Published : 03 Jan 2023 06:15 AM
Last Updated : 03 Jan 2023 06:15 AM

விழுதலும் வீழ்தலும் வெற்றியே

முழுமதி மணியன்

பத்து மாத குழந்தை எழுந்து நிற்கவும் நடக்கவும் முயற்சி செய்கிறது. ஒவ்வொரு முறையும் தடுமாறி கீழே விழுகிறது. அழுது கொண்டே மீண்டும் எழுகிறது. இப்படியே விழுவதும் அழுவதும் பின் எழுவதுமாக இரண்டு மாதம் செல்கிறது. பின்னர் விழுந்த குழந்தையின் அழுகை காணாமல் போகும்.

விழுந்தவுடன் அதே வேகத்தில் எழுந்து நிற்கவும், நடக்கவும், ஓடவும் செய்யும். இன்னும் இரண்டு மாதம் சென்றால் விழுந்த குழந்தை தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு உடனே எழுந்து கொள்ளும். இப்படி விழுந்தும் எழுந்தும் விந்தைகள் புரியும் குழந்தைகளின் செயல்களை கவனித்தாலே பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்வின் பிரச்சினைகளும் தீர்வுகளும் புரியும்.

வாழ்வின் பல பரிமாணங்களும் குழந்தையை கவனித்தால் நன்கு புரியும். எழுந்து, நின்று, நடப்பதற்குள் குழந்தையானது எத்தனை முறை விழுகிறது. ஆனால் ஒருமுறைகூட சோர்ந்து போவதில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதை பார்க்கலாம். நடந்து நடந்து பயிற்சி மேற்கொள்ளும் முயற்சியும் பயிற்சியுமே வெற்றி என்பதை நமக்கு இறைவன் குழந்தையின் மூலம் நேரடியாக காட்டுகிறார். விழுவது எழுவதற்கே என்பதை அறிவுறுத்துகிறார். வாழ்வில் தோல்வியால் வீழ்வது என்பதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

தோல்வி என்பது தூய உரம்: தோல்வி என்பது துயரம் அல்ல. அது தூய உரம் என்பதாக எடுத்துக் கொள்ளுங்கள். உரம் என்பது வலுவூட்டுவதற்கான ஒரு ஊக்கம். ஒரு போட்டித் தேர்வினை கடுமையாக பயிற்சி மேற்கொண்டு முழு கவனத்தையும் செலுத்தி சிந்தனையை ஒருமுகப்படுத்தி முதல் முறையிலேயே வெற்றி பெறுபவருக்கும், பலமுறை தோற்று, விழுந்து, அழுது பின் வீறு கொண்டு எழுந்து வெற்றி பெறுபவருக்கும் நிறைய வேறுபாடு உண்டு.

முதல் முறையிலேயே வெற்றி பெற்றவர்கள் பின்னர் ஏதேனும் ஒரு நிலையில் தோற்க நேரிட்டால் அதனை தாங்கிக் கொள்ளவோ, எதிர்கொள்ளவோ இயலாமல் மிகவும் உடைந்து போவர்.தோல்வியின் வேகம் அவர்களை அதிகம் பாதிக்கும். நிலைகுலையச் செய்யும். போராடுவதற்கு பதிலாக பயந்து ஓட முற்படுவர். ஆனால், தோல்விகளுக்கு பின் அது தந்த உரங்களையும் வலிகளையும் பெற்று வெற்றி பெற்றவர்களை தோல்வி நெருங்கவும் பயப்படும். தோல்வியை கையாளும் திறன் அவர்களிடம் கூடுதலாகவே இருக்கும். தோல்வியைக் கண்டு பயம் கொள் ளவோ, பின் வாங்கவோ மாட்டார்கள். பயின்றும் முயன்றும் பெற்ற வெற்றியை விட விழுந்தும் விழுந்தும் பெற்ற வெற்றியானது வலிமையானது.

வெற்றியின் தத்துவம்: நம்மை உருவாக்குவதும் திருவாக்குவதும் சூழ்நிலைகளே. அப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு கைதியாக இல்லாது, சூழ்நிலைகளின் அரசனாக வாழ்வதுதான் வெற்றியின் தத்துவம். கூட்டை உடைத்து வெளிவந்ததால்தான் வண்ணத்துப்பூச்சியால் உலகத்தை சுற்றிவர முடிந்தது. தேனை ருசிக்கவும் முடிந்தது. மாணவர்களே என்னால் முடியாது, தெரியாது, எனக்கு வராது என்ற சொற்களையும் சிந்தனையையும் உடைத்துக் கொண்டு வெளியில் வாருங்கள். உங்கள் கையில் இருக்கும் விலைமதிப்பில்லா சொத்துக்களை பாருங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் நேரம் அதுதான் எதிர்கால முதலீடு. நீங்கள் படிக்கும் புத்தகங்கள், வகுப்பறை, பள்ளிக்கூடம், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள் என்ற விலைமதிப்பில்லா சொத்துக்களை முறையாகப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் விலைமதிப்பு மிக்க, மாண்புமிக்க மனிதனாக வர முடியும் நம்பிக்கையை தன்னம்பிக்கையாக, அடக்கத்தை தன்னடக்கமாக, கட்டுப்பாட்டை, சுய கட்டுப்பாடாக மாற்றி அனைத்தையும் நமக்குள் கொண்டுவரும்போது விழுவதும் வீழ்வதும் வெற்றியே. வெற்றி பெற உழைப்போம். உழைப்பினால் வெற்றி காண்போம்.

- கட்டுரையாளர் கல்வியாளர் மயிலாடுதுறை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x