Published : 02 Jan 2023 06:11 AM
Last Updated : 02 Jan 2023 06:11 AM

மகாராஷ்டிரா அரசின் தமிழ் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சூழலியலாளர் கோவை சதாசிவத்தின் கதை

கும்மாயம் கும்மாயம் கதை

திருப்பூர்

திருப்பூர் வீரபாண்டியில் வசிப்பவர் சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம் (61). சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு களப் பணிகளையும், அவை தொடர்பான பல்வேறு புத்தகங்களையும் எழுதுபவர். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘சில்லுக்கோடு’ புத்தகத்தில் இடம்பெற்ற ‘கும்மாயம் கும்மாயம்’உரையாடல் கதை, மகாராஷ்டிரா மாநில அரசின் தமிழ் குழந்தைகளுக்கான 7-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து கோவை சதாசிவம் கூறியதாவது:

தமிழர்களின் மரபு விளையாட்டுகளும், அதில் உள்ள சுற்றுச்சூழல் அக்கறை மற்றும் பல்லுயிர்பெருக்கம் உள்ளிட்டவைகள் கொண்ட 25 உரையாடல் கதைகள்கொண்ட புத்தகம்தான் சில்லுக்கோடு. ‘கும்மாயம்- கும்மாயம்’ என்பது கொங்கு வட்டார வழக்கில் உள்ள வார்த்தை.

கோவை சதாசிவம்

பருப்பு கடைய பயன்படுத்தும் மத்து, வரகு அரிசியும், அவரை பருப்பும் கொண்டு தயாரிக்கப்படும் கலவை சோறு இவை இரண்டுக்கும் கும்மாயம் என்று பெயர். ஒரு பெண் குழந்தையும், அம்மாவும் பிசைந்த ஒரு கவளச் சோற்றை, குழந்தைக்கு ‘கும்மாயம், கும்மாயம்’ என்று அழைத்து அந்த உணவை ஊட்டுவதுதான் கதை. நன்கு கடைந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவை உப்பு, காரம் மற்றும் சோற்றின் பதம் உள்ளிட்டவைகளை தாய்தான் முதலில் சரிபார்ப்பார். அதன்பின், அண்ணனுக்கு ஒரு வாய் தருவாள். தொடர்ந்து நிலாவுக்கு ஒரு வாய் என்று சோற்றை வானை நோக்கி வீசுவாள். குழந்தை ஆச்சரியத்துடன் பார்க்கும் தருணத்தில், அந்த சோறு மேலே சென்று கீழே விழும். அதனை எறும்புகள் உள்ளிட்டவை உண்டு மகிழும். அருகில் நிற்கும் நாய்க்கு ஒரு வாய் தருவாள். அதேபோல் குழந்தை சாப்பிட்டு முடித்ததும், அந்த பாத்திரத்தை கழுவி வீட்டின் மேற்கூரையில் ஊற்றுவாள். அதனைகாக்கைகள் உண்டு களியும்.

இப்படி ஒரு கவளச்சோற்றின் வாயிலாக, பல உயிர்கள் பசி ஆறுவதாக கதை முடிந்திருக்கும். குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பலரும் அலைபேசியை காண்பித்து குழந்தைகளுக்கு சோறூட்டுகிறார்கள். ஆனால், அதைவிட அவர்கள் உரையாடலுடன் ஊட்டும்போது, அந்த உணவும், குழந்தையும், கதையும் இந்த மண்ணில் தொடர்ந்து மீட்டெடுக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x