Published : 16 Dec 2022 06:12 AM
Last Updated : 16 Dec 2022 06:12 AM
30 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் தோளில் மாட்டிக்கொள்ளும் துணிப் பையை உபயோகித்தனர். அதை தபால் பை என்றும் அழைப்பர். கடிதங்கள் எடுத்து வரும் அஞ்சல்காரரும் அதுபோன்ற பையைத்தான் வைத்திருந்தார்.
அது நீண்ட பட்டைகளைக் கொண்டிருக்கும். கீழே பாட நூல்கள் வைத்துக் கொள்ள வசதியாக தைக்கப்பட்டிருக்கும். இது பல வண்ண துணிகளால் அழகுபடுத்தப்பட்டிருக்கும். விலைக்கேற்றார் போல் பைகள் இருந்தது.
திருமண தாம்பூல பையையும், மஞ்சப்பை எனும் பருத்தி பையையும்கூட புத்தகப் பையாக மாற்றி பள்ளிக்கு எடுத்து செல்வதுண்டு.
இப்போது உபயோகிக்கும் முதுகுப்பை ரேயான், நைலான் துணிகளால் தைக்கப்படுகிறது. அது மழைக்கு நனையாமல் இருக்கும் என்றும், அதிக நாள் உபயோகப்படுத்தலாம் என்றும் விற்கப்படுகிறது. தனியாக வாட்டர் கேன் வைக்கலாம், இன்னும் சொல்லப் போனால் செல்போன் சார்ஜ் போடும் வசதியும், செல்போன் ஹெட்செட்டுக்கான வசதியும் இந்தக் காலப் பைகளில் இருக்கிறது.
புத்தகம்: கொடுத்தாலும் குறையாத பாட புத்தகங்கள் 1980-களில் இரண்டாம் வகுப்பு படிக்கும் அண்ணன், அக்காபாடப் புத்தகமே அடுத்து வரும் தம்பி தங்கைகளின் 2-ம் வகுப்புபுத்தகமாகும். அக்காவும் அண்ணனும்தாம் படிக்கும் புத்தகங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்.
பெற்றோரும் குழந்தைகள் கிழிக்காமல் படிக்க, அடிக்கடி புத்தகத்திற்கு அட்டை போட்டு தருவார்கள். பாடபுத்தகங்கள் அடுத்த வருடம் எனக்கு வேண்டும் தாருங்கள் என்றுமூத்த மாணவர்களுடன் முன்கூட்டியே சொல்லிவைத்து வாங்கிக் கொள்வார்கள். ஆண்டுத் தேர்வு முடித்தவுடன் அவர்கள் வீட்டிற்கு புத்தகம் கேட்டு நடையாய் நடந்தவர்களும் உண்டு.
பள்ளியில் தரும் பாடநூல்கள் காலதாமதமாக கிடைக்கும். அதனால் முன்வகுப்பு மாணவர்களிடம் அண்ணா, அக்கா என்று அன்பாக அழைத்து, உங்கள் பாடப் புத்தகங்களை யாருக்கும் தரக்கூடாது, எனக்குத்தான் தர வேண்டும் என வாக்குறுதிகூட பெற்றுக் கொள்வார்கள். முன் வகுப்பு பயிலும் மாணவர்கள் அவர்கள் புத்தகங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய வினாக்களுக்கான பதிலை அடிக்கோடிட்டு குறித்து வைத்திருப்பார்கள். அடுத்து வரும் மாணவர்கள் அதனை வாங்கி படிக்கும்போது விடையைப் படிப்பது மிக சுலபமாக இருக்கும்.
நோட்ஸ், கைடு (கோனார், வெற்றி)என்று சொல்லப்படும் தனி பாடநூல்களை பெரும்பாலான மாணவர்களால் வாங்க இயலாது. அப்படி வாங்கிப் படித்த மாணவர்கள் அதனை அடுத்தவரிடம் பாதி விலைக்கு விற்றது அந்தக் காலம். ஒவ்வொரு வீட்டிலும் அண்ணன் அக்காக்களின் உடைகளை தம்பி தங்கைகள் அணிவது போன்று பாடப் புத்தகங்களையும் அவர்கள் படித்து முடித்ததும், அடுத்த ஆண்டு அதே புத்தகங்களைப் படிப்பார்கள்.
அந்தக் காலத்தில் வெறும் பாடவாரியான புத்தகங்கள் மட்டுமே பள்ளிகளில் இலவசமாக கிடைக்கும். அதிலும் ஒரு சில பாடத்திற்கு நூல்கள் பள்ளியில் கிடைக்காது. அதைமட்டும் வெளியில் வாங்கி வாருங்கள் என்பர் ஆசிரியர்கள். குறிப்பாக அக்காலத்தில் அனைத்து கிராமங்களிலும் அரசு பள்ளிகள் மட்டுமே இருந்தன. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் (வரலாறு குடிமையியல், புவியியல்) என்ற 5 தலைப்பின் கீழ் மட்டுமே பாடங்கள் இருந்தன. பழைய பாடப் புத்தகங்கள் கிடைத்துவிட்டால் அந்த வகுப்பையே வென்றதாக ஒரு மகிழ்ச்சி. அதிலும் நன்கு படிக்கும் மாணவர்களின் பாடநூல்கள் கிடைக்க வேண்டும் என்று தவமிருப்பார்கள்.
அன்று வறுமையின் பிடியிலும் வாழ்க்கை பாடம் இனித்தது. இன்று வளமையின் பிடியில் வழுக்கி விழுகிறார்கள் மாணவர்கள். அன்று பள்ளிதிறக்கும் முன்னரே அனைத்து மாணவர்களுக்கும் பழைய புத்தகங்கள் கிடைத்தன. பாடத்திற்கு ஏற்ப நோட்டுகளும், கல்வி உபகரணங்களும் கிடைத்துவிடும். இன்றைய நிலை சொல்லித்தெரிய வேண்டிய தில்லை. - கட்டுரையாளர் பயிற்சி ஆசிரியர் காஞ்சி கல்வியியல் கல்லூரி, காரப்பேட்டை, காஞ்சிபுரம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT