ளிப்பைத் தந்தனர். வகுப்பறைகள் உரையாடல்களங்களாகவும், பகிர்தலின் களமாகவும் இருந்தது. தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு கற்றுத் தந்தனர். தெரியாதவர்கள் தெரிந்தவர்களைத் தேடிச் சென்று கற்றுக் கொண்டனர்.
எதார்த்தத்தில் வகுப்பறைகள் இப்படி இல்லை. அவை இறுக்கமானவை. ஆசிரியர்கள் குழந்தைகள் இடையே இணக்கம் இல்லை. பகிர்தல் இல்லை. உரையாடல்கள் இல்லை. கற்றல் ஒருவழிப் பாதையாக இருக்கிறது. குழந்தைகள் தேர்வு, மதிப்பெண் என்ற வரையறைக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர். ஆசிரியர்கள் தேர்ச்சி,தேர்வு முடிவுகளை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுகின்றனர். மாணவர்கள் கனவுகள்அற்றவர்களாக, பிறரின் கனவுகளைச் சுமப்பவர் களாகத் திகழ்கின்றனர்.
கலைகளின் வழி உண்மையான கற்றலை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்பதை கலைத்திருவிழா உணர்த்தியுள்ளது. குழந்தைகளிடம் பல கலை அனுபவங்களை உருவாக்குவதன் மூலம் உண்மையான கனவுகளை எளிதாகவும் சக்திவாய்ந்ததாகவும் தூண்டலாம். நடைமுறையில்,ஒவ்வொரு பாடத்திற்கும் கலை பரிசோதனைக் கூறுகளை உருக்கலாம்.
அறிவியல், கணிதம், வரலாறு, சமூக அறிவியல் போன்ற பெரிய கருத்துக்களுடன் குழந்தைகளின் உணர்ச்சிப்பூர்வமான சுயத்தை அர்த்தத்துடன் இணைக்க உதவும் வகையில் ஆசிரியர்கள் கற்பித்தலை வடிவமைக்க வேண்டும்.ஊடகம் வேறுபடலாம். அது கலையின் வடிவில்இருக்க வேண்டும். ஓவியம், நாடகம், வீடியோதயாரித்தல், புகைப்படக் கட்டுரைகள், கதை சொல்லல், கவிதைகள், இசையமைத்தல், தெருக்கூத்து,வில்லுப்பாட்டு போன்ற பல கலைகளின் வழியாக கற்றல் கற்பித்தல் நடைபெறுதல் வேண்டும்.
கற்பித்தல் முறை கலைகளின் வழி அமையும் போது, குழந்தைகள் ஊக்கமடைந்து, அனுபவித்துக் கற்றுக் கொள்வார்கள். அதன் வழி அறிவியல், கணிதம் என பாடங்கள் மீது பெரிய கனவுகளை விதைக்க முடியும்.
கலைத் திருவிழாவினால் ஏற்பட்ட தாக்கத்தை தக்கவைத்துக் கொள்வோம். கலைகளை படிப்பில் இருந்து திசைதிருப்பலாகப் பார்க்காமல். கலைகளை கற்பித்தலுடன் ஒருங்கிணைத்து வகுப்பறையை மகிழ்ச்சியானதாக மாற்றுவோம். தேர்ச்சியை மட்டும் கணக்கில் கொள்ளாமல், உண்மையான கற்றலுக்கு கலைகளை இணைத்து கற்பிப்போம்.
- கட்டுரையாளர் தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT