Published : 10 Dec 2022 07:23 PM
Last Updated : 10 Dec 2022 07:23 PM
மதுரையில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த பாரதியின் பன்மொழிப் புலமை, இலக்கிய அறிவை அறிந்து, ‘பத்திரிகை உலகின் தந்தை’ எனப்படும் சுப்பிரமணிய அய்யர் அவரை சென்னைக்கு வரும்படி வேண்டினார். அதன்படி பாரதி, 1904 நவம்பர் மாதம் சென்னையில், ‘சுதேச மித்திரன்’ நாளிதழில் 25 ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.
1906-ல் கொல்கத்தா மாநாட்டில் கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தரின் பெண் சீடர் சகோதரி நிவேதிதா “உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா?” என்றதற்கு பாரதி, “பெண்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும். என் மனைவி இந்த கூட்டத்திற்கு வந்து என்ன செய்யப் போகிறாள்?” என்றார்.
“நீங்கள் உங்கள் நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறீர்கள். ஆனால், உங்கள் நாட்டிலுள்ள பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கிறீர்களே! மேலை நாடுகளில் ஆண்களுக்கு என்ன மரியாதையோ அது பெண்களுக்கும் உண்டு. இனியேனும் உங்கள் நாட்டுப் பெண்களுக்கும் சம உரிமை தாருங்கள்” என்று கேட்டுக் கொண்டார். சகோதரி நிவேதிதாவின் கருத்து பாரதியின் உள்ளத்தைத் தைத்தது. அதுமுதல் பாரதி, தன் மனைவி செல்லம்மாளையும் அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்.
முதல் கேலிச்சித்திரம் படைத்தவர்: சுப்பையா என்பதே பாரதியின் இயற்பெயர். அவரது கவிதை ஆற்றலைக் கண்ட எட்டயபுர மன்னர் 1893-ல் “பாரதி” என்ற பட்டப் பெயரை வழங்கினார். பாரதி என்ற சொல்லுக்கு ‘கலைமகளின் அருள் பெற்றவர்’ என்று பொருள். பாரதியின் முதல் கவிதை ‘தனிமை இரக்கம்’, 1904-ம் ஆண்டு மதுரை புலவர் கந்தசாமி நடத்தி வந்த ‘விவேகபானு’ என்ற இதழில் வெளிவந்தது.
1906-ம் ஆண்டு ஸ்ரீனிவாச்சாரியார் தொடங்கிய ‘இந்தியா’ வார இதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒதுங்கியிருந்தவர்களையும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதினார். இந்திய பத்திரிகை உலகில் கேலிச்சித்திரங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தி, பாமர மக்களுக்கும் அரசியல் நிலவரங்களை சேர்த்தவர், பாரதி.
1907 மே மாதம் 9-ம் தேதி பஞ்சாப் சிங்கம் நாடு கடத்தப்பட்ட போது விபின் சந்திர பாலரை வைத்து கூட்டம் நடத்தினார். வ.உ.சி.யுடன் நட்பு கொண்டிருந்தார். 1907 டிசம்பரில் சூரத்தில் நடக்க இருந்த மாநாட்டிற்கு சுதேசமித்திரன் பத்திரிகையில் விளம்பரம் செய்தார். வ.உ.சிதம்பரத்துடன் பாரதியார் அந்த மாநாட்டிற்கு சென்றார். ஆங்கிலேயரை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சென்னையில் ஜனசங்கத்தை ஏற்படுத்தினார்.
1907-ல் தான் பாரதியின் மூன்று தேசியப்பாடல்களை வி.கிருஷ்ணசாமி என்ற மிதவாத காங்கிரஸ்காரர் சிறு நூலாக கொண்டு வந்தார். இதுவே அச்சில் வெளிவந்த பாரதியின் முதல் நூலாகும். 1908-ல் பதினான்கு பாடல்களுடன் சுதேச கீதங்கள் என்று தலைப்பிட்டு பாரதி சொந்த செலவில் நூலாக கொண்டு வந்தார். “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” என்று முழங்கிய திலகரின் சுயராஜ்ய தினத்தை பாரதி சென்னையில் ஊர்வலமாக சென்று நடத்தினார். அதில் கலந்து கொண்ட வ.உ.சியையும், சுப்பிரமணிய சிவாவையும் ஆங்கிலேய அரசு கைது செய்தது.
