Published : 15 Dec 2022 06:15 AM
Last Updated : 15 Dec 2022 06:15 AM
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் செயல்படும் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளோ, அவரது சிலையோ, பாடல்களோ, கவிதைகளோ இடம்பெறவில்லை. இவற்றை ஏற்படுத்தித் தர தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் பொதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், இதர தனியார் பள்ளிகளில் பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருப்பதைக் காண முடியும். உதாரணத்திற்கு கிறிஸ்தவ பள்ளிகளாக இருந்தால் பைபிளில் வாசகங்கள் பெரும்பாலான இடங்களில் இருப்பதைக் காணலாம். அதுபோல விவேகானந்தர் பள்ளி போன்ற பள்ளிகளில் விவேகானந்தரைப் பற்றிய குறிப்புகள், அவரதுஉரைகள், அறிவுரைகள் போன்றவை இடம்பெற்றிருக்கிறது. மத அடிப்படையில் இல்லாத தனியார் பள்ளிகளில் திருக்குறள் மற்றும் "காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது" போன்ற பொதுவான பழமொழிகள் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது.
பெண் விடுதலை பாடல்கள்கூட இல்லை: அரசுப் பள்ளிகளில் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, அப்துல் கலாம், அம்பேத்கர், காமராஜர் போன்ற தேசியத் தலைவர்களின் படங்கள் தலைமை ஆசிரியர் அறையின் சுவரில் வீற்றிருப்பது வழக்கம். ஆனால், பாரதியார் பெயரைத் தாங்கியுள்ள பள்ளியில் அவரைப் பற்றிய குறிப்புகளோ, உருவச் சிலையோ, கவிதைகளோ இடம்பெறாமல் இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஆம், தமிழகத் தலைநகரான சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்தான் இந்த நிலை.
இங்கு மற்ற பள்ளிகளில் இருப்பதைபோல தலைமை ஆசிரியர் அறையில் மட்டும் காந்தி, நேரு, காமராஜர் போன்ற தலைவர்கள் படங்களுடன் பாரதியார் உருவப் படமும் இடம்பெற்றுள்ளது. மற்றபடி பாரதியார் மார்பளவு சிலையோ, அவரது கவிதை வரிகளோ, வாழ்க்கைக் குறிப்போ இல்லை. பெண் விடுதலைக்காக பாரதியார் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் குறிப்பிட்ட சில பாடல்கள், கவிதைகளாவது அரசுமகளிர் மேல்நிலைப் பள்ளி என்பதால் இடம்பெற செய்திருக்க வேண்டாமா? இதுவரை இல்லாவிட்டாலும் இனிமேலாவது இடம்பெற வேண்டும் என்று கல்வியாளர்களும், பாரதியார் மீது அதீத பற்று கொண்டவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
பெயர்ப்பலகையில்கூட பாரதிக்கு இடமில்லை: இதுகுறித்து இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவிகள் சிலர் கூறியதாவது: மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் நூற்றாண்டான 1982-ம் ஆண்டு குரோம்பேட்டையில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது.
தற்போது 1,787 மாணவிகள் பயில்கின்றனர். பாரதியாரின் பிறந்தநாள் நூற்றாண்டு நினைவாக தொடங்கப்பட்ட இப்பள்ளியில் அவரை நினைவுகூரும் வகையில் எதுவும் இடம்பெறாதது வேதனை அளிக்கிறது. பள்ளி முகப்பில் எழுதப்பட்டுள்ள பள்ளியின் பெயர்கூட, "MBN அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி" என்றுதான் உள்ளது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தின் உரிமையாளரிடம் தமிழக அரசு சார்பில் பேசி, ஒப்பந்தம் மேற்கொண்டு, ரூ.18 லட்சத்தில் அந்த இல்லத்தை நினைவு இல்லமாக புனரமைத்துள்ளனர். அத்துடன் அங்கு பாரதியாரின் மார்பளவு சிலையும்நிறுவப்பட்டுள்ளது.
அந்த நினைவில்லத்தில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படங்களும், வாழ்க்கைக் குறிப்பும், அவரதுபடைப்புகளும், சிறு நூலகமும் அமைக்கப்பட்டுள் ளது. இந்த நினைவு இல்லத்தையும், சிலையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்துவைத்தார்.
இதுபோல, குரோம்பேட்டை மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் பாரதியாரின் மார்பளவு சிலை, அவரது வாழ்க்கைக் குறிப்புகள், பெண் விடுதலைக்கான பாடல்கள், கவிதைகளை இடம்பெறச் செய்ய வேண்டும். இந்தப் பள்ளியில் மட்டுமல்லாமல் பாரதியார் பெயரில் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் அவரது வாழ்க்கைக் குறிப்புகள் உள்ளிட்டவை இடம்பெற அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT