Published : 23 Dec 2022 06:15 AM
Last Updated : 23 Dec 2022 06:15 AM

கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள 4, 5 வகுப்பு மாணவர்களுக்கு இணைப்புப் பாடப் பயிற்சி நூல் அறிமுகம்

சோ .இராமு

ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படித்துவரும் மாணவ மாணவிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இவர்கள் அரும்பு, மொட்டு, மலர் என மூன்று நிலையில் பிரிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கும் பாடநூலுடன் பயிற்சி நூலும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள பயிற்சி நூல் போலவே இல்லம் தேடி கல்வி தன்னார் வலர்களுக்கும் இதையொட்டியே பயிற்சி கட்டகம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு கற்றல் வலு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது சிறப்பானதாகும்.

கற்றல் இடைவெளி: கரோனாவால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்காக தற்போது நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பில் படித்து வரும் மாணவர்களில் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை கை தூக்கி விடும் முயற்சியாக பள்ளிக்கல்வித்துறை ஏற்பாட்டில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) இவர்களுக்கு சிறப்பாக வண்ணமயமான முறையில் இணைப்புப் பாடப் பயிற்சி நூல் (Bridge Course Book) தயாரித்துள்ளது. இப்புத்தகம் மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது.

இணைப்புப் பாட பயிற்சி நூல்: தமிழ் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங் களுக்கு இணைப்புப் பாட பயிற்சி நூல் வழங்கப்பட்டுள்ளது. 84 பக்கங்கள் கொண்ட தமிழ் பாட பயிற்சி நூலில், ஆறு தலைப்புகளின் கீழ். உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் அறிவோம். அ கர வரிசை முதல் ஊ கார வரிசை அறிவோம் ஆகிய பாடங்கள் இடம் பெற்றுள்ளது.

68 பக்கங்கள் கொண்ட ஆங்கில பயிற்சி புத்தகத்தில் ஆறு தலைப்புகள் இடம் பெற்றுள்ளது. இவற்றின் கீழ், Fun with letters A- Z., Play with sounds vowels (a.e,i,o,u), Reading time ஆகிய பாடங்கள் இடம் பெற்றுள்ளது.

நேர்த்தியான வண்ணத்தில்... 76 பக்கங்கள் கொண்ட கணக்கு இணைப்பு பாட பயிற்சி நூலில் ஆறு தலைப்புகள் இடம் பெற்றுள்ளது. இவற்றின் கீழ், எண்களை அறிவேன், ஒப்பிட்டு அறிவேன், கூட்டலை அறிவேன் (1-99வரை), வடிவங்களை அறிவேன் ஆகிய பாடங்கள் இடம் பெற்றுள்ளது. மூன்று பயிற்சி நூல்களும் மிக தரமாக நேர்த்தியாக வண்ணமயமாக எழுதுவதற்கும் பயிற்சி எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

வழக்கமாக கொடுக்கப்பட்டுள்ள பாட நூலுடன் சேர்த்து 4, 5 வகுப்புகளில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் மூன்று பயிற்சி நூலிலும் முறையாக பயிற்சி பெற்று வரும்போது அவர்கள் மொழிப்பாடம், கணக்கில் மேம்படுவதற்கு இந்தப் பயிற்சிநூல் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதன்மூலம், ஆசிரியர்களின் சிறப்பான பயிற்சி வலுவூட்டல் வாயிலாக நான்கு, ஐந்தாம் வகுப்பில் கற்றலில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் கை தூக்கி விடப்படுவது உறுதி. - கட்டுரையாளர் ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அய்யம்பாளையம் ஆத்தூர் ஒன்றியம் திண்டுக்கல் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x