பாரதியின் பாடல்கள் இந்திய மக்களிடையே வீரத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துவதை அறிந்த ஆங்கில அரசு அச்சம் கொண்டு, பாரதியின் பாடல்களை பாடுவதை “ராஜ துரோகம்” என்று சட்டம் கொண்டு வந்தது. இந்தியா பத்திரிக்கையில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தொடர்ந்து கட்டுரையும் கேலிசித்திரமும் வரைந்து வெளியிட்டார். பாரதியின் எழுத்துகளுக்கு முட்டுக்கட்டை போட அரசு “புதிய பத்திரிகை கட்டுப்பாடு சட்டத்தை“ 1908-ல் கொண்டு வந்தது.
சமரசமற்ற பத்திரிகையாளர்: அச்சட்டத்தின்கீழ் பத்திரிகையின் வெளியீட்டாளரான சீனிவாசனை கைது செய்து ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை கொடுத்தது ஆங்கிலேய அரசு. இந்தியா பத்திரிகை வெளிவராமல் போனது. புதுச்சேரிக்கு நண்பர்கள் அழைத்ததன் பேரில் சென்று குப்புசாமி அய்யங்கார் வீட்டில் தங்கினார். அங்கிருந்து இந்தியா பத்திரிகையை கொண்டுவர விரும்பினார்.
1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் தேதியிலிருந்து இந்தியா பத்திரிகை புதுச்சேரியில் இருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கியது. தொடர்ந்து கட்டுரை வெளியானதால் பொதுமக்களிடம் சுதந்திர உணர்வு அதிகரித்தது. வ.வே.சு. ஐயர் லண்டனில் இருந்து இந்தியா பத்திரிகைக்கான செய்தியை அனுப்பினார்.
பகவான் அரவிந்தர் என அழைக்கப்பட்ட அரவிந்த கோஷ் வெளியிட்ட கர்மயோகின் என்ற ஆங்கில பத்திரிக்கையின் கட்டுரைகளை மொழிபெயர்த்து கர்மயோகி என்ற தமிழ் பத்திரிக்கையை 1909 டிசம்பரில் கொண்டு வந்தார். அது மட்டுமல்லாது, அரவிந்தர் வங்காள மொழியில் வெளியிட்டு வந்த ”தர்மா” என்ற பத்திரிகையையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதில் இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீக சம்பந்தமான செய்திகளை வெளியிட்டார். சமஸ்கிருதத்தில் உள்ள பகவத் கீதையின் துதிப் பாடல்களுக்கு எளிய தமிழ் விளக்கம் எழுதி பாமர மக்களுக்கு வேத உபநிடதங்களை எளிதில் புரிய உதவினார்.
“சித்ராவளி” என்ற மாத இதழும், “சூர்யோதயம்” என்ற வார இதழும் பாரதியின் மேற்பார்வையில் வெளியாயின. விஜயா என்ற தமிழ் பத்திரிகையும், பாலபாரதா என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் பாரதியார் வெளியிட்டு வந்தார். பொருளாதாரப் பற்றாக்குறையால் 1910-ம் ஆண்டிற்குள் அனைத்து பத்திரிகைகளும் வெளிவருவது நின்று போயின. ஆங்கில அரசின் மறைமுகமான அடக்குமுறையால் 1910-ம்ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி இதழோடு இந்தியா பத்திரிகையும் நின்று போனது. 1913-ம் ஆண்டு ஞானபானு பத்திரிகையில் கட்டுரை எழுதி வந்தார். 1915-ல் சுதேசமித்திரன் பத்திரிகையில் புதிய பொறுப்பாளரான ரங்கசாமி அய்யர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கதை, கட்டுரை, கவிதைகளை எழுதினார்.
சென்னைக்கு வந்தபோது திருவல்லிக்கேணியில் குடியிருந்தார். 1921 ஜீலை மாதம் பார்த்தசாரதி கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது. யானையின் அருகில் மூர்ச்சையாகி கிடந்த பாரதியை அவரது நண்பர் குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார் காப்பாற்றினார். ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் இரண்டொரு நாளில் வீடு திரும்பினார். சுதேசமித்திரனில் தொடர்ந்து வேலை பார்த்தார். 1921 செப்டம்பரில் வயிற்றுக்கடுப்பு நோய் பீடிக்கப்பட்டது. மருந்துகளை சரிவர எடுத்துக் கொள்ளாததால் செப்டம்பர் 11-ல் உடல்நிலை மிகவும் மோசமானது. தனது 39-வது வயதில் 1921 செப்டம்பர் 12-ல் அதிகாலை இரண்டு மணி அளவில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். - கட்டுரையாளர்: தலைமையாசிரியர், டாக்டர் டி.திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT