Published : 15 Dec 2022 06:12 AM
Last Updated : 15 Dec 2022 06:12 AM
கரோனோ முடிந்து பள்ளிக்கூடம் திறந்த முதல் நாள். மாணவர்களைப் பள்ளிச் சூழலுக்குத் தயார்படுத்த வேண்டியிருந்தது. தொடர் உரையாடல்களை நடத்திக் கொண்டிருந்தேன். 9-ம் வகுப்பில் வட்டமாக அமர்ந்து கொண்டோம். "உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் எது?" என உரையாடலைத் தொடங்கினேன்.
மாணவர்களின் அனுபவம்: சுற்றுலா போனது, தாத்தா, பாட்டியுடனான அனுபவம், பிடித்த நண்பர்கள், விரும்பி சாப்பிடும் உணவு என தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர். ஒரு மாணவி மட்டும் அப்பாவை இழந்த வருத்தத்தைப் பகிர்ந்தார். பலரும் தன் வீட்டில் வாங்கிய அடி, உதையைப் பற்றி பேசியதைக் கவனிக்க முடிந்தது.
அடுத்த கேள்வியைக் கேட்டேன். "நீங்க அதிகமா அடிவாங்குன இடம் எது.. வீடா? பள்ளிக்கூடமா?"
வீடு, பள்ளிக்கூடம் ரெண்டுமே மாறி மாறி விடையாக வந்தது. எதிர்பார்க்கவே இல்லை. கடைசியில் பள்ளியை விட வீடுதான் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது.
சமீபத்தில் பள்ளி மாணவர்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது ஞாபகத்திற்கு வந்தது. ஆசிரியரை எதிர்த்து பேசுகிறார்கள். பொருட்களைப் போட்டு உடைக்கிறார் கள். அட்டூழியம் செய்கிறார்கள் என பொது சமூகம் ஆதங்கப்பட்டது. பெரும்பாலான ஆசிரியர்களும், பெற்றோர்களும் குச்சியை மீண்டும் கையில் எடுப்பது ஒன்றே வழி என்றனர்.
குச்சி எடுப்பதா தீர்வு? - யூனிசெப் அறிக்கைபடி, இந்தியாவில் சுமார் 30 வகையான வன்முறைகளை குழந்தைகளிடம் நாம் பிரயோகிக்கிறோமாம்.
உடல் ரீதியான, மன ரீதியான பல தாக்குதலுக்கு குழந்தைகள் ஆளாகிறார்கள். அடிப்பது, உதைப்பது, கிள்ளுவது, காதை திருகுவது, சூடு வைப்பது மட்டும்தானா? திட்டுவது, ஒப்பீடு செய்வது, வெளியில் அனுப்பாமல் தடை போடுவது, சரியான கவனிப்பு தராமல் இருப்பது, ஒதுக்குவது, உணவு தர மறுப்பது, கிண்டல் செய்வது, பயமுறுத்துவது, மிரட்டுவது, அவமானப்படுத்துவது என வன்முறைகள் பலவிதங்களில் நடந்து கொண்டு இருக்கின்றன.
குறிப்பாக கிராமப்புற குழந்தைகள் வீட்டில் அனுபவிக்கும் வன்முறைகள் நகர்ப்புறங்களைக் காட்டிலும் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு. பள்ளியில் சக ஆசிரியரின் வகுப்பறையில் அகிலன் என்றொரு மாணவர். சுறுசுறுப்பானவர். ஆங்கிலம் மட்டும் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் கூற, அவனது அம்மா அந்த இடத்திலேயே கன்னத்தில் மாறி மாறி அடித்தது இன்னும் நினைவில் நிற்கிறது. ஏன் அகிலனால் ஆங்கிலம் படிக்க முடியவில்லை என நிதானிக்கவோ, யோசிக்கவோ அவர்களுக்கு நேரமில்லை?
உரையாடல் இல்லை ஏன்? - ஏன் குழந்தைகளிடம் நாம் உரையாடுவதே இல்லை?
எது சரி? எது தவறு? என சுயபரிசோதனை செய்ய குழந்தைகளுக் குக் கற்றுத்தராமல், உடனடி தண்டனை கொடுப்பதில்தான் நம் கவனம் உள்ளது. நம் கோபத்தை வன்முறையாக காட்டினால், குழந்தையும் அதைதானே திருப்பிச் செய்யும்? குழந்தைகள் மீது செலுத்தும் வன்முறை நம் இயலாமையின் வெளிப்பாடு அல்லவா!? அதுகுறித்து எந்த குற்ற உணர்வும் இன்றி, வன்முறையை நியாயப்படுத்தும் போக்கு மிக மோசமானது.
நம் சிந்து வெளி நாகரிகத்தின் மிக முக்கியமான அம்சமே குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை உருவாக்கியதுதான். குழந்தைகள் பற்றி யோசித்த நாகரிகம் நம்முடையது.
குழந்தைகளின் உரிமைகள் பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் உடல், மன, உணர்வுரீதியான வன்முறைகள் பற்றியும் போதுமான அளவில் இன்னும் உரையாடல்கள் சமூகத்தில் நிகழ்த்தப்பட வில்லை.
ஒரு குழந்தைக்கு, அந்த பருவத்திற்கே உரிய மகிழ்ச்சியை தருவதைக் காட்டிலும் வேறு என்ன உயர்ந்த பரிசை நாம் தந்துவிட முடியும்? இனியும் தாமதிக்காமல், உரையாடலைத் தொடங்குவோம்! - கட்டுரையாளர் பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி விடத்தாகுளம், விருதுநகர் மாவட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment